Published:Updated:

``அப்பா சிபாரிசு கிடையாது; சீனிவாசன் சாரால்தான் TNCA தலைவரானேன்"- பொன்முடி மகன் அசோக் சிகாமணி பேட்டி

அசோக் சிகாமணி

"என் அப்பா அரசியலில் இருந்தாலும் எந்த உதவியும் கேட்டதில்லை. சீனிவாசன் சாரால்தான் தலைவரா உட்கார்ந்திருக்கேன். தலைவர் ஆனாலும் அவரை பிரசிடென்ட் என்றுதான் கூறுவேன். கிரிக்கெட்னா சீனிவாசன் தான் தமிழகத்தின் முகம். அவருக்குமேல போகுற அளவுக்கு, நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது"

``அப்பா சிபாரிசு கிடையாது; சீனிவாசன் சாரால்தான் TNCA தலைவரானேன்"- பொன்முடி மகன் அசோக் சிகாமணி பேட்டி

"என் அப்பா அரசியலில் இருந்தாலும் எந்த உதவியும் கேட்டதில்லை. சீனிவாசன் சாரால்தான் தலைவரா உட்கார்ந்திருக்கேன். தலைவர் ஆனாலும் அவரை பிரசிடென்ட் என்றுதான் கூறுவேன். கிரிக்கெட்னா சீனிவாசன் தான் தமிழகத்தின் முகம். அவருக்குமேல போகுற அளவுக்கு, நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது"

Published:Updated:
அசோக் சிகாமணி

"என்னோட பத்து வயசுலருந்து கிரிக்கெட் விளையாடிக்கிட்டு வர்றேன். விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், என் கால் படாத இடங்களே இல்லை. அந்தளவுக்கு எங்கெல்லாம் விளையாட இடம் கிடைக்குதோ அங்கெல்லாம் விளையாடப் போய்டுவேன். இப்போதும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுறேன். அதனாலதான், அப்பா, அண்ணன் எல்லோரும் அரசியலில் இருக்கும்போது, நான் அந்தப் பாதையில் செல்லவில்லை. அப்பாவைப் பார்க்க நிறைய அரசியல்வாதிங்க வீட்டுக்கு வருவாங்க. அப்போக்கூட, வெளியில கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருப்பேன். அந்தளவுக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். அந்த ஆர்வம்தான் என்னை இந்தப் பொறுப்பில் அமரவைத்துள்ளது" என்று நிதானத்துடன் பேசுகிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி.

"தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி இருக்கிறது?"

"இந்தியாவிலேயே சிறந்த கிரிக்கெட் சங்கம் என்ற பெருமை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உண்டு. அப்படியொரு அசோசியேஷனுக்கு தலைவரானது பெரிய விஷயம். ரொம்ப பெருமையான தருணம். எனக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை வெளியில் வேறுமாதிரி பேசுகிறார்கள். முதலில், நான் சீனிவாசன் சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தத் தலைவர் பதவி முழுக்க முழுக்க அவரால்தான் கிடைத்தது. எனது குடும்பத்தினர் அரசியலில் இருந்தாலும் 'எனக்கு இதை செய்துகொடுங்கள்' என்று சிபாரிசுக்காகப் போனது கிடையாது. எனக்காக எதையுமே கேட்டதில்லை. விழுப்புரத்தில் பொன்முடி மகன் என்றால்கூட யாருக்கும் தெரியாது. என்னை யாரிடமும் எங்கும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அசோசியேஷனில் என்னுடைய வேலையை செய்துகொண்டே இருக்கிறேன். திறமையைப் பார்த்து பொறுப்புகள் தேடிவருகின்றன. அப்படித்தான், டிஎன்சிஏ துணைத்தலைவர் பதவியும் வந்தது. திடீரென்று, சீனிவாசன் சார் போன் செய்து, 'துணைத்தலைவர் பதவியை ஏற்றுக்கொள்' என்றார். எனக்கு, அதற்கான தகுதி இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். இப்போதும், அவரின் நம்பிக்கையால் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது. நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்".

"மருத்துவரான உங்களுக்கு எப்படி கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது?"

