Published:Updated:

`தீவிரவாதம்தான் பிரச்னை.. மக்கள் இல்லை!’ - பாக்., சிறுமிக்கு உதவியது குறித்து கம்பீர்

பாகிஸ்தான் மக்கள் மீது நமக்கு எந்த வெறுப்பும் இல்லை என கெளதம் கம்பீர் பேசியுள்ளார்.

கெளதம் கம்பீர்
கெளதம் கம்பீர்

பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் விசா தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான கெளதம் கம்பீரை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து கம்பீர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். கம்பீரின் கடிதம் கிடைக்கப்பெற்றதையடுத்து சிறுமிக்கு விசா வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடிதம் வாயிலாக கம்பீருக்கு இதைத் தெரியப்படுத்தினர். அந்தக் கடிதத்தில், சிகிச்சைக்காக சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் இந்தியா வருவதற்கான விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

`தீவிரவாதம்தான் பிரச்னை.. மக்கள் இல்லை!’ - பாக்., சிறுமிக்கு உதவியது குறித்து கம்பீர்

இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கம்பீர், இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வரும் சிறுமிக்கு விசா வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானைத் தாக்கி கடுமையாகப் பேசி வருகிறார் கம்பீர். காஷ்மீர் விவகாரம் குறித்து வாய் திறக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும், அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கிடையில் பாகிஸ்தான் சிறுமிக்காக கம்பீர் எடுத்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதய அறுவைசிகிச்சை... பாகிஸ்தான் சிறுமிக்கு விசா - கம்பீருக்கு குவியும் பாராட்டு!

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், “பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் போனில் தொடர்புகொண்டு சிறுமி குறித்த தகவலை எனக்கு தெரிவித்தார். அந்தச் சிறுமி 7 மாத குழந்தையாக இருந்தபோது நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் மருத்துவர்களை தொடர்புகொண்டு அறுவை சிகிச்சை தொடர்பாக அவரது குடும்பத்தினர் பேசியுள்ளனர். முடிந்த வரை விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக யூசப் தெரிவித்தார். மேலும், விசா கிடைக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இதையடுத்துதான் மத்திய அமைச்சருக்கு விசா தொடர்பாக கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று விசா வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் அட்டாரி எல்லை வழியாக இந்தியா வரவுள்ளனர். நமக்கு பாகிஸ்தானுடன் சில பிரச்னைகள் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ மற்றும் தீவிரவாதத்தை நாம் எதிர்க்கிறோம். அந்நாட்டு மக்கள் மீது நமக்கு எந்த வெறுப்பும் இல்லை. 6 வயதுச் சிறுமி இந்தியாவில் சிகிச்சை பெற முடிந்தால் இதைவிட சிறந்தது என்னவாக இருக்கும். நான் 6 வயதுச் சிறுமிக்கு உதவியதில் என்ன தவறு உள்ளது” எனக் கூறியுள்ளார்.