உங்களுக்குத் தெரிந்த ஒரு டெக் ஜாம்பவானின் பெயரைக் கூறுங்கள் எனக் கேட்டால் பலருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். இவர் கணையப் புற்றுநோயின் காரணமாக 2011-ல் தனது 56-வது வயதில் காலமானார். இன்று ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக ஜொலிப்பதற்கு அடித்தளம் போட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது எல்லோரும் அறிந்ததே. இவரின் தோற்றம் பற்றி யோசித்தால் முதலில் நினைவுக்கு வருவது கறுப்பு நிற டீ-சர்ட்டும், ஜீன்ஸ் மற்றும் ஷூ மட்டும்தான். தனது பெரும்பாலான நாட்களில் இந்த ஒரே பேட்டர்னில் உடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ், 1970ஸ் மற்றும் 1980ஸ் காலகட்டத்தில் 'பிர்கன்ஸ்டாக் அரிசோனா (Birkenstock Arizona)' என்ற காலணியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்தப் பழைய காலணியை 'Julien's Auctions' என்ற பிரபல ஏலம் விடும் நிறுவனம் ஏலத்தில் விடுவதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் $60,000 முதல் $80,000 (₹48,32,889- ₹64,43,852) வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பற்றி குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம் 'ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் பல முக்கிய தருணங்களில் ஜாப்ஸ் இந்த செருப்புகளை அணிந்துள்ளார்' என்றும் 'இந்த காலணிகள் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்குப் பிறகு அவரின் வீட்டு மேலாளரான மார்க் ஷெஃப் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.' என்றும் குறிப்பிட்டுள்ளது.