Published:Updated:

காந்தி அஞ்சலி!

Mahatma Gandhi
பிரீமியம் ஸ்டோரி
News
Mahatma Gandhi

காந்தியின் கொள்கைகள் குறித்து கல்கி எழுதியது...!

காந்தி ஜயந்தி (1932 அக்டோபர் முதல் இதழில், 'என்ன எங்கே எப்போது' பகுதி)

 மகாத்மாவின் பெயரில் விகடனுக்கு ஒரு பெரிய குறை இருக்கிறது; பாரத நாட்டின் வருங்கால சந்ததிகளுக்குச் சரித்திர பாடம் கற்பதை அவர் மிகவும் கஷ்டமாக்கி வருகிறார். மகாத்மா சம்பந்தமாக ஒருவர் எத்தனை தேதிகளைத்தான் ஞாபகம் வைத்துக் கொள்கிறது? சமீபத்தில் செப்டம்பர் மாதம் 20-ம் தேதியையும், 26-ம் தேதியையும் முக்கியமாகச் செய்திருக்கிறார்.

இதற்கு முன் எத்தனையோ தேதிகள். முதல் தடவை சிறை சென்ற தேதி, இரண்டாம் முறை, மூன்றாம் முறை, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது தடவைகள் சிறை சென்ற தேதிகள்; சத்தியாக்கிரஹம் ஆரம்பித்த தேதி, தண்டி யாத்திரை தொடங்கிய தேதி, இவைகளில் ஏதாவது ஞாபகம் இருக்கிறதா? ஒன்றும் இல்லை. போனால் போகட்டும். மகாத்மா பிறந்த தேதியையாவது எல்லோரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 2-ம் தேதி, கதர் உடுத்தி, தீண்டாமை ஒழித்து, மகாத்மா விரைவில் சுகம் அடையுமாறு ஆண்டவனைத் துதியுங்கள்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

('ஆட்டுப் பாலும் நிலக் கடலையும்' என்ற தலைப்பில் அதே இதழில் 'கல்கி' எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்)

காந்தி மகான் என்ன செய்தாலும் அதைப் போலவே செய்வது என்று உறுதி கொண்டவர்கள் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். 'மகாத்மா பட்டினி கிடந்து உயிர் விடுகிறேன்' என்று விரதம் தொடங்கினார். உடனே 'நாங்களும் பட்டினி கிடந்து உயிர் விடுகிறோம்' என்று பலர் ஆரம்பித்தார்கள். இது மகாத்மாவிடம் இவர்கள் கொண்டுள்ள அபார பக்தியைக் காட்டுகிறது. ஆனால் உசித உசிதா உசிதம் அறியும் சக்தியை வெளிப்படுத்தவில்லை. முன்னம், மகாத்மா இனி சட்டை போட மாட்டேன். முழங்கால் வரைக்கும் அரை ஆடை மட்டும்தான் தரிப்பேன் என்று விரதம் கொண்டார். உடனே நாட்டில் இன்னும் பலர் முழத்துண்டு கரிக்கத் தொடங்கி, தங்கள் திருத்தொந்தியின் அருமை பெருமைகளை உலகிற்குக் காட்டத் தொடங்கினார்கள். . . . .

'மகாத்மா ஆட்டுப்பால் சாப்பிடுகிறார்; ஆகையால் நாமும் ஆட்டுப்பால் சாப்பிடுவோம்’ என்று நினைப்பவர்கள், அவர் ஏன் ஆட்டுப்பால் சாப்பிடுகிறார் என்பதை விசாரிப்பது இல்லை. இந்த விவரத்தை மகாத்மா தமது சுய சரிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 'பாலே சாப்பிடுவதில்லை’ என்று மகாத்மா ஒரு சமயம் பிரதிக்ஞை செய்தார். பின்னர் ஒரு சமயம் அவர் நோய்வாய்ப்பட்டு, உயிர் வாழ்வதற்குப் பால் அருந்துவது அவசியம் என்று ஏற்பட்டது. பிரதிக்ஞை எடுத்துக் கொண்ட போது மாட்டுப் பாலே மகாத்மாவின் மனதில் இருந்தபடியால், ஆட்டுப் பால் சாப்பிடத் தொடங்கினார். இது பிரதிக்ஞையின் எழுத்தைக் காப்பாற்றியதாகுமேயன்றிக் கருத்தைக் காப்பாற்றிய தாகாதென்பது அடிகளின் அபிப்பிராயம். சுமார் பதினைந்து வருஷத்துக்கு முன் மகாத்மாவின் கீர்த்தி முதன் முதலாகத் தமிழ் நாட்டில் பரவிய போது, அவர் நிலக்கடலை சாப்பிடுகிறார் என்ற விபரமும் கூடப் பரவிற்று. உடனே நிலக் கடலை ஒரு நாகரீகச் சிற்றுண்டி ஆகிவிட்டது. அந்தக் காலத்தில் நிலக் கடலையின் விலை அதிகமாயிருந்தது. மேற்சொன்ன காரணத்தினால் அதன் விலை இன்னும் அதிகமாகிவிட்டது. 'காந்தியின் உணவு' என்று அது பெயர் பெற்றது. (அந்தக் காலத்தில், காந்தியை 'கந்தி' என்று அழுத்தமாய் உச்சரித்தார்கள், ! ...')

