அரசியல்
Published:Updated:

வதந்திகள்... சந்திப்புகள்... கிலியில் கழகங்கள்!

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் முடிந்த கையோடு, சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் முதல்வர் பழனிசாமி.

`புயலுக்குப் பின் அமைதி’ என்பார்கள். ஆனால், அது அரசியலுக்குப் பொருந்தாதுபோல. தேர்தல் புயல் ஓய்ந்துவிட்டாலும், ரிசல்ட் பற்றிய யூகங்களும் வதந்திகளும் சூறாவளியாக ஓயாமல் வீசிக்கொண்டிருக்கின்றன. ‘யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும்... யார் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள்?’ என்ற யூகக் கணக்குகள், கொரோனா பீதியையும் தாண்டிய கிலியை இரு கழகங்களிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையை, ‘ரகசியத் தகவல்’ என போலி கருத்துக்கணிப்புகளை்ச் சமூக வலைதளங்களில் கிளப்பிவிடுகிறார்கள். அதையொட்டிய வதந்திகளும், கட்சித் தலைமைகளுடன் முக்கியப் புள்ளிகளின் திடீர் சந்திப்புகளும் தமிழக அரசியலில் அனலைக் கூட்டியிருக்கின்றன.

வதந்திகள்... சந்திப்புகள்... கிலியில் கழகங்கள்!

ஏன் கிளம்பியது வதந்தி?

வாக்குப்பதிவு நாளன்று மதியம் 2 மணியளவில், கேரளாவிலும் புதுச்சேரியிலும் 50 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன. தமிழகத்தில் வாக்குப்பதிவு அப்போதுதான் 40 சதவிகிதத்தை மெல்ல நெருங்கியது. அந்தச் சமயத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்ததால் கவலையடைந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஐபேக் அலுவலகத்துக்கு நேரில் சென்று அங்கிருந்தபடி நிலைமையைக் கண்காணித்தார். மறுபக்கம், ‘‘ஆட்சிக்கு எதிரான அலையென்று ஏதுமில்லை. மீண்டும் கழக ஆட்சிதான் மலரப்போகிறது’’ என்று அ.தி.மு.க தரப்பில் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இறுதியாக, தமிழகத்தில் 72.81 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், அதையொட்டியும் வதந்திகள் புறப்பட்டன. ‘‘இந்தத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள். `ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் இலவசம்’ என்று அ.தி.மு.க அறிவித்திருப்பது பெண்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறைந்தது 130 இடங்களைப் பிடித்து அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என்று அ.தி.மு.க தரப்பில் கம்பு சுற்றினர். கடுப்பான தி.மு.க தரப்பு, ‘‘குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகையை முதலில் அறிவித்தது நாங்கள்தான். இதையே கொஞ்சம் மாற்றி, 1,500 ரூபாய் தருவதாக அ.தி.மு.க தரப்பில் சொன்னதைப் பெண்கள் நம்பவில்லை. தி.மு.க-வை நம்பியதால்தான் பெண்கள் திரளாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த முறை 175 தொகுதிகளைக் கைப்பற்றிவிடுவோம்’’ என்றார்கள்.

இவர்களின் இந்த வதந்தி அரசியல், கள நிலவரத்தையும் சூடேற்றி பல சந்திப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. இரு கட்சிகளிலும் வேட்பாளர்களை நேரில் அழைத்து அந்தந்தக் கட்சித் தலைமைகள் நிலவரத்தைக் கேட்டுவருகின்றன. கிரீன்வேஸ் சாலையிலும், அண்ணா அறிவாலயத்திலும் நடைபெறும் இந்தச் சந்திப்புகளில் அப்படி என்னதான் பேசப்படுகின்றன? தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தோம்...

தெற்கு தேறாது... உதறலில் உதயகுமார்!

