கட்டுரைகள்
Published:Updated:

‘‘இதனால்தான் மதுரைக் கரும்பு எப்போதும் சிறப்பு!” - நிபுணர் சொல்லும் காரணம்

கரும்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கரும்பு

சங்க இலக்கியங்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் கரும்பின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் முக்கியத்துவத்தாலேயே பொங்கல் பண்டிகையில் கரும்பு இடம்பெற்றது.

பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது, கரும்பு அறுவடைக்குத் தயாராகிவிட்டது. உலக அளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் நான்காவது இடத்திலும் உள்ளன. ஆனால் இவையெல்லாம், சர்க்கரைத் தயாரிப்புக்காக விளைவிக்கப்படும் ஆலைக் கரும்புகள். அதாவது, வெள்ளைக் கரும்புகள்.

இவை தவிர, மக்கள் சாப்பிடுவதற்கு என்றே விளைவிக்கப்படுவது செங்கரும்பு என்றழைக்கப்படும் பொங்கல் கரும்பு. இந்தக் கரும்பை, தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்க பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்போடு செங்கரும்பையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் கரும்புக் கொள்முதல் பணி தொடங்கியிருக்கிறது.

Iடி.ரஜுலா
Iடி.ரஜுலா

இந்த ஆண்டு பொங்கல் கரும்பு உற்பத்தியில் மதுரை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மதுரையில் ஆலைக்குச் செல்லும் கரும்புகள் சுமார் 1,600 ஏக்கரிலும், பொங்கல் கரும்புகள் 960 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பொங்கல் கரும்புகள் அறுவடைக்குத் தயாராகிவிட்டன. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 21,000 கரும்புகளும், அதிகபட்சம் 23,000 கரும்புகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மதுரையில் மேலூர், கொட்டாம்பட்டி, மதுரைக் கிழக்கு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் கரும்புகள் பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதில், மதுரைக் கிழக்கு மற்றும் மேலூரில் உள்ள சில பகுதிகளில் மட்டும்தான் பெரியாற்றுப் பாசன வாய்க்கால் நீர் கிடைக்கும். மற்ற பகுதிகளிலெல்லாம் கிணற்றுப்பாசனம் வழியாகவே கரும்பு விவசாயம் நடக்கிறது. கடந்த ஆண்டு மழை நன்றாகப் பொழிந்ததால், எந்தச் சிக்கலுமின்றி இப்போது கரும்புகள் அறுவடைக்குத் தயார்.

‘‘இதனால்தான் மதுரைக்
கரும்பு எப்போதும் சிறப்பு!” -
நிபுணர் சொல்லும்
காரணம்

கரும்புக் கொள்முதலில் முதற்கட்டமாக, மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருக்கும் கரும்புகளின் எண்ணிக்கை மற்றும் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 2.23 கோடி பொங்கல் கரும்புகள் அறுவடைக்குத் தயாராக உள்ளதென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில், மதுரை மாவட்டத்திற்கு 9,33,000 கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி முதலிய மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து கரும்பு கொள்முதல் செய்ய அந்தந்த மாவட்டக் கூட்டுறவுத் துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கம் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி டி.ரஜுலாவிடம் பேசியபோது, “மதுரை மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் கரும்புகளைத் தாக்கும் பூஞ்சை நோய்கள் தாக்குவதில்லை; பூச்சிகளும் அண்டுவதில்லை. மதுரை மண்வாகு கரும்பு விளைவதற்கு ஏற்றது என்பதால் இங்கு கரும்புகளின் வளர்ச்சி எப்போதும் நன்றாக இருக்கும். விவசாயிகளும் கரும்புச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்றார்.

‘‘இதனால்தான் மதுரைக்
கரும்பு எப்போதும் சிறப்பு!” -
நிபுணர் சொல்லும்
காரணம்

சங்க இலக்கியங்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் கரும்பின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் முக்கியத்துவத்தாலேயே பொங்கல் பண்டிகையில் கரும்பு இடம்பெற்றது. கரும்பில் உடலுக்கு அத்தியாவசியமான இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்றவை உள்ளன. நீர்வறட்சி, நீரிழப்பு, உடல் சூடு, மலச்சிக்கலைத் தவிர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும். பற்கள், எலும்புகளை வலுவாக்கும். இது, உடனடி ஆற்றல் தரும் இயற்கை டானிக்கும்கூட.