சமூகம்
Published:Updated:

“ஸ்டாலின் தாத்தாவுக்கு தேங்க்ஸ்!” - குரல் கொடுத்த ஜூ.வி... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

ஸ்டாலின் தாத்தா சொல்லித்தான் எங்க வீட்டுக்கு கார்ல நிறைய பேர் வந்தாங்க. எனக்குச் சீக்கிரமே உடம்பு சரியாகிடும்னு சொன்னாங்க.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தோல் உரியும் விநோத நோயால், ரண வேதனையை அனுபவித்துவரும் 11 வயது சிறுமி கிரிஜா குறித்து, கடந்த 28-12-2022 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘தொடாத... கிட்டவராதனு விரட்டுறாங்க... துடிக்கும் சிறுமி... கலங்கும் தாய்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான சில மணி நேரத்திலேயே, கட்டுரை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் செல்ல, உடனடியாக அமைச்சர் கே.என்.நேருவை போனில் அழைத்து ‘சம்பந்தப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து, அந்தச் சிறுமிக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்யுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

“ஸ்டாலின் தாத்தாவுக்கு தேங்க்ஸ்!” - குரல் கொடுத்த ஜூ.வி... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ-க்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், தாசில்தார், வி.ஏ.ஓ., தோல் நோய் மருத்துவர்கள் அடங்கிய டீம் கிரிஜாவின் வீட்டுக்கு விரைந்திருக்கிறது. அங்கு, சிறுமியின் உடல்நிலை குறித்து விசாரித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘குழந்தையின் நிலைமையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. நான் அதிகாரிங்ககிட்டயும் டாக்டர்கிட்டயும் நல்லா கவனிக்கச் சொல்றேன். கவலைப்படாதீங்க..!’ என்று ஆறுதல் சொன்னதோடு, மருத்துவச் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்திருக்கிறார். மேலும், ஆட்சியர் பிரதீப்குமார், ‘உங்களுக்கு அரசு வீடு அலாட் செய்யச்சொல்றேன்’ என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். தற்போது சிறுமி கிரிஜா, திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் சிறப்பு கவனிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

“ஸ்டாலின் தாத்தாவுக்கு தேங்க்ஸ்!” - குரல் கொடுத்த ஜூ.வி... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!
“ஸ்டாலின் தாத்தாவுக்கு தேங்க்ஸ்!” - குரல் கொடுத்த ஜூ.வி... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

கிரிஜாவிடம் பேசினோம். “ஸ்டாலின் தாத்தா சொல்லித்தான் எங்க வீட்டுக்கு கார்ல நிறைய பேர் வந்தாங்க. எனக்குச் சீக்கிரமே உடம்பு சரியாகிடும்னு சொன்னாங்க. கலெக்டர் சார் என் கையைப் பிடிச்சு ஒரு ஃபிரெண்டு மாதிரி பேசுனது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. ஸ்டாலின் தாத்தாவுக்கும், எங்க வீட்டுக்கு வந்த எல்லா சாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்ற சிறுமியின் முகத்தில் ஒரு புது நம்பிக்கையைக் காண முடிந்தது. அரசின் உதவியைத் தாண்டி, செய்தியைப் படித்த பலரும் சிறுமியின் குடும்பத்துக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார்கள்.

“ஸ்டாலின் தாத்தாவுக்கு தேங்க்ஸ்!” - குரல் கொடுத்த ஜூ.வி... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

வீடுதேடிச் சென்ற மருத்துவக்குழு...உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் சூர்யா, விஜய் இருவரின் தசைநார் சிதைவுநோய் பாதிப்பு குறித்து, “வீல்சேர்தான் வாழ்க்கை! - தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்... மகன்களுக்காக மருகும் தாய்!” என்ற தலைப்பில் 27-11-2022 தேதியிட்ட இதழில் கட்டுரை பிரசுரித்தோம். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், `மக்களைத் தேடி மருத்துவம் குழு’ சிறுவர்களின் வீட்டுக்குச் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்தது. மேலும், நோயின் தன்மையறிந்து சிகிச்சையளிக்கவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து உதவிகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. வாடகை வீட்டில் வசித்துவரும் லோகநாதன்-கோமதி தம்பதிக்கு வீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி தந்திருக்கிறது.

“ஸ்டாலின் தாத்தாவுக்கு தேங்க்ஸ்!” - குரல் கொடுத்த ஜூ.வி... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

விநோத நோயால் துடித்த சிறுவன்... சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த அமைச்சர்!

உடல் மற்றும் மனநிலைக் குறைபாட்டால் அவதிப்படும் வேலூர் சிறுவன் சரண்சங்கீத்தின் துயரம் குறித்து “வலிக்குது அம்மா..! - விநோத நோயால் துடிக்கும் மகன்... பரிதவிக்கும் தாய்... உதவி கேட்கும் குடும்பம்” என 30-11-2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான அன்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன், சரண்சங்கீத்தின் தாய் வளர்மதியைத் தொடர்புகொண்டு, “நீங்கள் படும் துயரத்தை ஜூ.வி-யில் படித்துத் தெரிந்துகொண்டேன். கவலைப்பட வேண்டாம். உங்கள் மகனுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, சிறுவனுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், `சரண்சங்கீத் குடும்பத்துக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு, மாதம்தோறும் மளிகைப் பொருள்கள், மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும்’ என உறுதியளித்திருக்கிறார், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ., ஏ.பி.நந்தகுமார்.

குரலற்றவர்களின் குரலைத் தொடர்ந்து ஒலிப்பதே ஜூ.வி-யின் நோக்கம். அந்தக் குரலுக்குத் தமிழக அரசும் பொதுமக்களும் செவி சாய்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.