அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அபராதமா... அனுமதியா? - திருப்பூர் கல்குவாரி சர்ச்சை!

திருப்பூர் கல்குவாரி
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பூர் கல்குவாரி

கல்குவாரிகளில் விதிமீறல்கள் இருப்பதைக் கண்டறிய வட்டாட்சியர் தலைமையில் தாலுகா அளவிலான குழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டு, 10.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கல்குவாரியை மூடாமல், மீண்டும் இயங்க அனுமதி கொடுத்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி நம்மிடம் பேசும்போது, “திருப்பூர் மாவட்டத்தில், கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, சாமிளாபுரம், வேலம்பாளையம் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கிவருகின்றன. அவற்றில் பல கல்குவாரிகள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு குடியிருப்புகளுக்கும், விவசாயத்துக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. இந்த நிலையில் கோடங்கிபாளையத்தில் இயங்கும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இயந்திரத்தைவைத்து, குழி தோண்டி, அதிக அளவு வெடி மருந்துகளைப் பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிக கற்கள் வெட்டியெடுக்கப்பட்டன.

அபராதமா... அனுமதியா? - திருப்பூர் கல்குவாரி சர்ச்சை!

இது குறித்த புகாரின்பேரில் அந்த குவாரி செயல்பட திருப்பூர் ஆட்சியர் வினித் இடைக்காலத் தடைவிதித்தார். அந்தத் தடையை எதிர்த்து, சென்னையிலுள்ள கனிம வளத்துறை இயக்குநரிடம் குவாரி சார்பில் மேல்முறையீடு செய்து உடனடியாக விசாரிக்கப்பட்டது. அதில், அரசு அனுமதித்த அளவை மீறி கற்களை வெட்டியெடுத்ததற்காக சுமார் ரூ.10.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதுடன், கல்குவாரி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்பதால் கனிம வளத்துறை இயக்குநரின் உத்தரவு, திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு நகல்கள் இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. சட்டப்படி பார்த்தால் முறைகேடாகச் செயல்பட்ட குவாரியை மூடியிருக்க வேண்டும். ஆனால், அபராதம் விதித்து மீண்டும் செயல்பட அனுமதித்திருக்கிறார்கள். கோடங்கிபாளையம் பகுதிகளிலுள்ள அனைத்துக் குவாரிகளையும் ஆய்வுசெய்ய விவசாயிகள் அடங்கிய பொது ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும்” என்றார் விரிவாக.

திருப்பூர் மாவட்ட கல்குவாரிகள், கிரஷர் சங்கத்தின் செயலர் கே.பாலசுப்பிரமணியன் நம்மிடம், “எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் விவசாயிகளைத் தூண்டிவிட்டு பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். 15 அடிக்குச் சுற்றுச்சுவர், குவாரிகளைச் சுற்றி பசுமை வளையம் போன்றவற்றை அமைத்துத்தான் குவாரிகளை இயக்கிவருகிறோம். மாதம்தோறும் அதிகாரிகள் ஆய்வுசெய்கிறார்கள். விதிமீறல் கண்டறியப்பட்டால், அதற்கான அபராதத்தைக் கட்டுகிறோம்” என்றார் காட்டமாக.

ஈசன் முருகசாமி - வினித்
ஈசன் முருகசாமி - வினித்

இது தொடர்பாக திருப்பூர் ஆட்சியர் வினித்திடம் பேசினோம். “கல்குவாரிகளில் விதிமீறல்கள் இருப்பதைக் கண்டறிய வட்டாட்சியர் தலைமையில் தாலுகா அளவிலான குழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையிலேயே விதியை மீறிச் செயல்பட்ட கோடங்கிபாளையம் குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் அந்த குவாரி இயங்குவதற்தான உத்தரவு நகலை கனிம வளத்துறைதான் வழங்க வேண்டும். மற்றபடி பொதுவான ஆய்வுக்குழு ஏதும் அமைக்க அவசியமில்லை” என்று முடித்துக்கொண்டார்.

குவாரியைவிட மக்களின் நிம்மதி முக்கியம்!