
படங்கள்: என்.கார்த்திக், தி.கெளதீஸ்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
இலங்கை நம் தொப்புள்கொடி தேசம். செயற்கைக்கோள் மூலம் படம்பிடித்தால் இரண்டு தேசங்க ளுக்கும் இடையில் ஒரு கோடு ஒரு நதி போல ஓடுவது தெரியும். அதுதான் ஆடம்பிரிட்ஜ், ராமர் பாலம் என்றெல்லாம் கருத்துகள் உண்டு.
புவியியல் ரீதியாக மட்டுமல்ல, இதிகாச, புராணங்கள் மற்றும் சரித்திரத்தாலும் இந்தியாவோடு இணைந்ததுதான் இலங்கை. அவற்றின் தடங்களைப் பற்றிக்கொண்டு பயணித்தால், இலங்கை வேறு தேசம் என்னும் உணர்வு நமக்குள் எழவே எழாது. அப்படி யொரு பயணத்தை அண்மையில் மேற்கொள்ள முடிந்தது.
பொருளாதார நெருக்கடி, அரசியல் பிரச்னைகள் என்று பல சிக்கல்களைச் சந்தித்து அவற்றிலிருந்து மெள்ள மீண்டுகொண்டி ருக்கிறது இலங்கை. சுற்றுலாப் பயணிகளின் வரவு கண்டு இலங்கை மக்கள் புன்னகை பூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆடி மாத வளர்பிறைக் காலம், இலங்கையில் திருவிழாக் காலம். அவற்றில் நல்லூர் முருகன் கோயில் திருவிழா, கண்டி எசலா பெரஹரா எனப்படும் புத்தரின் புனிதப்பல் ஊர்வலம், கதிர்காமம் முருகன் கோயில் ஆடிப் பௌர்ணமிப் பெருவிழா ஆகிய மூன்றும் சிறப்பு வாய்ந்தவை. ஒரே பயணத்தில் இவை மூன்றையும் தரிசிக்க முடிந்தது பெரும் பாக்கியம்தான்.
நல்லூர், யாழ்ப்பாணம் அருகே இருக்கும் ஊர். கண்டி, மத்திய மாகாணம். கதிர்காமமோ ஊவா மாகாணத்தில் இருக்கும் சிற்றூர். கொழும்பில் தொடங்கி இந்த மூன்று ஊர் களுக்கும் பயணிப்பது ஒட்டுமொத்த இலங்கை யையும் சுற்றி வருவதைப் போன்றது.

வேல் வடிவாய் அருளும் வேலவன்
கொழும்பிலிருந்து ஏறக்குறைய 400 கி.மீ தொலைவில் உள்ளது யாழ்ப்பாணம். தமிழர்கள் பரவலாக வாழும் இந்தப் பகுதியில்தான் நல்லூர் அமைந்துள்ளது. நல்லூரின் பெருமைமிகு கந்தசாமி கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை கொண்டது என்றாலும், கி.பி 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதாரங்களே கிடைக்கின்றன. `புவனேகவாகு' என்னும் மன்னன் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டினான்; பெருஞ்செல்வங்களைக் கொடை யாக வழங்கினான் என்று சொல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் சொல்லப்படும் கட்டி யத்தை இதற்கு ஆதாரமாகச் சுட்டுகிறார்கள். 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்த போர்ச்சுக்கீசியர்கள், செல்வச் செழிப்பு மிகுந்திருந்த ஆலயங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை இடித்துத் தள்ளினர். இங்கிருந்த கற்களையும் எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையும் தேவாலயமும் கட்டியுள்ளனர் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன்பின் பலகாலம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஆலயத்தை மீட்டெடுக்கப் பாடுபட்டவர் ஆறுமுக நாவலர்.
நல்லூர் கந்தசாமி கோயிலில் இன்று ஆகம விதிகளின்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் விக்ரகம் இல்லை; வேல் ஆயுதமே மூலவராக அருள் பாலிக்கிறது. இங்கு ஆடி மாதப் பௌர்ணமியை ஒட்டி 10 நாள் உற்சவம் நடைபெறும். அப்போது, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
நல்லூரில் கோயில் இருக்கும் வீதிக்குள் நுழையுமுன் நம்மை வரவேற்கிறது பாரதியாரின் சிலை. வீதியின் இருபுறமும் சின்னச் சின்னக் கடைகள்; பெரும்பாலும் தமிழர்கள். கோயிலை நெருங்கிவிட்டோம் என்பதை ஓங்கி ஒலித்த நாகஸ்வரத்தோடு மேளதாளம் சொன்னது.

``இப்போது சாமி ஊர்வலம் வரும். மக்கள் கூட்டத்தில் தொலைந்துபோய்விட நேரும்'' என்று உடன் வந்தவர் சொன்னபோது, `எங்கே மக்கள் கூட்டம்?' என்று சொல்லிச் சிரித்தோம். ஆலய வாசலை நெருங்கினோம். முருகப்
பெருமான் மயில் வாகனராய் ஆலய வாயிலில் எழுந்தருளியிருந்தார். கொஞ்சம் கூட்டம் இருந்தது. அத்தனை பேரும் தமிழர்கள். பாரம்பர்ய உடையில் திருநீறு ருத்ராட்சம் துலங்க நின்றிருந் தனர். நாம் தள்ளி நின்று தரிசித்தோம். விரைவில் வீதியுலா தொடங்கியது.
வியக்கவைத்த வீதியுலா
சுவாமி முன்னகர, பின்னாலேயே மக்கள் கோயிலுக்குள் இருந்து வெளிவர ஆரம்பித்தனர். ஏறக்குறைய பத்தாயிரம் பேருக்கும் மேலான பக்தர்கள் சுவாமியின் பின் சென்றனர். ஆலயத்துக்குள் இத்தனை பேரா இருந்தனர் என்னும் வியப்பு மேலிட்டது.
`அன்று நல்லூருக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்' என்றார் நண்பர். நாம் அந்த வியப்பிலிருந்து விலகி சுவாமியைப் பின்தொடரும் பக்தர்களைப் பார்த்தோம். யாரும் கதைபேசிக்கொண்டு செல்லவில்லை. எல்லோரும் ஏதோ பதிகம் பாடிக்கொண்டும் நாம ஜபம் செய்துகொண்டும் வந்தனர்.
ஒரு சிவனடியார் நடுவில் நிற்க சிறார் கூட்டம் ஒன்று அவரைச் சூழ்ந்திருந்தது. பெற்றோர்கள் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு விலகி நின்றனர். அவர் தேவாரப் பதிகம் பாட, குழந்தைகள் தம் மழலை மொழியில் அதை வாங்கிப் பாடினர். ஊர்வலத்தின் கடைசியாக வந்த அவர்கள் சீரான வேகத்தில் ஓர் ஒழுங்கோடு நடந்தனர். உலா முடிந்ததும் கோயிலைச் சுற்றி யிருக்கும் மண்டபங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஒரு நிகழ்ச்சியில் `சைவம் தழைத்தோங்குக' எனும் தலைப்பில் குழந்தைகள் பங்குபெறும் பட்டிமன்றம் நடந்தது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மட்டுமல்ல, ஆன்மிகமும் குழந்தைகளுக்கு இயல்பாகவே பழக்கமாகிவிடுவதன் ரகசியம் இதுதான்போலும். வேல்வடிவில் அருளும் கந்தனை மனதாரத் துதித்து நல்லூரிலிருந்து புறப்பட்டோம்.

கவின் மிகு கண்டி
யாழ்ப்பாணத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்டு, பின் மூன்று நாள்கள் கழித்து கண்டி வந்து சேர்ந்தோம். கண்டி, மத்திய மாகாணத்தில் இருக்கும் மலைப்பாங்கான பகுதி. எப்போதும் இதமான காற்று வீசிக்கொண்டிருக்கும் இடம்.
இங்குதான் புத்தரின் புனிதப்பல் இருக்கும் புகழ்பெற்ற ஆலயமான `தலதா மாளிகை' அமைந்துள்ளது. `16-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம்வரை கண்டியே இலங்கை மன்னர்களின் தலைநகரம். அப்போது மன்னர்கள் தங்கியிருந்த அரண்மனை வளாகத்துக்குள்ளாகவே தலதா மாளிகை ஆலயமும் அமைந்துள்ளது.
இங்கு நடைபெறும் விழாக்களில் ஒன்று `எசலாபெரஹரா.' `பெரஹரா' என்றால் `ஊர்வலம்' என்று பொருள். புத்தரின் புனிதப்பல் இங்கு எடுத்துவரப்பட்டபோது மாபெரும் ஊர்வலம் ஒன்று நடந்தது என்றும், அன்றுமுதல் இன்றுவரை அது தொடர்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்தத் திருவிழாவின் முக்கிய நோக்கம் மழைப்பொழிவு இயல்பாக நடந்து, விவசாயம் செழிக்க வேண்டும் என்பதுதான். முறையாக ஊர்வலம் நடக்கும் ஆண்டுகளில் பஞ்சம் இன்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.
இந்த ஆண்டு திருவிழாவைக் காண சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடினர். விழாக் கூட்டத்துக்குள் செல்வது மட்டும்தான் நம் கையில். நுழைந்தபின் வெளியே வருவது அவ்வளவு எளிதல்ல! நாட்டின் பிரதான திருவிழா; பௌத்தத் தலைமை மடாதிபதிகள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமான முக்கியஸ்தர்கள் பங்கு கொள்வார்கள் என்பதால் அந்தப் பகுதி முழுமையும் ராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்படும்.

