Published:Updated:

`அவளது வெற்றிக்காக கஷ்டங்களைச் சுமந்த அண்ணன்!'- 'தங்க மங்கை' அனுராதா கடந்து வந்த பாதை

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

``ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம். இவ்வளவு வறுமையிலும் அனுராதா சாதித்திருக்கு என்றால், அவளின் தன்னம்பிக்கைதான் காரணம். அனுராதா, எங்க ஊருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கு" என்று பெருமையாகச் சொல்கின்றனர் அனுராதாவின் ஊர்க்காரர்கள்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா

ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவருமான அனுராதா என்பவர், 87 கிலோ உடல் எடைப் பிரிவில் கலந்துகொண்டு, ஸ்னாட்ச் முறையில் 100 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 121 கிலோவும் என மொத்தம் 221 கிலோ எடையைத் தூக்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வெளியிலிருந்தும் அவரைப் பலர் பாராட்டி வருகிறார்கள். கடந்த 2009-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அனுராதா வெங்கலப்பதக்கம் வென்றார். அடுத்த முயற்சியில், இப்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா

பதக்கம் வென்ற அனுராதா, சொந்த ஊருக்குச் செல்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்க புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அனுராதாவின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம பொதுமக்கள் எனப் பலரும் விமான நிலையத்திற்கு வருகைதந்து, தங்க மங்கை அனுராதாவுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். சால்வை மற்றும் ரோஜாப்பூ மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனுராதா, “காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்காக, எனக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பளுதூக்கும் போட்டியில், சீனியர் பிரிவில் தமிழகத்திற்குக் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் நான் வாங்கியதுதான் என்பதில் பெருமைகொள்கிறேன். விளையாட்டுப் போட்டியில் பலர் பயிற்சிபெற்றிருந்தாலும் அவர்கள் பதக்கம் வெல்ல சரியான வழிகாட்டுதல் இல்லை.

தென்மாவட்டங்களில் பளுதூக்குதல் பயிற்சிபெற வசதி ஏற்படுத்திக்கொடுத்தால், பலரும் பதக்கம் பெறலாம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தந்தை சிறுவயதில் இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரர் ஊக்கத்தினாலேயே இந்நிலையை எட்டியுள்ளேன். பெண்கள் போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு வந்தபோதும், என்மீது எனது சகோதரர் வைத்த நம்பிக்கையும், அவர் அளித்த தொடர் உத்வேகமும் என் வெற்றிக்கு வழி வகுத்தது. புதுக்கோட்டையில் பயிற்சிபெற போதிய வசதி இல்லாததால், கடந்த 2014-ல் பட்டியாலா சென்று அங்கு பயிற்சி மற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா

2015-ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 3 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை பெற்றேன். அதன்பிறகு, காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்தது. அடுத்து ஃபெடரேஷன் மற்றும் காவல்துறை மூலம் பல்வேறு உதவிகள், ஊக்கமும் கிடைத்தன. பெண்கள் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணம் பொதுவாகப் பலருக்கும் உள்ளது. அதைத் தவிர்த்து, நம்மால் முடியும் என்ற முனைப்பில் அனைவரும் முயன்று, என்னைப்போல பதக்கங்களைப் பெற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். தொடர்ந்து 2024 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று, அதன்மூலம் ஒலிம்பிக்போட்டியில் தகுதிபெற்று இந்தியாவிற்குப் பதக்கம்வெல்வதுதான் எனது லட்சியம்”என்றார்.

அனுராதாவை வரவேற்க வந்த அவரது உறவினர்கள், ”அனுராதாவின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அனுராதா சின்னப்பிள்ளை. அதன்பிறகு அவங்க அம்மா ராணியும் அண்ணன் மாரிமுத்துவும் ரொம்ப கஷ்டப்பட்டு அனுராதாவை வளர்த்தார்கள். அனுராதாவின் அப்பா இறந்தபிறகு அவரது அம்மா கூலிவேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில்தான் பிள்ளைகளை வளர்த்தார். அடுத்து, அண்ணன் 12 வயதுக்கு மேல் படிக்காமல் வேலைக்குப் போனார். அம்மாவும் அண்ணனும் சம்பாதித்த பணத்தில் அனுராதாவின் பயிற்சிக்கு கட்டினார்கள். அனுராதா சின்னவயதில் இருந்து விளையாட்டில் சுட்டி. கபடி நல்லா விளையாடும். கபடி வீராங்கனையாக வருவார் என எதிர்பார்த்தோம். அதைவிட பளுதூக்குவதில் அவருக்கு ஆர்வம். எம்.எஸ்சி வரை படித்த அனுராதா, பஞ்சாப் -க்கு சென்று என்.ஐ.எஸ் எனும் படிப்பை படித்தார்.

தங்கப் பதக்கத்துடன் அனுராதா
தங்கப் பதக்கத்துடன் அனுராதா

அவரின் வெற்றிக்காக அவரது அண்ணன் மாரிமுத்துவும் அம்மா ராணியும் பல கஷ்டங்களைச் சுமந்தார்கள். பெண் பிள்ளைகள் அதிகம் விளையாடக் கூடாதென்று அறிவுரை சொல்வாங்க. அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், அனுராதா விருப்பப்படி விளையாட அனுமதித்தார்கள். அடுத்த வேலை சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தாங்க. அவ்வளவு வறுமையிலும் அனுராதா சாதித்திருக்கா என்றால், அவளின் தன்னம்பிக்கைதான் காரணம். அதுதான் அனுராதா எங்க ஊருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கு” என்றார்கள் கெத்தாக.

அனுராதா வெற்றிக்காகச் சுமந்தது பளுவை மட்டுமல்ல. வறுமையையும்தான். வறுமை, சாதிக்கத் தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் அனுராதா.