
தேவை அதிகம் எனத் தெரிந்தவுடன் ஆதம்பாக்கத்தில் தன் வீட்டருகே இருக்கும் ‘ராம்தேவ் சப்பாத்தி’ என்ற கடையை அணுகியிருக்கிறார். அவர்களும் லாக் டெளனால் சிரமத்தில் இருந்திருக்கிறார்கள்.
“நம் ஊருக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, ஊருக்குத் திரும்பும்போது வேண்டிய உணவைக் கொடுத்தனுப்புவது தானே நம் மரபு?’’ புன்னைகையோடு கேட்கிறார் ஸ்ரீனி சுவாமி நாதன். ஊரடங்கின்போது சென்னையிலிருந்து சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய ஆயிரக்கணக்கான மக்களின் பசியாற்றியவர் இவர்.
ஊரடங்கு காரணமாக ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் ரயில் மூலமாகவும் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். அந்த வெம்மையில் சில உயிர்கள் பறிபோக, பல உயிர்களுக்கு உணவும் தண்ணீரும்கூடக் கிடைக்கவில்லை. உயிர் பிழைக்க உணவும் நீரும் தந்திருக்கிறார் ஸ்ரீனி.

“ஊரடங்குல ஒரு நாள் என் காரை எடுக்க அரை கி.மீ நடந்து போகவேண்டி இருந்தது. மாரத்தான் ரன்னரான என்னாலயே அந்த வெயில்ல அரை கிலோ மீட்டர் நடக்க முடியல. ஊரடங்கால குடும்பத்தோடு நடந்தே ஊருக்குப் போறவங்க நிலையை யோசிச்சுப்பார்த்தேன். உணவில்லாம ரயிலில் போறவங்க கஷ்டப்படுறதைப் பத்திப் படிச்சேன். உடனே, என்கிட்ட இருந்த காசுக்குக் கொஞ்சம் உணவு, சானிட்டரி பேட்ஸ், கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு ரயில்வே ஸ்டேஷன் போனேன். போனதும்தான் தேவை ரொம்ப அதிகம்னு தெரிஞ்சது. அன்னைக்கு மே 21. அப்ப தொடங்குச்சு எங்க வேலை” எனச் சொல்லும் ஸ்ரீனி சுவாமிநாதன், வடமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்களை ‘தமிழகத்தின் விருந்தாளிகள்’ என்றே சொல்கிறார்.

தேவை அதிகம் எனத் தெரிந்தவுடன் ஆதம்பாக்கத்தில் தன் வீட்டருகே இருக்கும் ‘ராம்தேவ் சப்பாத்தி’ என்ற கடையை அணுகியிருக்கிறார். அவர்களும் லாக் டெளனால் சிரமத்தில் இருந்திருக்கிறார்கள். கடையையே மூடிவிடலாம் என்ற சூழலில் ஸ்ரீனி சென்று கேட்க, அவர்கள் சப்பாத்திகளைப் பாக்கெட் போட்டுத் தர முன் வந்திருக் கிறார்கள். ஒருவரின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு, பலரின் பசியும் தீரப்போகும் மகிழ்ச்சியில் இரண்டு நாளில் 3,000 பாக்கெட்களைத் தயார் செய்திருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு பேருக்கும் உதவ தன் ஒருவனால் முடியாது என உணர்ந்தவர், சமூக வலைதளம் மூலம் விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார். உதவும் உள்ளங்கள் அள்ளித் தந்திருக்கிறார்கள். பல இல்லத்தரசிகள் நன்கொடையாளர்களைச் சேர்க்கப் பொறுப் பெடுத்துக் கொண்டார்கள். ஈக்காட்டுத்தாங்கலில் பிரெட் பாக்கெட்களும் தயாராகின. வேலைகள் துரிதமாக, தன்னை ஒரு தூதுவனாக முன்னிறுத்திக்கொண்டார் ஸ்ரீனி. மக்கள் தந்த உதவியை வேண்டியவர்களுக்கு டெலிவரி செய்யும் மனிதநேயத் தூதுவர்.

உதவி என்ற வார்த்தையைக்கூட ஸ்ரீனி பயன்படுத்த மறுக்கிறார். “இத நீங்க எடுத்துக்கணும்னு கட்டாயம் இல்லை. நாங்க நண்பர்கள் சேர்ந்து எங்களால முடிஞ்சத செய்ற ஒரு விஷயம்” என இந்தியில் சொல்லிவிட்டுத்தான் எல்லோருக்கும் உணவைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். உழைத்துச் சம்பாதிக்க பிறந்த மண்ணை விட்டு வந்தவர்கள். சுயமரியாதை அதிகமாகவே இருக்குமில்லையா? அதனால் ஸ்ரீனியும் அவர் நண்பர்களும் அந்த விஷயத்தில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு நல்ல மனதின் அன்பை இன்னொரு மனம் உணராமலா போய்விடும்? அந்த மக்களும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றிருக்கிறார்கள். ‘எங்க மாநிலம்கூட எங்களைக் கண்டுக்கல... நீங்க பண்ற இந்த உதவியை மறக்க மாட்டோம். மீண்டும் தமிழகத்துக்குத் திரும்புவோம்’ என நிறைய பேர் இந்தியில் சொல்லியிருக்கிறார்கள். நாள்கள் நகர நகர, நிறைய பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள். அங்கிருப்போரின் தேவையை உணர்ந்து தன் சேவையைக் கட்டமைத்திருக்கிறார் ஸ்ரீனி. உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு ஸ்டேஷனிலே இடம் தந்திருக்கிறார்.

ஸ்டேஷனில் ஒருவர் டீ விற்றுக் கொண்டிருந்தார். ஒரு டீ 10 ரூபாய் என்பதால் குடிக்க நினைத்த பலரும் குடிக்காமலே செல்வதாகத் தெரிய வர, ‘யார் கேட்டாலும் டீ கொடுங்க. பணம் நாங்க தர்றோம்’ என அதற்கும் பொறுப்பெடுத்துக் கொண்டார் ஸ்ரீனி. மே 20 தொடங்கி, வெளிமாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கடைசி ரயில் சென்னையைத் தாண்டும் வரை சென்ட்ரலில்தான் ஸ்ரீனிக்கு வாழ்க்கை. இவரது சேவையைப் பாராட்டி டிஸ்கவரி சேனல், நிதி ஆயோக், ஐக்கிய நாடுகளின் இந்திய அலுவலகம் ஆகியவை சேர்ந்து ‘பாரத் கி மஹாவீர்’ என்ற அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றன. அதைப்பற்றிக் கேட்டால், ‘‘அம்மாகிட்ட சொன்னேன். ‘அடுத்தவங்களுக்கு உதவுறதை இதோட நிறுத்தாத’ன்னு சொன்னாங்க” எனச் சிரிக்கிறார்.

சக மனிதர்களுடனான வேற்றுமைகளைக் கிளறிக் கிளறி வெறுப்பு அரசியலாக மாற்றிப் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலம் இது. அன்பும் இரக்கமும் ஏற்றுக்கொள்ளும் மனமும் இந்த வேற்றுமைகளை எளிதில் வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார் ஸ்ரீனி.