ஜென் யானைகள்
திருவிழா ஊர்வலம் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கும். புத்தரின் பல், அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மீது வைத்து எடுத்துவரப்படும். ஏராளமான யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தில் பங்குபெறும். விண்ணை முட்டும் வாத்திய சத்தங்களுக்கு நடுவே ஜென் துறவிகள் போன்று யானைகள் நிதானமாகவும் கம்பீரமாகவும் நடைபோட்டதைக் காண ஆச்சர்யமாக இருந்தது.
இலங்கையின் பாரம்பர்ய நடனமான தீ நடனம், சவுக்கு நடனம், கண்டியின் பாரம்பர்ய நடனம் ஆகியன ஊர்வலத்தின் சிறப்பம்சங்கள். சுமார் பத்தாயிரம் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். வண்ண வண்ண உடைகள் உடுத்தி அவர்கள் ஆடிவரும் அழகு நம் கண்களுக்கு பெரும் விருந்து.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற மந்திரவாதிகள் சிலர் ஆடிய `கொகொம்ப கங்காரிய' என்னும் பேயோட்டும் சடங்கு நடனமே பிற்காலத்தில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு கண்டி பாரம்பர்ய நடனமானது என்கிறார்கள்.
ஊர்வலத்தின் நடன நிகழ்வுகளில் முக்கியப் பங்கு, தாளக்கருவிகள் இசைப்பவர்களுடையதே. அதிரும் இசையை இடைவெளியின்றி நிகழ்த்தி நடனத்தை உயிர்ப்போடு வைப்பவர்கள் அவர்கள்தான். ஊர்வலம் முடிந்து மக்கள் கலையும்போது நள்ளிரவைக் கடந்திருந்தது.

சிதம்பர ரகசியம் போல் கதிர்காம ரகசியம்
கதிர்காமம், இலங்கை முருகத் தலங்களில் மிக முக்கியமானது. அறுபடை வீடுகளில் இதுவும் ஒரு படைவீடு என்பாரும் உண்டு. வள்ளிக்குறத்தி இந்தப் பகுதியில் வாழ்ந்த வேடுவக் குமரி என்றும், முருகப்பெருமான் காதல்கொண்டு திருமணம் புரிந்தது கதிர்காமத்தில்தான் என்றும் சொல்கிறார்கள்.
ஒரு காலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இடத்தில் சிறிய முருகன் கோயில் இருந்தது. அதை வேடுவர்களே பூஜித்து வந்தனர். கதிர்காமம் கந்தனின் மகிமையை அறிந்த மகான்கள் தேடிவந்து வழிபட்டனர். பலர் இங்கேயே ஜீவசமாதியும் அடைந்திருக்கிறார்கள். இங்கு கருவறையில் முருகப் பெருமான் மயில்மீது ஏறிய கோலம் தாங்கிய ஒரு திரை மட்டுமே உண்டு. திரைக்குப் பின் விக்ரகங்களோ வேலோ கிடையாது. மாறாக ஷடாக்ஷர யந்திரம் இருக்கும் ஒரு பெட்டி மட்டுமே உள்ளது என்கிறார்கள். அதை அங்கு பூஜை செய்யும் வேடுவ இன சந்ததியினரைத் தவிர வேறு யாரும் பார்த்ததில்லை. சிதம்பர ரகசியம் போல கதிர்காமத்திலும் அருவமாகி அருள்கிறார் முருகன். பக்தர்கள் கருவறையில் காணப்படும் திரையை வணங்கிச் செல் கிறார்கள். அருவமோ உருவமோ, அருவுருவமோ, நம்பிவிட்டால் அவன் ஓடிவந்து காப்பான் என்பதற்கு அங்கு கூடும் கூட்டமே சான்று. ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்!

பக்தர்களுக்கு வழிவிடும் வனவிலங்குகள்
அதில் பலர் பாதயாத்திரையாக வருவார்கள். இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான மக்கள் மாதக்கணக்கில் நடந்து வருவார்களாம். வரும் வழியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் உண்டு. அங்கு யாருக்கும் அனுமதியில்லை. காரணம், யானை, புலி என்று பல கொடிய மிருகங்களும் விஷப் பாம்புகளும் வசிக்கும் வனப்பகுதி அது. ஆனால் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அந்த வனப்பகுதி வழியாகவே வரும் வழக்கத்தைப் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அரசாங்கம் அவர்களுக்குத் தனி அடையாள அட்டை கொடுத்து வனத்தில் பிரவேசிக்க அனுமதிக்கிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இத்தனை ஆண்டுகளிலும் ஒருவர்கூட வன விலங்குகளால் தாக்கப்பட்டது இல்லை என்பதுதான். எல்லாம் முருகன் அருள். முருகனே மாறுவேடத்தில் பக்தர்கள் கூட்டத்தோடு வந்து வழிநடத்துவான் என்கிறார்கள் பக்தர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாப் பரவல் காரணமாக இந்த யாத்திரை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. சுமார் முப்பத்தைந் தாயிரம் பயணிகள் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். இதில் பல வெளிநாட்டு பக்தர்களும் அடக்கம்.

நண்பகல் பொழுதில் கதிர்காமத்தில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பல ஊர்களிலிருந்து சிங்கள, தமிழ் பக்தர்கள் வண்டிகட்டிக்கொண்டு வந்து குவியத் தொடங் கினர். பலர் காவடி எடுத்தும் அக்னிச் சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பலர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆங்காங்கே அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. நாமும் கோயிலுக்குள் சென்று வழிபட்டு வந்தோம்.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் மக்கள் சாலையில் இரண்டு பக்கங்களிலும் அமரத் தொடங்கிவிட்டனர். காரணம், இங்கு நடக்கும் பெரஹரா மிகவும் விசேஷம் என்றார்கள்.

மாலை ஏழு மணிக்கு மேல் அலங்கரிக்கப் பட்ட யானைமீது கோயில் கருவறையில் இருக்கும் ஷடாக்ஷர யந்திரப் பெட்டியை வைத்து மேலும் அலங்கரித்தனர். யானைக்குச் சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன. அங்கிருந்த விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்ததும் ஊர்வலம் தொடங்கியது. யானைக்கு முன் கண்கவர் உடைகளில் 60-க்கும் மேற்பட்ட நடனக் குழுக்கள் நடனமாடிக்கொண்டு வந்தன. இங்கு கூடுதலாகத் தமிழர்களின் கலைகளான, ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியனவும் கலந்திருந்தன. பத்துக்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொண்டன. நிறைவில் அறுமுகனின் யந்திரம் அடங்கிய பெட்டியைச் சுமந்த யானை வந்தது.
சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் நிகழ்ந்த ஊர்வலத்தை பக்தர்கள் அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து கண்டுகளித்தனர். பௌத்தத் துறவிகளும் அரசுத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு கந்தனின் யந்திரத்துக்கு மரியாதை செலுத்தினர்.


நள்ளிரவைத் தாண்டிய பிறகே ஊர்வலம் நிறைவுற்றது. அதுவரை இருந்த சப்தம் அடங்கி சாலை அமைதியில் மூழ்கியது. ஊர்வலம் நிறைவுற்ற பின்னும் பலருக்கும் கலைந்துபோக மனமே இல்லாமல் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதுவரை கண்ட காட்சி நம் மனத்துள் ஒரு வானவில்லைப் போல நிலைத்திருந்தது.
இலங்கையில் இன்று ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, பண்பாட்டின் அடிப்படையில் மக்கள் லட்சக் கணக்கில் திரண்டு நின்ற காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
மீண்டும் இந்த வாய்ப்பைப் பெற இன்னும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும். அதற்குள் அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் இலங்கை மீளும் என்று நம்புவோம்.