தேர்தல் முடிந்த கையோடு, சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் முதல்வர் பழனிசாமி. ஏப்ரல் 8-ம் தேதி, கிழக்கு மண்டலம் சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத், வடக்கு மண்டலம் சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். முதல்வரிடம், ‘‘வடக்கு மற்றும் கிழக்கில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு நன்கு சென்று சேர்ந்திருக்கிறது. அந்தச் சமூக மக்களின் வாக்குகள் முழுமையாக நமக்குக் கிடைத்துள்ளன’’ என்று இரு அமைச்சர்களும் உற்சாகத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். இருவரையும் அமைதியாகப் பார்த்த எடப்பாடி, ‘‘நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்னைப் பார்க்க வந்திருந்தார். தெற்கில் அ.தி.மு.க-வுக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதாக ரொம்பவே வருத்தப்பட்டார். என் கவலையும் தெற்கு பற்றித்தான்’’ என்று அமைச்சர்களிடம் கரகரத்திருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் முதல்வரைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘வடக்கைவிட தெற்கிலுள்ள அமைச்சர்களைக் குறிவைத்துத்தான் தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இதனால், எங்களுக்குப் பொறுப்பளிக்கப்பட்ட மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்த முடியாமல் எங்கள் தொகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டோம். அண்ணன் ஓ.பி.எஸ்கூட மிகுந்த மனக்கவலையில் இருக்கிறார். தெற்கில் நாம் தேறுவது சிரமம்தான்’’ என்று உதறலுடன் கூறியிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி, ‘‘எனக்குச் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்திருக்கின்றன. பார்க்கலாம்... பன்னீர் அண்ணன் வீட்டு துக்கத்துக்குச் செல்லவிருக்கிறேன். மற்றதை சென்னையில் பேசிக்கொள்ளலாம்’’ என்று அனுப்பிவைத்திருக்கிறார்.

படையெடுத்த அமைச்சர்கள்... அழுத்திச் சொன்ன முதல்வர்!

பன்னீரின் மாமியார் மறைவுக்கு துக்கம் விசாரிக்க உத்தமபாளையம் சென்றுவிட்டு, ஏப்ரல் 10-ம் தேதி காலை சென்னை வந்தார் எடப்பாடி பழனிசாமி. சிறிது நேரத்திலேயே அமைச்சர்களை உடனடியாக சென்னைக்கு வரச் சொல்லி கிரீன்வேஸ் சாலையிலிருந்து உத்தரவு பறந்தது. அருகிலுள்ள அமைச்சர்கள் 10-ம் தேதி மாலையே சென்னை வந்துவிட, மற்றவர்கள் 11-ம் தேதி காலை வந்துசேர்ந்தார்கள். அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்தார் எடப்பாடி. அப்போது அமைச்சர்கள் சிலர்,

‘‘தி.மு.க-வைச் சமாளிப்பதைவிட அ.ம.மு.க வேட்பாளர்களைச் சமாளிப்பதுதான் தெற்கில் எங்களுக்குப் பெரும்பாடாகப் போய்விட்டது’’ என்று வேதனைப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அ.தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘யார் என்ன பேசினாலும், அதைத் தடுத்து அவர்களைவிட அதிகமாகப் பேசுவது முதல்வரின் வாடிக்கை. இந்த முறை வித்தியாசமாக அமைச்சர்கள் சொன்ன கருத்துகளையெல்லாம் நிராகரிக்காமல் உள்வாங்கிக்கொண்டார். அமைச்சர்களிடம், ‘சென்னை, டெல்டா மண்டலங்களில் ஒருசில தொகுதிகள் தவிர்த்து மற்றவை தி.மு.க வசம் சென்றுவிடும். மேற்கு, வடக்கு மண்டலங்களில் நாம் கணிசமான தொகுதிகளை அள்ளிவிடுவோம். தெற்கு மண்டலம் மட்டுமே நமக்குப் பிரச்னையாக இருக்கிறது. தெற்கிலுள்ள சுமார் 70 தொகுதிகளில் பாதியளவு நமக்குக் கிடைத்தால்கூட, நாம் ஆட்சியமைத்துவிடலாம். தி.மு.க-வும் தெற்கில் சொல்லிக்கொள்ளும்படி செல்வாக்கோடு இல்லை. வடக்கில் வன்னியர்கள் ஆதரவு நமக்குக் கிடைத்திருப்பதால், தி.மு.க-வுக்கு அந்தச் சமூக வாக்குகள் பெருவாரியாக விழுந்திருக்க வாய்ப்பில்லை. நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள்’ என்றவர் கடைசியாக, ‘வெற்றியோ தோல்வியோ நமக்குக் கட்சிதான் முக்கியம்’ என்று, ‘கட்சிக்கு’க் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த அழுத்தம்தான் கட்சிக்குள் பலரையும் கிலியடையச் செய்திருக்கிறது.

