ஆலையைத் திறக்கக் கோரிக்கை! - ‘வேதாந்தா’விடம் விலை போனார்களா துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டோர்?

ஸ்டெர்லைட் ஆலையின் மீது பரப்பப்பட்டுவந்த குற்றச்சாட்டுகளெல்லாம் வதந்தி என மக்கள் இப்போது புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பின்னர் மூடப்பட்டுவிட்ட ‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என ஆலைத்தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதேநேரத்தில் எதிர்ப்பாளர்களோ, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னிறுத்தி ‘ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது’ என தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர்.
இந்த நிலையில், தங்கம், ஜோயல் உள்ளிட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களே, ‘ஆலையைத் திறக்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பது யாரும் எதிர்பாராத திருப்பம். இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களிடம் பேசியபோது, “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் 3,000 பக்க அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி எங்கேயும், எந்தக் குறையும் சொல்லப்படவில்லை. நாங்களும்கூட ஆலைக்கு எதிராக எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கச் சென்றபோது, போலீஸாரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நாங்களும் காயமடைந்தோம்.

அரசு எங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அளித்ததே தவிர, நிரந்த வாழ்வாதாரத்துக்காக வேலைவாய்ப்பு எதுவும் வழங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மூடிக்கிடப்பதால் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். ‘ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது’ எனப் போராட்டக்காரர்கள் மனு அளிப்பதுபோல, ‘மீண்டும் ஆலையைத் திறக்க வேண்டும்’ என மனு அளிக்க எங்களுக்கும் உரிமை இருக்கிறது. யாரின் தூண்டுதலிலும் நாங்கள் இப்படிச் சொல்லவில்லை” என்றனர்.
‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்குக் காரணமே ஆலைத்தரப்புதான் என்பது எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 16 பேருக்கும் ஆலைத்தரப்பு தலா இரண்டரை லட்ச ரூபாயைக் கொடுத்ததுடன், அவர்கள் விரும்பும் தொழிலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அவர்களும் ‘வேதாந்தா’ கொடுத்த பணத்துக்கு விலைபோய்விட்டார்கள். அவர்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. தாங்கள் செய்யும் இந்தத் தவறைப் பின்னாளில் அவர்களே உணர்வார்கள். மீண்டும் ஆலை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை. அப்படி அனுமதித்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் சமுதாய வளர்ச்சித்துறைத் தலைவர் சுந்தர்ராஜிடம் விளக்கம் கேட்டோம். “ஸ்டெர்லைட் ஆலையின் மீது பரப்பப்பட்டுவந்த குற்றச்சாட்டுகளெல்லாம் வதந்தி என மக்கள் இப்போது புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆலை திறக்கப்பட வேண்டும் என மக்களே தன்னெழுச்சியாக மனுக்களைக் கொடுத்துவருகிறார்கள். இதில் ஆலையின் தூண்டுதல் எதுவுமில்லை” என்றார்.