Published:Updated:

தோனி-அமித் ஷா சந்திப்பு... ஜெய் ஷா தலையீடு... - தோனி ஓய்வில் அரசியல் இருக்கிறதா?

தோனி ஓய்வில் அரசியல்
தோனி ஓய்வில் அரசியல் ( Twitter/Amitshah )

தோனியின் பெயர், அரசியல் வளையத்துக்குள் வந்தது எப்படி... தோனியின் ஓய்வுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறதா... என்பதையெல்லாம் அலசுகிறது இந்தக் கட்டுரை.

மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், யார்க்கர் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றக்கூடிய அசாத்திய பேட்ஸ்மேன், மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்யக்கூடிய அசத்தலான விக்கெட் கீப்பர்... என உலக அரங்கில் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாகத் திகழ்ந்தவர் மகேந்திரசிங் தோனி. கடந்த சுதந்திர தினத்தோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்திருந்தார் அவர்.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ஜாம்பவான்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தங்களது வாழ்த்துகளையும் சோகத்தையும் சோஷியல் மீடியாவில் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தோனி ஓய்வு
தோனி ஓய்வு
Twitter/ICC

எப்போதுமே களத்தில் தோனி எடுக்கும் முடிவுகள் வித்தியாசமானதாக இருக்கும். அணி வீரர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சிதரும், ஆச்சர்யப்படுத்தும் சில முடிவுகளை அவர் எடுத்திருக்கிறார். பெரும்பாலும் அது போன்ற முடிவுகள் மூலம்தான் இந்திய அணிக்குக் கோப்பைகள் பலவும் பரிசாகக் கிடைத்திருக்கின்றன.

கீழேயுள்ள லிங்க்கில் அவர் எடுத்த வித்தியாசமான முடிவுகள், அதன் மூலம் கிடைத்த வெற்றிகள் பற்றிய கட்டுரையைப் படிக்கலாம்.

தோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்...  ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா?! #DhoniForever

களத்தில் மட்டுமல்ல... களத்துக்கு வெளியிலும் அவர் அப்படித்தான். ஒரு சமயம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரைப் பக்கத்தில் அழைத்து, அமரவைத்து அவர் வாய்வழியாகவே அந்தக் கேள்விக்கு பதிலை வரவழைத்திருப்பார் தோனி. தற்போது ஓய்வு பெற்றதைக்கூட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார். இப்படி வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாண்டு, ரசிகர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துவருகிறார் அவர்.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி
கடந்த இரண்டு நாள்களாக சோஷியல் மீடியா முழுவதும் தோனிக்கான பாராட்டுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், சில சோஷியல் மீடியா பதிவுகளில், `தோனியின் ஓய்வுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது' என்பது மாதிரியான செய்திகளையும் காண முடிகிறது. `பி.ஜே.பி நெருக்கடி காரணமாகத்தான் தோனி ஒய்வு பெற்றுவிட்டார்' என்றும் சிலர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டார். அந்தப் பதிவில், "தோனி, கிரிக்கெட்டிலிருந்து மட்டும்தான் ஓய்வுபெற்றிருக்கிறார்; மற்ற எவற்றிலிருந்தும் அல்ல. முரண்பாடுகளுக்கு எதிராகப் போரிடும் அவரது திறன் மற்றும் ஓர் அணியைத் திறம்பட வழிநடத்த முடியும் என கிரிக்கெட்டில் அவர் செயல்படுத்திக் காட்டியது போன்றவை பொது வாழ்க்கைக்குத் தேவை'' என்று கூறியதோடு, மேலும் ஒரு கருத்தை அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்து...

தோனி வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமியை அடுத்து பி.ஜே.பி தலைவரும், நடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரியும் `தோனி அரசியலுக்கு வர வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். இதையடுத்து, `தோனியை அரசியலுக்குள் இழுக்க நினைக்கிறார்களா...’ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது.

தோனியின் பெயர், அரசியல் வளையத்துக்குள் வந்தது எப்படி?

தோனியின் ஓய்வுக்குப் பின்னர்தான் தோனியை அரசியலோடு சம்பந்தப்படுத்திப் பேச்சுகள் வருகின்றனவா என்றால், `இல்லை’ என்பதுதான் பதில். கடந்த ஆண்டு உலகக் கோப்பையோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று தகவல்கள் நிலவிவந்த சமயத்திலேயே `தோனி அரசியலுக்கு வரப்போகிறார்' என்ற கருத்து வலம்வந்தது. இதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வானின் கருத்துதான்.

Dhoni
Dhoni
AP
`தேசியவாத சிந்தனை; `டாப்' தலைவர்களுடன் டச்' - பி.ஜே.பி-யில் இணைகிறாரா தோனி?

தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில், 2019 இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலுக்கு முன்பாக தோனி பி.ஜே.பி-யில் இணைய வாய்ப்புள்ளது என்று செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் சஞ்சய் பஸ்வான். மேலும், "இது குறித்த பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடைபெற்றுவருகின்றன. ஆனால், தோனியின் ஓய்வுக்கு பிறகுதான் இது குறித்து முடிவுகளை அவர் எடுப்பார்'' என்றும் சஞ்சய் பஸ்வான் கூறியிருந்தார்.

தோனி என்னுடைய நண்பர். உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். அவரைக் கட்சிக்குள் கொண்டு வர நீண்டநாள்களாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
சஞ்சய் பஸ்வான்

`தோனி பி.ஜே.பி-யில் இணைய வாய்ப்புள்ளது' என்று அவர் கொளுத்திப் போட்ட திரி, வட இந்திய மீடியாக்களிலும், சோஷியல் மீடியாவிலும் தீயெனப் பரவியது. `ஜார்கண்ட்டில் பி.ஜே.பி-யைவிட, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதால், தோனியின் ஆதரவு பி.ஜே.பி-க்குத் தேவைப்படுகிறது. அவர் ஆதரவளித்தால் அங்கு வெற்றி நிச்சயம்' என்பது போன்ற கருத்துகளை அடுக்கி, வட இந்திய மீடியாக்கள் அப்போதே செய்திகள் வெளியிட்டன.

தோனி - அமித்ஷா சந்திப்பு!

முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வானின் பேட்டி தீயெனப் பரவியதற்கும் ஒரு காரணம் உண்டு. 2019, மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு 2018-ம் ஆண்டு `சம்பார்க் ஃபார் சமர்தான்', அதாவது `சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்' என்ற பெயரில் பிரசார இயக்கம் ஒன்றைத் தொடங்கிவைத்தார் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா. அதன் மூலம் மக்களைச் சந்தித்து, பி.ஜே.பி ஆட்சியின் நான்கு ஆண்டுக்கால சாதனைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்று பி.ஜே.பி தலைவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

தோனி - அமித் ஷா
தோனி - அமித் ஷா
Twitter/ Amitshah

இந்த பிரசார இயக்கத்தின் மூலம் பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் சிலர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகை மாதுரி தீக்‌ஷித், பதஞ்சலி அதிபர் பாபா ராம்தேவ் உள்ளிட்ட பிரபலங்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். அதேபோல ஆகஸ்ட் 5, 2018 அன்று அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தோனியை நேரில் சந்தித்து, பி.ஜே.பி சாதனைகள் அடங்கிய பட்டியலை வழங்கி, தோனியிடம் ஆதரவு கோரினர். இதன் காரணமாகத்தான் `தோனி பி.ஜே.பி-யில் இணைய வாய்ப்புள்ளது’ என்ற செய்தி, முக்கியச் செய்தியாக மாறியது.

ராணுவத்தில் தோனி!

தற்போது மீண்டும் 2019-ம் ஆண்டுக்கு வருவோம்... 2019 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. அதன் பிறகு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தடைந்தார் தோனி. அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து, கடைசி இரண்டு ஓவர்களுக்கு முன்பு வரை இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக இருந்தார் தோனி. ஆனால், தோனி ரன்அவுட் ஆகி வெளியேறியது இந்திய ரசிகர்களைச் சோகமடையச் செய்தது.

தோனி
தோனி

அரையிறுதியில் நம்பிக்கை நாயகனாக இருந்தாலும், `அந்தத் தொடர் முழுவதும் பேட்டிங்கில் மந்தமாக ரன் சேர்த்தார்’ என்ற விமர்சனங்களும் அவர்மீது வைக்கப்பட்டன. இந்நிலையில் ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் இந்திய அணியில் தோனியின் பெயர் இருக்குமா என்ற கேள்விகளும் எழத் தொடங்கின. அந்தச் சமயத்தில் தோனி, தாமாக முன்வந்து தொடரிலிருந்து விலகினார். ராணுவத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் பயிற்சி எடுக்கப்போவதாக அறிவித்தார். சொன்னதைப்போலவே ஜூலை 23, 2019 அன்று பெங்களூருவிலுள்ள இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் சேர்ந்து இரண்டு மாதப் பயிற்சியைத் தொடங்கினார் தோனி.

பிசிசிஐ-யில் ஜெய் ஷா!

