கட்டுரைகள்
Published:Updated:

ஐந்தாண்டுகள்... அருகில் ஓர் ஆபத்து!

ஐந்தாண்டுகள்... அருகில் ஓர் ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐந்தாண்டுகள்... அருகில் ஓர் ஆபத்து!

மணலி

றுப்பு வெள்ளைப் புகைப்படமாகப் பார்த்த நாகசாகியின் பெருவெடிப்பைக் கண்முன் காட்டிச் சென்றிருக்கிறது பெய்ரூட் சம்பவம். பெய்ரூட் வெடிப்பிற்குப் பிறகு அதே அமோனியம் நைட்ரேட் சென்னைக்கு அருகிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக மளமளவெனச் செய்திகள் பரவின. பயத்தைச் சுமந்து செல்லும் செய்திகளின் வீச்சு கணக்கிட முடியாதது. உடனே பதறிப்போய் ஓர் அறிக்கை வெளியிட்டது சுங்கத்துறை. ‘மணலியில் உள்ள கிடங்கில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்கு 20 கி.மீ தள்ளியே இந்தக் கிடங்கு அமைந்துள்ளது. கிடங்கைச் சுற்றி 2 கி.மீ அளவிற்கு வேறெந்தக் குடியிருப்புகளும் இல்லை’ என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம்.

ஐந்தாண்டுகள்... அருகில் ஓர் ஆபத்து!

ஆனால், அதேநாளில் அங்கு ஆய்வு செய்த தமிழக மாசுக்கப்பாட்டுவாரியம் வெளியிட்ட அறிக்கையிலோ முற்றிலும் மாறான தகவல்கள். ‘கிடங்கிற்கு 700 மீட்டர் தொலைவிலேயே 7000 பேர் வசிக்கும் மணலி நியூ டவுனும், 1.5 கி.மீ தொலைவில் 5000 பேர் வசிக்கும் சடையன்குப்பம் கிராமமும் உள்ளதால் பாதுகாப்பு கருதி அந்த ரசாயனத்தை உடனே வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்’ என்றது அந்த அறிக்கை. இதில் எது உண்மை என்பதையறிய நேரில் சென்றோம்.

நாம் சென்ற நேரம், முதல்கட்டமாக 10 கன்டெயினர்களில் 181 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்டை இடம் மாற்றும் பணி நடந்துவந்தது. ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் இந்த ரசாயனத்தை மொத்தமாக ஏலத்திற்கு எடுத்துள்ளதாகவும் அதனால் படிப்படியாக அங்கு எடுத்துச் செல்லப் படுவதாகவும் விளக்கம் தந்தார்கள் அதிகாரிகள். ஒரு லாரியில் இரண்டு ஓட்டுநர்கள், ஒரு பிரைவேட் செக்யூரிட்டி. நடுவில் எங்கேயும் நிறுத்தக்கூடாது, வெடிக்கும் தன்மை கொண்ட பொருள்கள் எதுவுமே வண்டியில் இருக்கக்கூடாது, எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்கிற அப்டேட்டை இருமாநிலக் காவல்துறைக்கும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே யிருக்கவேண்டும் என்பது போன்ற 12 விதிமுறைகளோடு கிளம்பின பத்து வண்டிகளும்.

அதுவரை கேமராவும் கையுமாய்க் குழுமியிருந்த உள்ளூர்வாசிகள் பிறருக்குத் தகவல் சொல்ல வேகமாய்க் கலைகிறார்கள். நொடிகளில் வெறிச்சோடுகிறது அந்த இடம். அந்தக் கிடங்கைத் தாண்டி நடந்தால் வரவேற்கின்றன குடியிருப்புகள். முண்டிநிற்கும் வீடுகள், வரிசையாக நீளும் கடைகள், திருமண மண்டபங்கள், பெட்ரோல் பங்குகள் என அசலான நடுத்தர ஊர் அது. பால்கனியில் நின்றபடி குழந்தைக்கு வேடிக்கை காட்டிச் சோறூட்டும் பெண், மதிய வெயிலுக்கு இதமாய் மரநிழலில் அமர்ந்து பேசும் வயதானவர்கள், மூடிய கதவுகள் வழியே கசியும் டிவியின் இரைச்சல் எனத் தமிழகத்தின் பெரும்பான்மையான ஊர்களை அப்படியே பிரதிபலிக்கிறது இக்குடியிருப்பும்.

போன நூற்றாண்டில் இங்கு வந்து குடியேறிய பர்மா மக்கள் தொடங்கி நகரத்தின், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் வரை கலவையான மக்கள்தொகை கொண்ட ஊர் இது.

ஐந்தாண்டுகள்... அருகில் ஓர் ஆபத்து!

‘20 வருஷமா இங்கதான் குடும்பத்தோட இருக்கேன். இத்தன நாளா இங்க இவ்ளோ கெமிக்கல் இருக்குன்னே எங்க யாருக்கும் தெரியாது. சொல்லப்போனா இந்தக் கிடங்குகளுக்குள்ள என்னவெல்லாம் கொண்டுபோறாங்கன்னு அங்கே வேலை பார்க்கிற பாதிப்பேருக்கே தெரியாது. முன்னாடியே தெரிஞ்சிருந்தாக்கூட இவ்ளோ பயமாவெல்லாம் இருக்காதுங்க. இப்போ வீடியோவெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம்தான் ரொம்ப பயமா இருக்கு. கண்டிப்பா எல்லாத்தையும் எடுத்துடுவாங்கதானே?’ என பயத்தோடு கேட்கிறார் அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் செல்வம்.

மணலி முழுக்கவே கண்டெயினர்கள் நிற்கும் பிரமாண்ட கிடங்குகள் விரவிக் கிடக்கின்றன. அதிலும் சில கிடங்குகள் அருகிலிருக்கும் வீட்டு மாடியிலிருந்து கல்லெறியும் தூரம்தான். அதனாலேயே அங்கிருக்கும் மக்கள் முகத்தில் பயரேகைகள் எக்கச்சக்கமாய்த் தெரிகின்றன. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஆபத்தை உணர நமக்கு ஒரு பெருவெடிப்பு தேவையாய் இருந்திருக்கிறது. பேரிடர் மேலாண்மையில் நம் கொள்கையே, ‘நடந்தபின் புலம்புவது’ மட்டும்தான். அம்மனநிலை மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.