தோல்வி பயம் கண்டிருக்கும் பல அ.தி.மு.க வேட்பாளர்கள், பா.ஜ.க-வுக்கும் அ.ம.மு.க-வுக்கும் தாவும் மனநிலையில் இருக்கிறார்கள். ‘மணி’யான முன்னாள் அமைச்சர், அளவில்லாமல் உளறிக் கொட்டும் அமைச்சர், ‘தொன்மையான’வற்றைக் காக்கும் அமைச்சர், மதுரை ஜில்லாவின் எம்.எல்.ஏ., அதிக சொத்துக் கணக்கைக் காட்டிய முன்னாள் அமைச்சர், சமீபத்தில் பிரிக்கப்பட்ட மாவட்ட அமைச்சர் என சுமார் 18 பேர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அது பற்றிய தகவல் தெரிந்ததால்தான், அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில், இந்தச் சந்திப்புகளை எடப்பாடி அரங்கேற்றிவருகிறார். தன்னைச் சந்திப்பவர்களிடமெல்லாம், ‘130 தொகுதிகளுக்குக் குறையாமல் ஜெயித்து ஆட்சியமைத்துவிடுவோம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார். மே 2, ரிசல்டுக்கு முன்னதாகத் தன் கட்டுப்பாட்டை மீறி கட்சி கலகலத்துப் போய்விடக் கூடாது என்கிற பயம்தான் இதற்குக் காரணம்’’ என்றார்கள்.

வதந்திகள்... சந்திப்புகள்... கிலியில் கழகங்கள்!

சுற்றிய வதந்தி... விசாரித்த ஸ்டாலின்!

தி.மு.க தரப்பிலும் வதந்திகளுக்குப் பஞ்சமில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூக வகுப்பாளரான சுனில் டீமிலிருந்து கசிந்திருக்கும் ஒரு தகவல்தான் தி.மு.க-வினரை கிலியடையச் செய்தது. அதில், அ.தி.மு.க கூட்டணி 113 தொகுதிகளையும், தி.மு.க கூட்டணி 80 தொகுதிகளையும் பெறும் என்றும், மீதமுள்ள 41 தொகுதிகள் இழுபறிநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலவரம் கலவரத்தை ஏற்படுத்தவே, உஷாரான ஐபேக் தரப்பு தங்கள் பங்குக்கு ஒரு தகவலைச் சுற்ற விட்டனர். அதில், தி.மு.க கூட்டணி 195 தொகுதிகளையும், அ.தி.மு.க கூட்டணி 31 தொகுதிகளையும், அ.ம.மு.க ஒரு தொகுதியையும் கைப்பற்றும் என்றும், மீதமுள்ள ஏழு தொகுதிகளில் இழுபறிநிலை நீடிப்பதாகவும் தகவலைப் பரப்பினர்.

