Published:Updated:

`தங்கம் வெல்வேன்; புதிய ரெக்கார்டு படைப்பேன்!'- மாற்றுத்திறனாளி வீராங்கனையின் பாரா ஒலிம்பிக் சபதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோச் ரஞ்சித் உடன் அருண் மொழி
கோச் ரஞ்சித் உடன் அருண் மொழி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``2020-ல் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன்'' மாற்றுத்திறனாளி வீராங்கனை அருண்மொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

``பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் போதாது, ரெக்கார்டை முறியடித்து சாதனையும் படைக்க வேண்டும்'' என்று நெல்லையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடும் பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.

புழுதிபறக்க மைதானத்தில் ஈட்டியையும், இரும்புக் குண்டையும் வீசினார் அருண்மொழி. ``இந்த சத்தம் பத்தாது... இன்னும் எனர்ஜியை வெளிப்படுத்துங்கள். அப்போதுதான் இன்னும் அதிக தூரத்தைத் தொடமுடியும்'' என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார், பயிற்சியாளர் ரஞ்சித்.

அருண் மொழி
அருண் மொழி
நந்தகுமார்

ஒரு வழியாகத் தனது டார்கெட்டை முடித்துவிட்ட சந்தோஷத்தில் அருண் மொழி, ``எனக்கு சொந்த ஊர், சங்கரன்கோவில் மடத்துப்பட்டி கிராமம். அப்பா, அம்மா இரண்டு பேரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். சில வருடங்களுக்கு முன், அப்பா இறந்துவிட்டார். தற்போது அம்மா மட்டும்தான் வேலை பார்த்துட்டுவர்றாங்க. எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. எம்.ஏ பி.எட் முடிச்சிருக்கேன்.

எனக்கு சின்ன வயசில் இருந்தே விளையாட்டு பிடிக்கும். ஆனா, பிறந்து 8 மாதத்திலேயே இளம்பிள்ளை வாத (போலியோ) பாதிப்பு ஏற்பட்டது. உடலில் பல்வேறு பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, பல நாள்கள் கடந்து சரியாகிவிட்டது. ஆனால், இரண்டு கால்களை முடக்கிவிட்டது. அன்றிலிருந்து தவழ்ந்து மட்டும்தான் என்னால் செல்லமுடிகிறது.

குண்டு எறியும் பயிற்சியில் அருண் மொழி
குண்டு எறியும் பயிற்சியில் அருண் மொழி
நந்தகுமார்

இதனால், விளையாட ஆசைப்பட்டாலும் விளையாட முடிந்ததில்லை. கல்லூரியில் படித்த எனக்கு, திடீரென்று விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பரிசுகளைப் பெற ஆரம்பித்தேன். மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது எனக்கு மிகப்பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வீல் ரேஸ் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இப்படிப் பல்வேறு இடங்களில் பரிசுபெற்ற எனக்கு, நிரந்தரமாக விளையாட்டுத்துறைக்கு வரவேண்டும் என ஆசை ஏற்பட்டது. அதற்குப் பின், கோச் ரஞ்சித்தின் உதவியை நாடி மதுரைக்கு பயிற்சி எடுப்பதற்காக வந்தேன். நெல்லையிலேயே பயிற்சி எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன.

ஈட்டி எறிதல் பயிற்சியில் அருண் மொழி
ஈட்டி எறிதல் பயிற்சியில் அருண் மொழி
நந்தகுமார்

ஆனால் கோச் ரஞ்சித், அவரும் என்னைப்போல் மாற்றுத்திறனாளியாக உள்ளதால், அவரிடம் பயிற்சிபெறுவது எளிமையாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். அதனால் மதுரை வந்து பயிற்சி எடுக்கிறேன். என்னை ஒரு மாணவியாக நினைக்காமல், சொந்த சகோதரியாக நினைத்து பல உதவிகளைச் செய்துவருகிறார். எனக்குத் துணையாக, என் சகோதரியும் வந்துள்ளார். நாங்கள் தங்கி இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் வாடகையைப் பாதியாகக் குறைக்க அனுமதி பெற்றுத்தந்தார். எங்களுடைய சாப்பாட்டு செலவை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது.

வீட்டில் இருந்து அம்மா அனுப்புகிற சிறிய தொகையின்மூலம் தான் மதுரையில் தங்கி பயிற்சிபெற்றுவருகிறேன். சில மாதங்களுக்கு முன், சென்னையில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில், 45 கிலோ எடை பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றேன். தற்போது, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறேன். மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்றுவருகிறேன். தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு, 2020-ல் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயமாகத், தங்கம் வெல்வேன்.

ஈட்டி எறிதல் பயிற்சி
ஈட்டி எறிதல் பயிற்சி
நந்தகுமார்

தங்கம் வெல்வது மட்டும் என்னுடைய லட்சியம் அல்ல. ஏற்கெனவே உள்ள ரெக்கார்டை உடைத்து, புதிய ரெக்கார்டு பதிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். என்னால் நிச்சயம் முடியும். இது எனக்கான வெற்றியாக கருதாமல், ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் வெற்றியாகவும் கருதி, அதற்காக அதிகம் மெனக்கெட்டு உழைப்பேன். உலக சாதனை படைக்காமல் மதுரையில் இருந்து நெல்லைக்கு போகப்போவதில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு