சினிமா
Published:Updated:

விளையாட்டு அமைப்புகளில் அரசியல் விளையாட்டு!

விளையாட்டு அமைப்புகளில் அரசியல் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு அமைப்புகளில் அரசியல் விளையாட்டு!

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த அமைப்புகளின் அலட்சியத்தால் அடையும் துன்பங்கள் இன்னும் அதிகம்.

`இந்திய விளையாட்டின் தற்போதைய நிலை என்ன' என்று பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்டால் உற்சாகமான பதிலே வரும். ‘‘முன்பைவிடச் சிறப்பாக இருக்கிறது. கிரிக்கெட்டைத் தாண்டிப் பல விளையாட்டுகளில் இந்தியர்கள் பதக்கங்களையும் பரிசுகளையும் வென்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். காமன்வெல்த், செஸ் ஒலிம்பியாட் என்று எல்லாப் போட்டிகளிலும் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள்'' என்று ஒரு சாமானியன் பதில் கூறக்கூடும்.

ஆனால், உண்மை நிலை அது கிடையாது. விளையாட்டுத்துறை என்பது களத்தில் இறங்கி ஆடும் வீரர்கள், வீராங்கனைகள் சார்ந்தது மட்டுமல்ல; இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைப்புகளும் அதன் பொறுப்பாளர்களுமேகூட இதனைச் சார்ந்தவர்கள்தான். இந்திய விளையாட்டுத்துறை எப்படியிருக்கிறது எனும்போது இவர்களின் பங்களிப்பையும் சேர்த்தே மதிப்பிட வேண்டியிருக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாத இடம் பாழ்பட்டு, சீரழிவை நோக்கி நகரும். இந்தியாவில் விளையாட்டுகளை நிர்வகிக்கும் பல கூட்டமைப்புகளும் சங்கங்களும் இப்படித்தான் சுயநல அரசியல் மோதல் நடக்கும் களங்களாக மாறிப்போயிருக்கின்றன.

விளையாட்டு அமைப்புகளில் அரசியல் விளையாட்டு!

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தரவுப்படி, தேசிய அளவில் மொத்தம் 61 விளையாட்டுகளுக்கான கூட்டமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. அந்தந்த விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதும், அந்த விளையாட்டு சார்ந்து நிர்வாகத்தில் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதும், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் காப்பதும், அந்தக் குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டியின் மேம்பாட்டை உறுதி செய்வதும் இவர்களின் வேலை. ஆனால், இந்த 61 கூட்டமைப்புகளில் பெரும்பாலானவை இதை முறையாகச் செய்வதே இல்லை.

அகில இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பை (AIFF), சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான FIFA சஸ்பெண்ட் செய்ததைக் குறித்த செய்திகளை சமீபத்தில் பார்த்திருப்போம். இந்தியக் கால்பந்துச் சமூகமே ஆடிப்போனது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பைக் கால்பந்துத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் சந்தேகம் கிளம்பியது. இந்தியக் கால்பந்து அணியால் சர்வதேசப் போட்டிகளில் ஆட முடியாத சூழல் உருவானது. வெளிநாடுகளுக்கு ஆடச் சென்றிருந்த சில இந்திய கிளப் அணிகள், அங்கே போட்டிகளிலும் ஆட முடியாமல், நாட்டிற்கும் திரும்ப முடியாமல் பரிதவித்தனர். இந்த அத்தனை சிரமங்களுக்கும் காரணம் அதிகார வெறி.

பிரஃபுல் படேல்
பிரஃபுல் படேல்

2011-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தேசிய விளையாட்டு மேம்பாடு ஒழுங்குமுறை விதி’களைப் பின்பற்றி பதவிக்காலம் முடிந்தவுடன் முறையாகத் தேர்தல் நடத்தி அமைப்பின் புதிய தலைவரையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்திருந்தால் இந்தச் சிக்கலே எழுந்திருக்காது. மாறாக, மூன்று முறை தொடர்ந்து AIFF அமைப்பின் தலைவராக இருந்துவிட்டு, பதவிக்காலம் முடிந்த பின்பும் நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டித் தேர்தலை நடத்தாமலே இருந்தார் பிரஃபுல் படேல். அதன் விளைவுதான் அகில இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்புமீதான தடை. அதன்பின் பிரஃபுல் படேல் வெளியேற்றப்பட, தேர்தல் நடத்தப்பட்டு முன்னாள் கால்பந்து வீரர் கல்யாண் சவுபே இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கால்பந்து மட்டுமல்ல, ஹாக்கி இந்தியா மற்றும் இந்திய ஒலிம்பிக்ஸ் கூட்டமைப்புகளின் நிலையுமே இதே பரிதாபத்தில்தான் இருக்கிறது. வாழ்நாள் தலைவர் மற்றும் உறுப்பினர் போன்ற கௌரவ பதவிகளை நியமித்த விவகாரம், அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தனிப்பட்ட காரியங்களுக்குச் செலவழித்த சர்ச்சை ஆகியவை காரணமாக ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரீந்தர் பத்ரா அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அடுத்த ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரை இந்தியா நடத்தவிருக்கிறது. AIFF-க்கு விதிக்கப்பட்ட தடையைப் போல ஹாக்கி இந்தியாவும் தடை செய்யப்பட்டால் நிலைமை மோசமாகும் என்ற சூழலில் அவசர அவசரமாகத் தேர்தலை நடத்தி புதிய தலைவராக முன்னாள் வீரர் திலீப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஹாக்கி இந்தியா.