"எனக்கு பிடித்தமான விஷயம் என்றால், அது கிரிக்கெட்தான். 'எப்போ பாரு கிரிக்கெட் விளையாடிக்கிட்டே இருக்கியேடா? ஒய்எம்சிஏவில் சம்மர் கேம்ப் நடக்குது பாரு'ன்னு நியூஸ் பேப்பரை எடுத்துவந்துக் கொடுத்தார் தாத்தா. அப்போதான், முதல் தடவை பெரிய கிரவுண்டைப் பார்க்கிறேன். வெள்ளை உடை அணிந்து 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்துக்கிட்டேன். அத்தனைப் பேரில் 'பெஸ்ட் ஆல்ரவுண்டர்' பரிசையும் வாங்கினேன். அதுவே, என்னை கிரிக்கெட்டில் முழுமையா ஈடுபட வைத்தது. ஆனா, என்னோட ஈடுபாட்டைப் பார்த்து அம்மா ரொம்பவே பயந்துட்டாங்க. இவன் இங்கேயே இருந்தா கிரிக்கெட் ஃபீல்டுலயே போய்டுவானோன்னு நினைச்சி, என்னை விழுப்புரம் கூப்ட்டுப் போய்ட்டாங்க. அதனால, நான் ப்ளஸ் டூ விழுப்புரத்துலதான் படிச்சேன். அதுக்கப்புறம், பொறியியல் படிக்க ஆசைப்பட்டேன். அதுவும், ஸ்போர்ட்ஸ் கோட்டாவுலேயே கிடைச்சது. நாளைக்கு போய் சேர்ந்துடலாம்னு ரெடியா இருக்கும்போது, அம்மா முதல்நாள் இரவு வந்து நைட்டோட நைட்டா என்னை கன்வீன்ஸ் பண்ணி 'நீ டாக்டருக்குத்தான் படிக்கணும். என்ஜினியரிங் போகக்கூடாது'ன்னு அழுது மனசை மாத்திட்டாங்க.

மெடிக்கல் காலேஜ் வகுப்புகள் எல்லாம் ஸ்டார்ட் பண்ணி ஒன்னரை மாசம் கழிச்சிதான் சேர்ந்தேன். அதுக்கப்புறம்தான், எங்கம்மாவுக்கு நிம்மதி கிடைச்சது. ஆனாலும், மனதிற்கு பிடித்தக் கிரிக்கெட்டை விடவில்லை. அப்போதும், 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஸ்டேட் விளையாடினேன். ரஞ்சி ட்ராஃபி விளையாடினேன். தொடர்ந்து விளையாடியதால் அட்டெனென்ஸ் பிரச்சனையும் வந்தது. ஒரு பேட்ச் அப்படியே பின்னாடி போய்விட்டேன். ஆறு மாதம் பிரேக் விழுந்தது. ஆறு மாதம் ஜூனியர்களுடன் படித்தேன். அதெல்லாம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அந்தளவுக்கு கிரிக்கெட்டை நேசித்தேன். அதன்பிறகுதான், கொஞ்சம் சீரியஸாக மருத்துவம் படிக்க ஆரம்பித்தேன்".

டாக்டர் அசோக் சிகாமணி
டாக்டர் அசோக் சிகாமணி

"சென்னையைக் கடந்து வெளி மாவட்டத்திலிருந்து அதிகம் புகழ்பெற்ற வீரர் என்றால் நடராஜனை மட்டுமேதான் குறிப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம். வெளி மாவட்டங்களிலிருந்து இன்னும் அதிக வீரர்களை ஊக்குவித்து முன்னேறமடைய செய்ய என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?"

"ஜெகதீசன் எல்லாம் பிற மாவட்டம்தான். நடராஜன் ஃபேமஸ் என்பதால், எல்லோரும் அவரை மட்டுமே சொல்கிறார்கள். மாநில அணியில் இருப்பவர்களில் பாதிபேர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், வெளியில் தெரிவதில்லை. கிரிக்கெட் ரொம்ப கடினமான விளையாட்டு. இந்தியா என்று பார்த்தால் வடக்கு, தெற்கு லாபி இருக்கும். இத்தனை கோடி மக்களில் 15 பேர் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும் என்றால், அதில் எவ்வளவு விதிமுறைகள் இருக்கும்? எப்படி வீரர்களை கழிக்கவேண்டியிருக்கும் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும். அப்படி, ஃபில்டர் பண்ணுவதில்தான், வீரர்கள் அடிப்பட்டுப் போகிறார்களே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. மற்றபடி, தமிழகத்தில் கிரிக்கெட்டிற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். சென்னையைத் தாண்டி வெளிப்பகுதிகளில் கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கவேண்டும். அப்படி செய்தால், அங்கேயே பயிற்சி எடுப்பார்கள்".

அசோக் சிகாமணி
அசோக் சிகாமணி

"தமிழ்நாடு டீமை பொறுத்தவரைக்கும் ஷார்ட்டர் ஃபார்மட்களில் (t20, 50 overs) ரொம்பவே சிறப்பாக ஆடுகிறார்கள். ஆனால், ரஞ்சி போட்டிகளில் 1987-க்குப் பிறகு தமிழ்நாடு அவ்வளவு சிறப்பாக விளையாடுவது இல்லையே? இந்த விஷயத்திற்கு கவனம் கொடுக்கப்படுமா?"

"சீனிவாசன் சார் ரஞ்சி ட்ராஃபிதான் கிரிக்கெட் என்று நினைப்பார். ரஞ்சி ட்ராஃபியை வெல்லவேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. 'ரஞ்சி ஜெயிச்சிட்டு வாங்க. எல்லோருக்கும் மாலை போடுறேன்' என்றார். ஜெயிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை ஆராய்கிறோம். ஆனால், எல்லா வசதிகளையும் செய்துகொடுத்துள்ளோம். போட்டியாளர்களும் நன்கு விளையாடுகிறார்கள். எல்லோருமே திறமையான வீரர்கள். டீமாகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இம்முறை வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது".

