Published:Updated:

சிறப்புப் பொருளாதார அந்தஸ்தை இழக்கும் ஸ்டெர்லைட் ஆலை - மத்திய அமைச்சகம் தகவல்!

தூத்துக்குடி சிப்காட்டில் செயல்பட இருந்த இரண்டாவது ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த ’காப்பருக்கான சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து’ ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி சிப்காட்டில் செயல்பட இருந்த இரண்டாவது ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த `காப்பருக்கான சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து’ ரத்து செய்யப்பட உள்ளது. மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் நெல்லையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் என்பவர் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் 102.31 ஹெக்டேர் பரப்பளவில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 1994-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலை
ஸ்டெர்லைட் காப்பர் ஆலை

இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய ஆலை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இரண்டாவது காப்பர் ஆலையை 128.805 ஹெக்டேர் பரப்பளவில் சிப்காட் வளாகத்திலேயே அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலை அமைப்பதை எதிர்த்தும் முதல் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த நிகழ்வுகளுக்கு முன்பாகவே நெல்லையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான முத்துராமன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தூத்துக்குடியில் அமைய இருக்கும் ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலைக்கு சிப்காட் நிறுவனம் சட்ட விரோதமாக நிலம் வழங்கியிருக்கிறது. அதனால் ஆலைக்கு இடம் ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இதனிடையே, வேதாந்தா நிறுவனத்தின் இரண்டாவது ஆலையானது மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் 2013-ம் ஆண்டில் ’காப்பருக்கான சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து’ பெற்றது. இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வரி இல்லாமல் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்தச் சிறப்பு அந்தஸ்து மூலமாக ஸ்டெர்லைட் நிறுவனம் வரி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து 105 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலைக்கான இந்தச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் முறையிட்டிருந்தார். அவர் அளித்த இந்தப் புகார் தொடர்பாக இதுவரை விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்து வந்த மத்திய அமைச்சகம், இப்போது மனுதாரர் முத்துராமனுக்கு அனுப்பியிருக்கும் பதிலில் வேதாந்தா நிறுவனமே தாமாக முன்வந்து சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்தை விலக்கிக்கொள்வதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஆலை நிர்வாகத்துக்குப் பெரும் பின்னடைவு எனக் குறிப்பிடும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், தொடர்ந்து சட்டப் போராட்டத்திலும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.