இதையடுத்து 2019, அக்டோபர் மாதத்தில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பிசிசிஐ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் செளரவ் கங்குலி. அதைத் தொடர்ந்து அதே மாதத்தில் தொழிலதிபரும் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2013 முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்துவந்த ஜெய் ஷா, 2015-ல் இந்தியக் கிரிக்கெட் கவுன்சிலின் நிதித்துறையில் உறுப்பினராக இணைந்தார். 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிசிசிஐ-ன் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஜெய் ஷா. மூத்த உறுப்பினர்கள் பலர் இருந்தும், செயலாளர் பதவிக்கு அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா
தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா
அதிக பணம் புழங்கும் இடமாக பிசிசிஐ இருப்பதன் காரணத்தால், எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அந்தக் கட்சிக்குத் தொடர்புடையவர்களை பிசிசிஐ-ன் முக்கியப் பதவிகளில் நியமிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஓர் அரசியல் என்பதால், ஜெய் ஷா செயலாளர் பதவியேற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஒதுக்கப்பட்ட தோனி!

ராணுவப் பயிற்சிக்காக இரண்டு மாதங்கள் மட்டுமே விடுப்பில் செல்வதாகக் கூறியிருந்தார் தோனி. ஆனால், அந்த இரண்டு மாத ஓய்வுக் காலம் முடிந்த பிறகும் தோனி, அணியில் சேர்க்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் தோனியின் பெயர் இல்லை. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டிகளிலும் தோனி சேர்க்கப்படவில்லை.

தோனி இந்திய அணியில் சேர்க்கப்படாததைத் தொடர்ந்து #BringBackDhoni என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

வெற்றி பெற்ற முக்தி மோர்ச்சா!

2019, நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் நடைபெற்றது. பி.ஜே.பி தலைவர் சஞ்சய் பஸ்வான் சொன்னதுபோல எதுவும் நடக்கவில்லை. தோனி சாதாரண வாக்காளராக மட்டுமே அந்தத் தேர்தலில் பங்கு கொண்டார். டிசம்பர் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. `ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா' கூட்டணி வெற்றி பெற்றது. ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வரானார்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு தேர்தலைச் சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி, மொத்தம் 47 இடங்களைக் கைப்பற்றியது. தனித்து போட்டியிட்ட பி.ஜே.பி வெறும் 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

வைரலான ட்விட்டர் பதிவு!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிசிசிஐ ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கொதித்தெழுந்தனர். ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளாக வீரர்களைப் பிரித்து சம்பளம் நிர்ணயம் செய்வது வழக்கம். கடந்த ஆண்டில் `ஏ' பிரிவிலிருந்த தோனியின் பெயர் எப்படி `சி' பிரிவில்கூட இல்லாமல் போகும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பினர். தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பல செய்தித்தாள்களிலும் செய்திகள் வந்தன.

தோனி
தோனி
Dhoni: `உணர்வுகளை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள்!' - சாக்‌ஷி உருக்கம்

இந்தச் சமயத்தில், `தோனி பெயர் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் வராததற்கு பி.ஜே.பிதான் காரணம்' என்ற கருத்தோடு பதியப்பட்ட ட்விட்டர் பதிவு ஒன்று வைரலானது. அந்தக் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தவர் கெளரவ் பந்தி என்பவர். கெளரவ் பந்தி, காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் கம்யூனிகேஷன் மற்றும் சோஷியல் மீடியாவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று தனது ட்விட்டர் பக்கத்தின் பயோடேட்டா பகுதியில் குறிப்பிட்டிருந்ததாலும், அவரது ட்விட்டர் கணக்கு ட்விட்டர் நிறுவனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு ப்ளூ டிக் பெற்றிருந்ததாலும் இந்தக் கருத்து சீரியஸான விவாதங்களைக் கிளப்பியது. அந்தப் பதிவில்...

ஜார்கண்ட் தேர்தலின்போது தோனி பி.ஜே.பி-யில் சேர வேண்டுமென்றும், தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் கேட்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதால் மறுத்துவிட்டார். பின்னர் பிரசாரத்துக்காக அழைக்கப்பட்டார். அதற்கும் மறுத்துவிட்டார் தோனி. அதன் விளைவாக இன்று அவரது பிசிசிஐ-யின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.
கெளரவ் பந்தி

மேலும், அதைத் தொடர்ந்து இன்னொரு பதிவையும் புகைப்படத்தோடு தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் கெளரவ். அந்தப் புகைப்படத்தில், ஜெய் ஷா அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி கங்குலி உள்ளிட்ட பிசிசிஐ-யின் முக்கியப் பிரமுகர்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்தப் புகைப்படத்துக்கு மேல், `பி.ஜே.பி., கிரிக்கெட்டை அரசியல்மயமாக்குகிறது. பிசிசிஐ-யின் முதலாளி யார் என்று அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்' என்ற பொருள்படும்படி பதிவிட்டிருந்தார்.

