மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 4

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இரண்டாம் பாகம்

திருவரங்கம் திருக்கோயில் அந்நிய படையெடுப்புக்கு ஆளான நிலையில், அந்த ஆலயத்தைக் காக்கும் பொருட்டு பலரும் உயிர்த் தியாகம் செய்தார்கள். அதேநேரம், கோயிலுக்கு வெளியே சுதர்சனசூரியின் புத்திரர்களுடன் கருடஜபம் புரிந்த வேதாந்ததேசிகர், காஞ்சிக்குப் புறப்பட சித்தமானார்.

அவரது ஜபத்தின் விளைவாகவும் பிள்ளை லோகாச்சார்யருடைய பெரும் பக்தியின் விளைவாகவும், எம்பெருமான் பெருமாள் மற்றும் பிராட்டியின் உற்சவ மூர்த்தங்களைப் பல்லக்கில் சுமந்தபடி, மதுரையை நெருங்கியது பிள்ளைலோகாசார்யரின் குழு.

மதுரை ஆனைமலையை ஒட்டியுள்ள திருமோகூர் கோயில், அரங்கநாத பெருமானின் உற்சவ மூர்த்தங்களை வரவேற்கத் தயாரானது. களவாட வந்த கள்ளர்கள் பெரும் துணையாக உடன் வந்தனர். ஆனைமலைக்கு ஒரு புறம் திருமோகூர் என்றால், அதன் முடிந்த பரப்பில் கொடிக்குளம் எனும் ஜ்யோதிஷக்குடி என்கிற ஊர் இருந்தது.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்


திருமோகூர் திருத்தலம் எம்பெருமானின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். மோகினியூர், மோகன க்ஷேத்திரம் என்றெல்லாமும் இந்த ஊருக்கு பெயர்கள் உண்டு. மிக விசேஷமான தலம்.

கிருத யுகத்தில் துர்வாச முனிவரை மதிக்கத் தவறியதால் சாபம் பெற்ற இந்திரனுக்கு, இந்தத் தலத்தில்தான் சாபவிமோசனம் கிடைத்தது. துவாபர யுகத்தில், புலஸ்தியர் என்ற முனிவருக்கு எம்பெருமான் மோகினி வடிவில் காட்சி தந்து அருளினார். இதன் பின்புலத்தில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நிகழ்ந்தன.

அமிர்தத்தின் பொருட்டு பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் இறுதியாகவே கிடைத்தது. அந்த அமிர்தத்தைப் பங்கு போட்டுக்கொள்ள தேவர்களும் அசுரர்களும் தங்களுக்குள் போட்டிபோட்டுக் கொண்டனர். அந்த வேளையில், தேவ-அசுரரின் போட்டியைத் தடுப்பதற்காக எம்பெருமான் மோகினி அவதாரம் எடுத்தார்.

அவ்வாறு அவர் அவதாரம் எடுத்தது திருமோகூர் தலத்தில்தான். ஆகவே, இத்தலத்தில் பிரம்மனும் தவமியற்றினான். பெரும் சிறப்புகள் பல கொண்ட திருமோகூர் கோயிலில் எம்பெருமான் காளமேகப்பெருமாளாகக் காட்சி தருகிறார். வழித்துணை பெருமாள் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.

வாழ்வின் முடிவில் நம் ஜீவாத்மாவானது பரகதி அடையச் செல்லும் தருணம், இந்தப் பெருமாளின் அருள் வழித்துணையாக வரும் என்பர். அதனாலேயே ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இங்கு பாசுரங்களைப் பாடினர். இப்படிப்பட்ட இந்த ஆலயத்தில்தான் எம்பெருமான் பிள்ளை லோகாச்சாரியாருடன் உள்புகுந்து அழகிய மணவாளனாக எழுந்தருளினார்.

எது எப்படியோ... வேதாந்த தேசிகரின் பிரார்த்தனை ஈடேறிவிட்டது. எம்பெருமானின் உற்சவ மூர்த்தங்கள் திருவரங்கம் விட்டு யாதொரு பாதகமும் இன்றி, மதுரையம்பதியை அடைந்துவிட்டன.

பின்னர் திருமோகூரிலிருந்து அருகிலுள்ள ஜ்யோதிஷக்குடி எனும் ஊருக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஜோதி விருட்சங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்தபடியால், ஜ்யோதிஷக்குடி எனும் பெயர் பெற்றிருந்த இவ்வூரில்தான், அழகிய மணவாளப் பெருமான் அடைக்கலமானார்.

முதலில் அயோத்திக்கும் பின் சோழ நாட்டுக்கும் உரியவராகத் திகழ்ந்த எம்பெருமான், பூவுலகம் முழுவதுமே என் படைப்பு எனச் சொல்வதுபோன்று, பாண்டிய நாட்டுக்கும் சிறிதுகாலம் உரியவர் ஆனார்.

எம்பெருமானின் உற்சவ சொரூபம் ஜ்யோதிஷக்குடி வந்ததை அறிந்து, பாண்டி நாட்டு வைணவர்கள் பெரும் உற்சாகத்துடன் திரண்டுவரத் தொடங்கினர். வந்தவர்களில் சிலர் ‘வாழ்க மிலேச்சன்’ என்றனர்.