இந்திய ஒலிம்பிக்ஸ் கூட்டமைப்பின் குளறுபடிகளால் அடுத்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸ் திட்டமிடல் அமர்வை சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி தள்ளி வைத்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் சார்ந்து இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு இது.

நரீந்தர் பத்ரா
நரீந்தர் பத்ரா

இந்த அமைப்புகளில் மட்டும்தான் பிரச்னையா என்றால் இல்லை. கிட்டத்தட்ட எல்லா நிர்வாக அமைப்புகளிலுமே தினுசு தினுசாக வெவ்வேறு விதத்தில் பிரச்னைகள் குடிகொண்டிருக்கின்றன. டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பை, நீதிமன்றம் அமைத்திருக்கும் குழுதான் நிர்வகிக்கிறது. இந்த டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் வீரர்கள் தேர்வு முறையில் எப்போதுமே ஒரு தெளிவு இருந்ததில்லை. உள்ளூர்ப் போட்டிகள் 50%, சர்வதேசப் போட்டிகள் 30%, தேர்வர்களின் மதிப்பு 20% என்ற வகையிலேயே பெரிய தொடர்களுக்கு வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது இந்த அமைப்பின் விதிகளில் ஒன்று. ஆனால், சமீபத்தில் நடந்த காமன்வெல்த் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட அணி, இந்த விதிமுறைகளுக்கு மாறாக இருந்தது. இதைத் தொடர்ந்து நிறைய வீரர்கள், வீராங்கனைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டது. காமன்வெல்த் போன்ற பெரிய தொடருக்கு முன்பு இப்படியான இழுபறிகள் வீரர், வீராங்கனைகளுக்குப் பெரும் தலைவலியையே கொடுக்கும். இதே பாணியில் இன்னும் விக்கித்துப்போகும் வகையில் தேசிய ரைஃபிள் கூட்டமைப்பு ஒரு உலக சாம்பியன் தொடருக்கான அணியைச் சமீபத்தில் அறிவித்தது. அதில், தரவரிசையிலேயே இல்லாத இரண்டு வீரர்களின் பெயரையும் அறிவித்து அதிர்ச்சியூட்டியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த அமைப்புகளின் அலட்சியத்தால் அடையும் துன்பங்கள் இன்னும் அதிகம். ஒவ்வொரு பெரிய தொடருக்கு முன்பாகவும் தேவையான உதவியாளர்களைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களிடம் மன்றாடும் இடத்திலேயே பாரா வீரர்களை விளையாட்டு அமைப்புகள் வைத்திருக்கின்றன.

இவற்றையெல்லாம் தாண்டி வீராங்கனைகளின் பாதுகாப்பும் கண்ணியமுமே இந்த நிர்வாக அமைப்புகளால் கேள்விக்கு ள்ளாக்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தயக் குழு ஒன்று ஸ்லோவேனியா நாட்டுப் பயிற்சி முகாமிற்குச் சென்றிருந்தது. அந்தக் குழுவிலிருந்த வீராங்கனைக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்திருக்கிறார் ஒரு பயிற்சியாளர். பாதிக்கப்பட்ட வீராங்கனை அமைப்பிடம் புகார் கூறினார். அத்தனை நெறிமுறைகளையும் கற்றுத் தேர்ந்த இந்திய சைக்கிள் பந்தயக் கூட்டமைப்பு, புகார் கூறிய வீராங்கனையின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது. இந்த அநாகரிகத்தை நிகழ்த்திவிட்டு, ‘தெரியாமல் செய்துவிட்டோம்' என்று தலையைச் சொறிந்துகொண்டு நின்றார்கள். பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை விசாரிக்க இதுபோன்ற அமைப்புகள் தங்களுக்குள் தனிக் குழுக்களையாவது வைத்திருக்கின்றனவா, அவை முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை அரசுதான் உறுதிப்படுத்த வேண்டும்.

‘விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டியது தேசத்தின் கடமை. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மேம்பாடு, சமூக ஒருங்கிணைவு, அமைதி மற்றும் வளர்ச்சி என எல்லாவற்றையுமே விளையாட்டு ஊக்குவிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் அது தேசத்தின் பெருமையை உணரச் செய்கிறது...' தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஒழுங்குமுறை விதிகளின் தொடக்கத்தில் அதன் நோக்கம் என்கிற இடத்தில் இவ்வாறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். விளையாட்டு நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகள் பலவும் இந்த நோக்கத்திற்குத் தோள் கொடுப்பதாக இல்லை என்பதே நிதர்சனம்.

குழப்பமான செயல்பாடுகளும் முடிவுகளுமே இவற்றில் நிகழ்வதால், அத்தனை தரப்பும் நீதிமன்றப் படி ஏறுகின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் அரசாங்கமுமே இந்த அமைப்புகளின் இடியாப்பச் சிக்கலுக்கு இரையாகும் சூழலே உள்ளது. இந்த எல்லாவற்றையும் கடந்துதான் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வெற்றிகளையும் புகழையும் குவித்துவருகின்றனர்.

இது விளையாட்டு விஷயம்தான், ஆனால் விளையாட்டாக அணுகக்கூடிய விஷயம் அல்ல என்பதை நிர்வாகிகளும் அமைப்புகளும் உணர வேண்டும்!