அந்நேரத்தில் இப்பதிவு சர்ச்சையைக் கிளப்பியது. `வேண்டுமென்றே தோனி ஒதுக்கப்படுகிறாரா...’ என்பது போன்ற விவாதங்களும் எழுந்தன. ஜெய் ஷாதான் இந்திய அணியைத் தேர்வு செய்கிறார் என்று சோஷியல் மீடியாவில் பேசப்பட்டது.

தற்போது அவர் ஓய்வு பெற்ற பின்னும் இது போன்ற கருத்துகள் சோஷியல் மீடியாவில் வலம்வந்த வண்ணம் உள்ளன. மேலும், கிரிக்கெட் சார்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை இடும் பிரதமர் மோடி, தோனி ஓய்வு பெற்றது குறித்து எந்தவொரு ட்வீட்டும் பதிவிடவில்லை. அதேநேரத்தில், அமித் ஷா தோனியைப் புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியிருக்கிறார்.

தோனிக்கு மட்டுமே தெரியும்!

தோனியிடம் நீண்டகாலமாக பி.ஜே.பி-யில் சேருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதற்கு பி.ஜே.பி தலைவர் சஞ்சய் பஸ்வானின் பேட்டி சாட்சியமாக இருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமி, மனோஜ் திவாரி உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பதைவைத்து பி.ஜே.பி-யின் கதவு தோனிக்காக எப்போதும் திறந்தே இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஜார்கண்ட் தேர்தலின்போது தோனி பி.ஜே.பி-யில் இணையவும், பி.ஜே.பி-க்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவும் மறுப்பு தெரிவித்தார் என்பதற்கு எந்தவொரு அதிகாரபூர்வ அதரங்களும் இல்லை. கெளரவ் பந்தியின் ட்விட்டர் பதிவில் மட்டுமே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

 Dhoni
Dhoni
Hamish Blair | AP

ஜெய் ஷா பிசிசிஐ-யின் முக்கியப் பொறுப்பிற்கு வந்த பிறகு இந்திய அணி விளையாடிய போட்டிகள் எதிலுமே தோனி சேர்க்கப்படவில்லை. ஆனால், அதற்கு தோனி பி.ஜே.பி-க்கு ஆதரவளிக்காததுதான் காரணம் என்று சொல்லும்படியான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஒருவேளை தோனி அப்போது சரியான ஃபார்மில் இல்லை என்பதுகூட காரணமாக இருக்கலாம்.

அதேநேரத்தில், கடந்த ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் `ஏ' பிரிவிலிருந்த தோனி இந்த ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதுதான் இதில் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

இதுவரையிலும் தோனி எந்தக் கட்சியையும் ஆதரித்தோ, எதிர்த்தோ எந்தவொரு கருத்தையும் முன்வைத்ததில்லை. அவரது ட்விட்டர் பக்கமும் அவரைப்போல மிக அமைதியாகவே இருக்கும். தோனி அரசியல் குறித்து எந்தவொரு கருத்தும் சொல்லாத காரணத்தால், அவருக்குள் அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா என்பது பற்றித் தெரியவில்லை.

ஆனால், தோனிக்கு விவசாயம் செய்யும் ஆசை இருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் தோனி டிராக்டர் ஓட்டுவதுபோலவும், பயிர் செய்வதுபோலவும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. அதைத் தொடர்ந்து தோனியின் பால்ய நண்பரும், அவரின் மேலாளருமான மிஹிர் திவாகர் இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில்,

தன்னிடமுள்ள சுமார் 40-50 ஏக்கர் விளைநிலங்களில் பப்பாளி, வாழைப்பழம் போன்ற ஆர்கானிக் பயிர்களை வளர்ப்பதில் தோனி மும்முரமாக உள்ளார். மேலும், நியோ குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தோனி இயற்கை உரங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறார்.
மிஹிர் திவாரி

தோனியின் மேலாளரின் கருத்து மூலம், மிக விரைவில் தோனி இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கப்போகிறார் என்பதும், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதும் உறுதியாகிறது. அதேபோல இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதும் தோனிக்கு பிடித்த ஒன்று. அதையும் இனி செய்வார் என எதிர்பார்க்கலாம். தனக்குப் பிடித்த கிரிக்கெட்டிலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்லில் விளையாடப்போகிறார் தோனி. ஆனால், `அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா...’ என்ற கேள்விக்கான பதிலை நிச்சயம் தோனி மட்டுமே சொல்ல முடியும்!

எது எப்படியோ... உங்கள் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மிஸ்டர் கூல்!
அடுத்த கட்டுரைக்கு