"டிஎன்சிஏ தலைவரானதற்கு உங்கள் அப்பா, முதல்வர் மு.க ஸ்டாலின் என்ன சொன்னார்கள்?"

"பசங்க ஏதாவது அச்சீவ் பண்ணாங்கன்னா பெற்றோருக்கு சந்தோஷம் இருக்குமில்லையா? அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். எல்லோருக்கும் போன் பண்ணி சொல்லிருக்கார். வாழ்த்துகளைக் குவிச்சிட்டாங்க. ஒரு அப்பாவாக அவரது கடைமைகளை செய்துள்ளாரே தவிர, கிரிக்கெட்டில் எந்த வகையிலும் அவருடைய சப்போர்ட் கிடையாது. நானும் எதிர்பார்த்ததில்லை. அவரோட உதவி எதுவும் இல்லாமலேயே இந்தப் பொறுப்புக்கு வந்ததால் அவருக்கு பெருமைதான். அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாகப் பார்க்கமாட்டேன். அதனால், எந்த விமர்சனங்களும் என்னை பாதிக்காது.

மற்றபடி அப்பாவைப் போலவே, முதல்வருக்கும் நான் தலைவர் ஆனதில் ரொம்ப சந்தோஷம். என்னை வாழ்த்தியவர், டிஎன்சிஏவில் என்னென்ன பண்ணப்போறேன்? என்னெல்லாம் இதற்குக்கீழ் வருகிறது என்றெல்லாம் கேட்டறிந்தார். "இது ரொம்ப பெரிய பொறுப்பு. அதனால, ஒழுங்கா பண்ணனும்" என்றார். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.

முதல்வர் வீடு முன்பு வேளச்சேரியில் இருந்தபோது, உதய், அருள்நிதி நான் எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு சின்னக் குழந்தைகள் மாதிரி கிரிக்கெட் விளையாடுவோம். என்னை சின்ன வயசிலிருந்து பார்த்துக்கொண்டு வருகிறார். அதனால், இவன் இந்தத் துறையில் நல்லா பண்ணுவான் என்ற நம்பிக்கையும் அவருக்கு உள்ளது".

"அமித்ஷா மகன் பிசிசிஐ தலைவரானதுபோல நீங்கள் டிஎன்சிஏ தலைவரானது குறித்து விமர்சிக்கப்படுகிறதே? ஜெய்ஷாவின் சப்போர்ட்டும் உங்களுக்கு உள்ளது என்று சொல்லப்படுகிறதே?

அசோக் சிகாமணி
அசோக் சிகாமணி

"அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ரொம்ப பாரம்பரியமானது. 100 சதவிகிதம் வெளிப்படைத்தன்மைக் கொண்டது. எந்த அரசியல் தலையீடும் இல்லை. இதில் இத்தனை வருடங்கள் இருந்துள்ளேன் என்பதைப் பார்த்துதான் சீனிவாசன் சார் இப்பொறுப்பைக் கொடுத்துள்ளார்.

ஜெய்ஷாவுக்கு என்னை யாருன்னே தெரியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை கிரிக்கெட் முகம் என்றால், அது சீனிவாசன் சார்தான். இனிமேல்தான், `யார்ப்பா இந்தப் பையன்!' என்று பார்க்க ஆரம்பிப்பாங்களே தவிர, இன்னமும் அவர்தான் தமிழகத்தின் முகம். நான் தலைவர் ஆனாலும் சீனிவாசன் சாரை பிரசிடென்ட் என்றுதான் கூறுவேன். அவரால்தான், நான் இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கேன். அவருக்குமேல போகுற அளவுக்கு, நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது.

அதேநேரம், எல்லா ஃபீல்டிலும் நெப்போடிசம் இருக்கத்தான் செய்யும். ஆனால், கிரவுண்டில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால் முன்னுக்கு வரமுடியாது. அதற்கான உழைப்பு இருந்தால் மட்டுமே வரமுடியும். இவரின் மகன், இவரின் உறவினர் என்றெல்லாம் பதவி கிடைக்காது. அப்படி கிடைத்தால் நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியாது. அரசியலுக்கும் இதற்கும் சம்மந்தமே கிடையாது. இரண்டும் வெவ்வேறு கட்டமைப்புகள்".

முதல்வருடன் அசோக் சிகாமணி
முதல்வருடன் அசோக் சிகாமணி

"உங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர் வாபஸ் வாங்கியது எப்படி?"

"இப்படி நடப்பது சகஜம்தான். இதற்கே, நாமினேஷன் எல்லாம் முடிந்துவிட்டது. தேர்தலின்போது மட்டும் ஏன் வாபஸ் வாங்கினார் என்று அவரைத்தான் கேட்கணும். அதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை".

"உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்?"

"சச்சின் பிடிக்கும். ஆனால், ஆல் டைம் ஃபேவரைட் தோனிதான். அவரும் விக்கெட் கீப்பர். நானும் அப்படித்தான். ரொம்ப கூல் பர்சன்".