
என் இல்லம் பசுமை இல்லம்
பூக்கள், காய்கறிகள், மூலிகைத் தாவரங்களுடன் நம்மை வரவேற்கிறது சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் ஶ்ரீபிரியாவின் வீடு. தன் வீட்டு மாடியில் 300-க்கும் அதிகமான தொட்டிகளில் 40 வகையான தாவரங்களை வளர்த்து வருகிறார் ஶ்ரீபிரியா.
“செடிகள், குழந்தைகள் மாதிரி. கண்ணும் கருத்துமா பார்த்துக்கிடணும். தினமும் காலையில் களையெடுத்து, உரம் போட்டு, தண்ணீர்விடணும். பிறகு, உரம் தயாரிக்கணும்... இப்படி ஏராளமான வேலைகள் இருந்தாலும்கூட, இதையெல்லாம் செய்றதுக்கு உற்சாகமா இருக்கும். இந்த இடத்துக்கு வந்தாலே நிம்மதி கிடைக்கும். சில வருஷங்களுக்கு முன், என் நண்பர் வீட்டுல மாடித்தோட்டத்தையும், அவங்க அதுல இருந்தே வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்துக்கிடறதையும் பார்த்தேன். உடனே எனக்கும் மாடித்தோட்டம் போட ஆசை வந்தது. அரசு வேளாண் மையம் நடத்தின சில பயிற்சி வகுப்புகளுக்குப் போனேன். நண்பர் களின் அட்வைஸ், புத்தகங்கள், யூடியூப்னு மாடித்தோட்டம் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்கிற ஶ்ரீபிரியா, வீட்டுத் தோட்டம் அமைக்கும் வழிமுறைகளை விளக்குகிறார்.
“கோடைக்காலம் என்பதால் கத்திரி, புடலை, கீரை வகைகள்தாம் இந்த சீஸனுக்கு ஏற்றவை. வீட்டில் அதிக இடம் இருந்தால் புடலை வளர்க்கலாம். தொட்டி என்றால் கத்திரிக்காய்தான் பெஸ்ட் சாய்ஸ்!
கத்திரிக்காய் வளர்ப்பு
தென்னங்கழிவு, மண்புழு உரம் சரிசமமாகக் கலந்து குழித்தட்டுகளில் (வேளாண் மையங்களில் கிடைக்கும்) நிரப்புங்கள். ஒருநாள் முழுவதும் பஞ்சகவ்யாவில் ஊறவைத்த கத்திரிக்காய் விதைகளை ஒவ்வொரு குழிக்கும் ஒன்று என விதையுங்கள்.

15 நாள்களில் விதையிலிருந்து துளிர்விட ஆரம்பிக்கும். குழித்தட்டிலிருந்து நாற்றை எடுத்து தென்னங்கழிவு, மண்புழு உரம் கலந்துவைத்துள்ள பெரிய தொட்டியில் (ஒரு தொட்டிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில்) நட்டு வையுங்கள். நாற்று நட்ட ஒரு மாதத்துக்குள் செடி பூத்து, காய்க்கத் தொடங்கிவிடும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை கத்திரிக்காய் விளைச்சல் அதிகமாக இருக்கும். இதே செடியை முறையாகப் பராமரித்தால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோ கத்திரிக்காயை ஒரு செடி மூலமே அறுவடை செய்ய முடியும்.
அதன் பிறகு, செடியின் காய்ப்புத்தன்மை குறையும். அப்போது செடியில் காய்த்திருக்கும் கத்திரிக்காயை பறிக்காமல், அவை மஞ்சள் நிறமாகும் வரை பழுக்க விடுங்கள். பிறகு, அவற்றை நறுக்கி விதைகளைத் தனியாக எடுத்து உலரவிட்டு சாம்பல் கலந்துவைத்தால் ‘விதை’ ரெடி.
பூச்சிக்கு டாட்டா!
கத்திரிக்காய்ச் செடியில் துளிர்விட்டிருக்கும் பூக்கள் அதிகமாக உதிர ஆரம்பித்தால், கால் லிட்டர் மோரில், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து செடியின் மீது தெளித்தால் பூச்சிகளின் தாக்குதலுக்கு ‘டாட்டா’ சொல்லலாம்.
கருகாமல் தடுக்க...
வெயில் காலத்தில் செடிகள் கருகுவதைத் தடுக்க, அதிக ஹைட்ரஜன் கொண்ட மண்புழு உரம் பயன்படுத்துவதைத் தவிர்த்து, திரவ வடிவிலான பழக்கரைசல், எண்ணெய்க் கரைசல், தேமோர் கரைசல் போன்றவற்றை உரங்களாகப் பயன்படுத்தலாம்.
பழக்கரைசல் தயாரிக்க...
தேவையானவை: நன்கு கனிந்த வாழைப்பழம், பப்பாளி, பறங்கிக்காய் - தலா அரை கிலோ, பொடித்த வெல்லம் - ஒரு கிலோ.
பழங்களைத் தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கி, வெல்லத்துடன் சேர்த்து, கைகளால் பிசைந்து கூழாக்கவும். இத்துடன் இரண்டரை லிட்டர் தண்ணீர் கலந்து காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி மூடி, 21 நாள்கள் திறக்காமல் வைக்கவும். அதன்பிறகு திறந்தால், கரைசலின் மேல் வெள்ளை ஏடு படிந்திருக்கும். பெரிய துளைகள்கொண்ட வடிகட்டியில் பழக்கரைசல் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும். அதிலிருந்து 20 மி.லி கரைசலை எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளின் மேல் தெளித்தால் வெயில் காலத்திலும் அவை செழித்து வளரும்.

எண்ணெய் கரைசல் தயாரிக்க...
வேப்பெண்ணெய், கடலை எண்ணெய், புங்கை எண்ணெய் மூன்றையும் தலா 50 மி.லி எடுத்து ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதில் இரண்டு லிட்டர் தண்ணீர் கலந்து தினமும் செடிகளின் மீது தெளித்து, பூச்சி வெட்டுத் தாக்குதலில் இருந்து செடியைப் பாதுகாக்கலாம்.
கிச்சன் கார்டன்!
கிச்சனில் சிறிய தொட்டி வைத்து வெந்தயக்கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற வற்றை வளர்க்கலாம்.
ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். இனி தொட்டியில் அரை பகுதி அளவுக்கு மணல், எரு, மண் புழு உரம் மூன்றையும் சரிசமமாகக் கலந்து நிரப்புங்கள். இதில் தண்ணீர் வடித்த வெந்தயத்தைத் தூவி ஒரு கைப்பிடி அளவு மணலால் மூடுங்கள். தினமும் தண்ணீர் தெளித்துவர, 25 நாள்களில் வெந்தயக்கீரையை அறுவடை செய்துவிடலாம்.
ஒவ்வொரு முறையும் தொட்டியில் துளிர்விட்டிருக்கும் மொத்தக் கீரைகளை அறுவடை செய்து, மீண்டும் முதலில் இருந்து விதை விதைக்க வேண்டும்.
கொத்தமல்லித்தழைக்கு, அதன் விதைகளை இரண்டாக உடைத்து வெந்தயக் கீரைக்குச் சொன்னது போலவே ஊறவைத்து விதைத்து அறுவடை செய்ய வேண்டும்.