``அவனைப் போய் வாழ்த்துவதா?’’ என்று சிலர் எதிர் கேள்வி கேட்டனர்.

``அப்படி மிலேச்சர்கள் மட்டும் வராது போயிருந்தால், எம்பெருமான் இங்கு வந்திருப்பானா? இல்லை எங்களுக்குத்தான் அவன் தரிசனம் வாய்த்திருக்குமா?’’ என்று திருப்பிக் கேட்டனர் மிலேச்சரை வாழ்த்தியவர்கள்.

பிள்ளை லோகாசார்யருக்குப் பாண்டிய அரசின் சகாயம் கிடைத்தது. திருவரங்கத்தைக் குறி வைத்தது போல, அந்த வேளையில் மிலேச்சன் மதுரையைக் குறிவைக்கவில்லை. பிள்ளை லோகாசார்யரும் எம்பெருமானுக்கு நித்திய ஆராதனைகளைச் செய்யலானார். திருவரங்கத்தை விட்டுப் பிரிந்து வந்த துயரமும், அங்கேயே வாழ இயலாதுபோன வருத்தமும்... குறிப்பாக அந்த ஆலயத்தை மிலேச்சர் பொருட்டு பூட்டியதெல்லாமும் அவர் உள்ளத்தில் பெரும் அழுத்தத்தை உருவாக்கிக் கண்ணீர் சிந்தவைத்தன.

அந்தத் துக்கமே அவருக்குப் பகையாகி போனது. நூறு வயதைக் கடந்தும் மிக ஆரோக்கியமாக... முதுமையிலும் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தது போல வாழ்ந்தவர், ஒருநாள் எம்பெருமானின் திருவடிகளை அடைந்தார்.

அதன்பின் எம்பெருமானும் கொடிக்குளமாகிய ஜ்யோதிஷக்குடியிலேயே தங்கிவிடாமல் அழகர்மலை, எட்டயபுரம், ஆழ்வார்திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, மேல்கோட்டை, சத்தியமங்கலம், திரும்பவும் மேல்கோட்டை... பின்னர் அங்கிருந்து திருமலை என்று ஒரு நெடும்பயணம் மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம், அவர் பாதம் பட்டதால் தோஷங்கள் விலகின; தெய்வாம்சம் மீண்டும் பொழியத் தொடங்கியது. இதெல்லாமே ஒரு நாளிலோ இல்லை ஒரு வருடத்திலோ நடந்துவிடவில்லை. ஏறத்தாழ 48 முதல் 60 ஆண்டுகள் இதற்கு தேவைப்பட்டன. உலகைப் படைத்து, அதில் உயிர்களைப் படைத்து, அனைவரையும் ஆட்டுவிக்கும் அருளாளன், நமக்காக தன்னையும் ஆட்டுவித்துக் கொண்டான்.

ஒரு துன்பம் என்பது பஞ்ச பூதங்களால்தான் ஏற்படும் என்றில்லை; மனிதர்களாலும் ஏற்படக் கூடும். அப்போது எப்படி எப்படியெல் லாம் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்குச் சான்றாக மாறியது அந்தக் காலக்கட்டம்.

சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதுமான அன்றாட பொழுதுகள் வரலாறு ஆவதில்லை. சோதனையும் வேதனையுமான பொழுதுகளே வரலாறுகளாகின்றன; காலத்தால் நினைக்கவும் படுகின்றன. இதில் இன்பமாக இருந்த நாட்களுக்குக் கூட வரலாற்றில் இடம் இல்லை; துன்பமே நினைக்கப்படுகிறது. இன்பமான நாள்களின் மதிப்பும், துன்பம் சூழ்ந்த நாட்களாலேயே தெரியவும் வருகிறது.

பிள்ளைலோகாசார்யரால் திருவரங்கத்தை விட்டுப்பிரிந்த அழகிய மணவாளனாகிய திருவரங்கன், அதன்பிறகு திருவரங்கத்துக்குத் திரும்பி தனக்கான உற்சவாதிகளைக் காண தொடங்கியது, ஒரு சிலிர்ப்பூட்டும் வரலாறாகும்.

திருவரங்க ஆலயத்திலுள்ள ஒரு கல்வெட்டுச் செய்தி மூலமாகவும் இந்த உண்மையை நாம் அறியமுடிகிறது. கி.பி. 1371, பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17-ம் தேதியன்று அழகிய மணவாளனாகிய திருவரங்கன், திருவரங்கத்தில் திரும்ப கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருளியதை அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வடமொழியில் உள்ளது. அதன் தமிழாக்கம் இதுதான்... `ஸ்வஸ்திஸ்ரீசகாப்தம் 1293 - உலகத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் கருமைநிறச் சிகரங்களுடன் கூடிய அஞ்சனாத்திரி மலையிலிருந்து அரங்கனையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் கொணர்ந்து, செஞ்சியில் பூஜை வழிபாடுகள் செய்த கோபணராயன் மிலேச்சர்களை வென்றான். ஸ்ரீரங்கராஜனையும், லட்சுமியையும், பூதேவியையும் அவர்களுக்கே உரிய திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்தான்'.