தேர்தல் முடிந்தவுடன், தனது மருத்துவப் பரிசோதனைகளுக்காக, வெளிநாடு பறக்க முடிவெடுத்திருந்தார் ஸ்டாலின். இதற்காக துபாய் செல்வதற்குப் பயண ஏற்பாடுகளை மருமகன் சபரீசன் கவனித்துவந்தார். ஆனால், கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, தன்னுடைய பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டார் ஸ்டாலின். ‘ஒருவேளை சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டால், ரிசல்ட் சமயத்தில் சென்னை திரும்ப முடியாமல் போக வாய்ப்புண்டு. தி.மு.க வெற்றிபெற்றால்கூட முதல்வராகப் பதவியேற்க முடியாமல் போய்விடும்’ என்ற அச்சமே காரணம். இந்தச் சூழலில்தான், இரு தரப்பு வாட்ஸ்அப் வதந்திக் கலவரம் உச்சமடைந்தது. கொரோனா அச்சத்தையும் மீறி, தி.மு.க-வினரைச் சந்தித்து கூல் செய்ய முடிவுசெய்தார் ஸ்டாலின்.

அதன்படி, மாவட்டவாரியாக வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் சந்திப்புக்குத் தேதி குறிக்கப்பட்டது. கொரோனா பாதுகாப்பு காரணமாக, ‘யாரும் வந்து தங்கக் கூடாது. சந்திப்பு முடிந்தவுடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவிட வேண்டும்’ என்ற கண்டிப்பான உத்தரவுடன் வரவழைக்கப்பட்டார்கள். ஸ்டாலின் கையில் ஐபேக் எடுத்திருந்த ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் இருந்தன.

வேட்பாளர்களிடம் முதலில், அவர்களின் தொகுதிக்குத் தலைமையிலிருந்து பிரித்தளிக்கப் பட்ட ஸ்வீட் பாக்ஸ்கள் குறித்துக் கேட்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தி.மு.க வேட்பாளருக்குக் கொடுக்கப்பட்ட மூன்று ஸ்வீட் பாக்ஸ்களைத் திறக்கவே இல்லையாம். ‘‘தொகுதிக்குள்ள எதிர்த்தரப்புல 500 லட்டுகள் கொடுத்திருக்காங்க. ‘நாம 200-வது கொடுத்தாத்தான் நல்லா இருக்கும். குறைந்தபட்சம் தலைமை கொடுத்த ஸ்வீட் பாக்ஸையாவது திறங்க’னு நான் சொல்லிப் பார்த்தேன். ஆனால், வேட்பாளர் தரப்பு கண்டுக்கவே இல்லைங்க தலைவரே’’ என்று மாவட்ட நிர்வாகி ஒருவர் போட்டுக்கொடுக்க, கண் சிவந்துவிட்டாராம் ஸ்டாலின். இதுபோக, ஒவ்வொரு தொகுதிக்கும் அளிக்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்களில் பல பலகாரங்கள் காணாமல் போயிருக்கின்றன. அம்பாசமுத்திரத்திலும் சிவகங்கையிலும் இந்தக் களவாடலைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். இது குறித்தும் வேட்பாளர்களிடம் விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.

இறுதியாக, ‘‘வடக்கு மண்டலம் உட்பட, அனைத்துப் பகுதிகளும் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கொங்கு ஏரியாவிலும் இந்த முறை கணிசமான தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம் என்று தேர்தலுக்குப் பிறகு ‘ஐபேக்’ எடுத்த கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. 190 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றியடையப் போகிறோம். முடிவுகள் வெளியாகும் வரை நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்பிக்கொண்டு குழப்பத்தை யாரும் ஏற்படுத்தாதீர்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சொல்வார்... ‘‘வலைக்குள்ளே இருக்குறது என்ன ஏதுனு தெரியாமலேயே, ‘அது திமிங்கலம்தான். அதோட தோல் ஒரு லட்சம் போகும், பல்லு இரண்டு லட்சம் போகும்’னு சொல்றானுங்க’’ என்பார். அதுபோல, வாக்குப்பெட்டிக்குள் ஒளிந்திருக்கும் மக்களின் தீர்ப்பு என்னவென்பது தெரியாமலேயே கிளப்பிவிடப்படும் வதந்திகள் மற்றும் கட்டுக்கதைகளால் இரு கழகங்களும் குழப்பத்தில் உள்ளன. கொரோனா பீதியையும் மீறி கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு இதனால் அவர்கள் ஆளாகிவிட்டனர்.