Published:Updated:

`சென்னைக்கு அடுத்து சேலத்தில் ஐபிஎல் மேட்ச்!' -வாழப்பாடியில் உற்சாகப்பட்ட எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`சென்னையைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் ஐபிஎல் போட்டி நடத்தியது இல்லை. இந்த வாய்ப்பு சேலத்தில் உருவாகியிருக்கிறது'.

சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பாக, சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சர்வதேச தரத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் புதிய மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், பெஞ்சமின் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சி
நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத், ஐசிசி-யின் முன்னாள் தலைவர் ஶ்ரீனிவாசன் மற்றும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், ``இந்த மைதானத்தின் தொடக்க விழாவுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஏற்கெனவே கிரிக்கெட் கிரவுண்டு இருக்கிறது. பெரிய நகரங்களில் கிரிக்கெட் வீரர்கள் உருவானார்கள்.

இனி சிறிய நகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் வீரர்கள் உருவாகிவருவார்கள். அவர்களுக்கு, இந்த மைதானம் வசதியாக இருக்கும். ஏற்கெனவே, சேலத்திலிருந்து நடராஜன் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த மைதானம், இளம் வீரர்கள் விளையாட சிறந்த மைதானமாக இருக்கும். நானும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாட ஆவலாக இருக்கிறேன்'' என்றார்.

ராகுல் டிராவிட்டுடன் முதல்வர் பழனிசாமி
ராகுல் டிராவிட்டுடன் முதல்வர் பழனிசாமி

அதையடுத்துப் பேசிய ஐசிசி முன்னாள் தலைவர் ஶ்ரீனிவாசன், ``இந்த மைதானம் இயற்கைச் சூழலோடு அமைந்துள்ளது. நல்ல கட்டுமான வசதியோடு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே இங்கு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு, இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். தோனி விளையாடுவார். முதல்வர் அதைப் பார்வையிடுவார்'' என்றார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இளைஞர்களின் உடல் வலிமை, மன வலிமையைக் கருத்தில் கொண்டு, கல்வித்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுத் துறைக்கும் அம்மா அரசு கொடுக்கிறது. இதன் மூலம் தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் சாதனை புரிவார்கள். அம்மா அரசு விளையாட்டுத் துறைக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வாழப்பாடியில் அமைந்துள்ள இந்த மைதானம், இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. சுகாதாரமான காற்று வீசுகிறது. இங்கு ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என ஶ்ரீனிவாசன் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது தமிழக அரசு. சென்னையைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் ஐபிஎல் போட்டி நடத்தியது இல்லை. இந்த வாய்ப்பு சேலத்தில் உருவாகியிருக்கிறது. நல்ல அற்புதமான சூழலில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உலக அளவில் சாதனை புரிய வேண்டும்'' என்றார்.

பிறகு, கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்து வீச, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பந்தை அடித்து விளையாடினார். இதை, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ரசித்துப் பார்த்தனர்.

பின் செல்ல