Published:Updated:

கீர்த்தி ஆசாத் முதல் சாய்னா நெஹ்வால் வரை... அரசியலில் நுழைந்த விளையாட்டு வீரர்கள்!

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்கெனவே விளையாட்டுத் துறையில் இருப்பதால், புதிதாகத் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இந்தியாவில் கல்வி, விளையாட்டு, சினிமா போன்ற பல்வேறு துறைகளில் கோலோச்சுபவர்கள் தங்கள் எதிர்கால நலனுக்காக அரசியலுக்குள் நுழைகின்றனர். விளையாட்டில் வெற்றிகரமான வாழ்கைக்குப் பிறகு, அரசியலில் நுழைந்த விளையாட்டு வீரர்களின் நீண்ட பட்டியல் உள்ளது. கடந்த கால வரலாற்றில், அரசியலில் குதித்த விளையாட்டு வீரர்கள் பற்றிய தொகுப்பு இது.
`அம்மா ஆன்மா' என்பது பொய் ஆடிட்டர் சொன்னதே மெய்! பன்னீர் தர்மயுத்தம் 3-ம் ஆண்டு நினைவு தினம்!
1
கீர்த்தி ஆசாத்

கீர்த்தி ஆசாத்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத் அரசியலுக்கு வந்தது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியே இல்லை. அவரது தந்தை பகவத் ஜா ஆசாத், பீகார் மாநிலத்தின் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தவர். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த கீர்த்தி, அரசியலில் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், அவர் பி.ஜே.பியில் இணைந்து, 1993-ம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, பீகார் நாடாளுமன்றத் தொகுதியான தார்பங்காவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக, 2009 முதல் 2019 வரை பதவியில் இருந்தார். 2015-ம் ஆண்டு, அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயை நேரடியாகத் தாக்கியதால் பி.ஜே.பியிலிருந்து நீக்கப்பட்டார் கீர்த்தி. 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த கீர்த்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2
நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

விளையாட்டுக்குப் பின் அரசியல் களத்தில் கால் பதித்தவர்களின் பட்டியலில், கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவிற்குத் தனி இடம் உண்டு. 1983-ம் ஆண்டில் இந்தியக் கிரிக்கெட் அணியில் நுழைந்த சித்து, 51 டெஸ்ட் போட்டிகளிலும், 136 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். `சிக்ஸர் சித்து' என அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஓய்வுக்குப் பின் கமென்டரியிலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியிலும் அவரைப் பார்க்க முடிந்தது.

2004-ல் அரசியலில் களம் இறங்கிய சித்து, பி.ஜே.பியில் இணைந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்து, அதே ஆண்டு ஜூலையில் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததோடு, கட்சியிலிருந்தும் விலகினார். 2017-ல் தன்னைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்ட அவர், பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வென்று சுற்றுலா மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் பஞ்சாப் அமைச்சரவையிலிருந்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.

3
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், பிகானேரைச் சேர்ந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். மேலும், கர்னல் ரத்தோர் தனது வாழ்நாளில் மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2013-ம் ஆண்டு, ரத்தோர் இந்திய ராணுவத்திலிருந்து தன்னார்வ ஓய்வுபெற்று பி.ஜே.பியில் சேர்ந்தார். ஜெய்ப்பூர் மக்களவைத் தேர்தலில் வென்று, 2014-ம் ஆண்டு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராகவும், 2017-ம் ஆண்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2018-ம் ஆண்டு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

4
கம்பீர்

கௌதம் கம்பீர்

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் கம்பீர், கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பி.ஜே.பியில் இணைந்து அரசியலில் அறிமுகமானார். கிழக்கு தில்லி தொகுதியிலிருந்து 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராப் போட்டியிட்ட அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

5
முகமது அசாருதீன்

முகமது அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். 2009-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2019-ம் ஆண்டு, அவர் தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

6
ஜோதிர்மோய் சிக்தர்

ஜோதிர்மோய் சிக்தர்

தடகளத்தில் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்தவர் ஜோதிர்மோய் சிக்தர். 1998-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் ஜோதிர்மோய். 2004-ம் ஆண்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போது திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார்.

ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன?
7
சாய்னா நெஹ்வால் ( ANI )

சாய்னா நெஹ்வால்

பேட்மின்டன் விளையாட்டின் ஸ்டாராக் ஜொலிக்கும் சாய்னா நெஹ்வால், சமீபத்தில் பி.ஜே.பியில் சேர்ந்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் நம்பர் ஒன் பதக்கம் வென்றதோடு, 24 சர்வதேசப் பதக்கங்களையும் வென்றிருக்கும் சாய்னா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். "பிரதமர் மோடி `கேலோ இந்தியா' முதலான அருமையான திட்டங்களை விளையாட்டுத் துறைக்குச் செய்து வருகிறார். அவரோடு இணைந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார் சாய்னா.

தேர்தலில் போட்டியிடுவதற்குப் பிரபலமாக இருப்பது பலம். விளையாட்டு வீரர்கள் புதிதாகத் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் கட்சிகளுக்கும் பிரபலமான இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கட்சியில் இணைவது வெளியே நல்ல பிம்பத்தைக் கொடுக்கிறது. இதுவே விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வெடுக்கும் காலத்தில் தேர்ந்தெடுக்கும் துறையாக அரசியல் இருப்பதற்குக் காரணம்.

- கௌசிகா

பின் செல்ல