இந்தக் கல்வெட்டுச் செய்தியில் காணப்படும் கோபணராயன் என்பவன் யார் என்றும், இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்கிற இடைப் பட்ட வரலாற்றையும் இனி காண்போம்.

பொதுவில் ஒரு வரலாறு என்பது கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு கள், ஓலைகள், இதுபோக அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எழுதிய நூல்களைக் கொண்டே எழுதப்படுகின்றன. அந்த வகையில், திருவரங்க வரலாற்றில் துலுக்க நாச்சியார் குறித்த செய்திகள் இருவிதமாகக் காணக் கிடைக்கின்றன.

ஒன்று ஸ்ரீராமானுஜர் காலத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. (அந்த வரலாற்றை ரங்கராஜ்ஜியம் முதல் பாகத்தில் கண்டோம்). ஸ்ரீராமானுஜர் டெல்லி வரை சென்று அங்குள்ள சுல்தானைச் சந்தித்துப் பேசி, திருவரங்கத்திலிருந்து மிலேச்சர்களால் கலைப்பொருள் எனக் கருதி கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட அழகிய மணவாளனை மீட்டு வந்தார். அவருடன் சுல்தானின் சகோதரியும் திருநாராயணபுரம் வந்து, அங்கேயே தங்கினாள். அவளே பின்னாளில் துலுக்க நாச்சியார் என்றானாள் என்பது ஒரு வரலாறு.

அதேபோல் கரம்பதூரில் வாழ்ந்த பெண் ஒருத்தி. எம்பெருமான் மிலேச்சர்களால் களவாடப் பட்டு டெல்லி சென்றதை அறிந்தாள். தன்னை ஒரு மிலேச்சப் பெண்ணாக மாற்றிக்கொண்டு டெல்லி வரை சென்று, சுல்தானின் அரண்மனைக்குள் நுழைந்து, அங்கு அந்தப்புரத்தில் சுல்தானின் தங்கையான சுரதாணியிடம் எம்பெருமானின் விக்கிரகம் இருப்பதை அறிந்துக்கொண்டு திருவரங்கம் திரும்பினாள்.

பின் அரையர்கள் டெல்லி சென்று ஜக்கினி என்கிற நாட்டியத்தாலே சுல்தானை மகிழச் செய்தனர். அவன் `என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்று கேட்டிட, `தங்கள் வசம் உள்ள எங்களின் பெருமாள் எங்களுக்கு வேண்டும்’ என்று கேட்டனர். அவனும் `இருந்தால் எடுத்துச் செல்க’ என்று கூறிட, அவர்கள் சுரதாணி அறியா வண்ணம் அழகிய மணவாளனாகிய எம்பெருமா னின் உற்சவத் திருமேனியை அங்கிருந்து எடுத்து வந்தனர்.

அவர்கள் சென்றபிறகு உண்மை அறிந்த சுரதாணி, பின்தொடர்ந்து வந்து அத்திருமேனியை அடைய முயன்றாள். அவள் வசம் சிக்காமல் இருக்க, அத்திருமேனி திருமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கேயே ஏறக்குறைய 58 வருடங்கள் எம்பெருமான் இருந்தார்.

அதன்பிறகு, சந்திரகிரி மன்னன் செய்த உதவியால் எம்பெருமான் மீண்டும் திருவரங்கத்தை அடைந்தார் என்பது இன்னொரு வரலாற்றுச் செய்தி (இந்த இரண்டையுமே நாம் முதல் பாகத்தில் கண்டோம்).

இந்த இரண்டிலும் பொதுவான ஒரு விஷயம், எம்பெருமான் கடத்தப்பட்டதும் அவர் மீட்கப்பட்டதும்தான். மீட்கப்பட்ட விதங்களில்தான் வேறுபாடுகள் தெரிகின்றன. ஒரே சம்பவம் இருவிதமாகப் பார்க்கப்பட்டு பதியப்பட்டு விட்டதாகவும் கருத இடமிருக்கிறது. அது ஒருபுறமிருக்க ஸ்ரீபிள்ளை லோகாசார்யரால் எடுத்துச் செல்லப்பட்ட உற்சவ மூர்த்தம் கோபண ராயனால் திரும்ப திருவரங்கம் சேர்ந்த சம்பவம், திருவரங்கத்தில் உள்ள கல்வெட்டில் மட்டுமன்றி, `மதுரா விஜயம்’ என்கிற ஒரு நூலின் மூலமாகவும் உறுதியாகிறது.

இந்த நூல் வட மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியது கங்காதேவி என்கிற ஒரு பெண்ணரசி. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் ஹரிஹர - புக்கர் சகோதரர்கள். இவர்களின் வாரிசான பெரிய கம்பண்ணன் என்பவரின் மனைவியான கங்காதேவி ஓர் ஆச்சரியமூட்டும் பாத்திரமாவாள்!

-தொடரும்...