'சொல்வதைப் போல் செய்; செய்வதைப் போல் செய்யாதே' என்பது முதுமொழி. இந்தச் சந்தர்ப்பத்துக்கு அது மிகவும் பொருத்தமாயிருக்கிறது. 'மகாத்மா பட்டினி கிடக்கிறார்: நாமும் கிடப்போம்' என்று தீர்மானித்து, அதை விளம்பரப்படுத்துவதனால் மகாத்மாவுக்கு உண்மையில் சங்கடம் ஏற்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை. அதற்குப் பதிலாக மகாத்மா எந்த நோக்கத்தின் பொருட்டு உயிர்விடத் துனிந்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும் பொருட்டு, அவர் நம்மை என்ன செய்யச் சொல்கிறார் என்று கவனித்து அதற்குரிய முயற்சி எடுத்தால்தான் உசிதமாகும்.

ஒற்றுமை முயற்சி (1932- நவம்பர் முதல் இதழ்:'என்ன- எங்கே- எப்போது'- பகுதி)

மகாத்மாவின் உபவாசத்தின் பிற்பலகைத் தேசமெங்கும் ஒற்றுமை முயற்சிகள் நடத்தி வருவதைக் குறித்து எல்லோரும் சந்தோஷமடைவார்கள். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக டில்லியில் நவம்பர் மாதம் 3-ந் தேதி மகாநாடு கூடப்போகிறது. இதுகாறும் தனித்தொகுதியை முதலைப் பிடியாய்ப் பிடித்திருந்த முஸ்லிம் தலைவர்கள் கூட ஒருவாறு கலப்புத் தொகுதியை ஒப்புக் கொள்ள இணங்கி வருவதாகக் காண்கிறது. தேசத்தின் பல பாகங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களும் கலப்புத் தொகுதியை ஆதரித்தும், வகுப்புத் தீர்ப்பை எதிர்த்தும் தீர்மானம் செய்துவருகிறார்கள்.

(1932 டிசம்பர் முதல் இதழ் சின்னஞ் சிறு தமாஷ் பகுதி)

இந்தியாவில் பிரிட்டிஷாரின் சிறந்த போலீஸ்காரர் மகாத்மா காந்திதான்' - லண்டனில் மிஸ்டர் மாட்டர்ஸ். மகாத்மாவுக்குப் போலீஸ் உடை தரித்துப் பார்த்தால் எப்படி இருக்குமென்று விகடனுக்குச் சந்தேகம் உதித்தது. போட்டுப் பார்த்ததில், பொருத்தமாய்த்தான் காண்கிறது. மகாத்மா போலீஸ்காரர்  அந்தத் தடியை எப்படி உபயோகப்படுத்துவார்? அந்தச் சந்தேகம் தான் தீரவில்லை.

அன்னலின்  அமுத வாக்கு

 கடவுளின் விதியைக் கண்டு பிடித்துப் பின்பற்றுவதற்கு மின்சார சக்தியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் கடுமையான உழைப்புத் தேவை. அந்த விதியை ஒரே சொல்லினால் குறிப்பிட்டு விடலாம். அது பிரம்மச்சாரியம். பிரம்மசரியத்தில் பயிற்சி பெறுவதற்கு நேரடியான ஒரே வழி ராமநாமம்தான். நம்முடைய நோக்களுக்குக்கெல்லாம் நிச்சயமான பரிகாரம் ராமநாமம் தான் என்று நான் உறுதியாகப் பிரகடனம் செய்வேன்.

(27.10.1968 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)