அரசியல்
Published:Updated:

மாதவ ராவ் மரணம்... இடைத்தேர்தல் ஜுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்!

ஸ்ரீவில்லிபுத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீவில்லிபுத்தூர்

நான் பணம் சம்பாதிக்கணும்கிற எண்ணத்துல போட்டியிடலை. மக்களுக்கு என்னால முடிஞ்ச நல்லதைச் செய்யணும்னுதான் தேர்தல்ல நிக்குறேன்

தேர்தல் முடிவுகள் தெரியாமலேயே கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ். ‘‘ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கம்போல் வாக்குகள் எண்ணப்படும். ஒருவேளை மாதவ ராவ் வெற்றிபெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்’’ என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்ததை அடுத்து, தொகுதியில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

மாதவ ராவ்
மாதவ ராவ்

வழக்கறிஞரும், பெட்ரோல் பங்க் உரிமையா ளருமான மாதவராவ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டு வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் பீட்டர் அல்போன்ஸ், மாணிக்கம் தாகூர் ஆகியோர் இவருக்கு நெருங்கிய நண்பர்கள். மாணிக்கம் தாகூர் மூலம் இந்தமுறைதான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு உற்சாகமாகப் பிரசாரத்தில் இறங்கியவர், ‘‘நான் பணம் சம்பாதிக்கணும்கிற எண்ணத்துல போட்டியிடலை. மக்களுக்கு என்னால முடிஞ்ச நல்லதைச் செய்யணும்னுதான் தேர்தல்ல நிக்குறேன். நான் எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டா, என்னோட மாதச் சம்பளத்தைப் பின்தங்கிய குடும்பத்து மாணவர்களோட கல்விக்காகச் செலவிடுவேன். இந்தத் தொகுதியை முன்மாதிரி தொகுதியா மாத்துவேன்’’ என்று பிரசாரம் செய்தார்.

ஆனால், முதல் நாள் பிரசாரம் முடித்துவிட்டு வந்தபோதே மாதவ ராவுக்குக் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் ஏற்பட, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த மூன்றாண்டு களுக்கு முன்பு இவரின் மனைவியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தநிலையில், மாதவ ராவின் ஒரே மகள் திவ்யா ராவ், அப்பாவுக்காகத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 27 வயதான திவ்யா ராவ், எட்டு மாத கைக்குழந் தையுடன் அப்பாவுக்காகப் பிரசாரம் செய்தது, கட்சியினருக்கு நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது. கள நிலவரமும் மாதவ ராவுக்குச் சாதகமாகவே இருந்த நிலையில், நுரையீரல் தொற்று தீவிரமடைந்து மரணத்தைத் தழுவியிருக்கிறார்.

மாதவ ராவ் மரணம்... இடைத்தேர்தல் ஜுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்!

‘‘வெற்றியைச் சந்திக்காமலேயே உயிரை விட்டுவிட்டார்’’ என்று ஆதங்கப்படும் கட்சியினர், ‘‘மாதவ ராவ் வெற்றிபெற்று தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், அவரின் மகள் திவ்யாவே வேட்பாளர் ஆக்கப்படலாம்” என்று சொல்பவர்கள் அதற்கு முன்னுதாரணமாக கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில், மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு கட்சித் தலைமை சீட் கொடுத்ததைக் குறிப்பிடுகிறார்கள். அத்துடன், வழக்கம்போல் கட்சியில் வேறு சிலரும் இப்போதே இடைத்தேர்தல் சீட்டுக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் தலைமையிடம் லாபி செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்களாம்.