தமிழ்நாட்டிலுள்ள காப்புக் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணையை ரத்துசெய்யக் கோரி, ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சூழல், சமூக இயக்கங்கள் என 18 அமைப்புகள் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றன.

அந்தக் கடிதத்தில், ``தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கடந்த 14.12.2022 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணையின் வாயிலாக தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டவிதிகள் 1959-ல் (The Tamilnadu Minor Mineral Concession Rules) பிரிவு 36-ல் உட்பிரிவு 1(A)-வில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்திருத்தத்தின்படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் (Quarry/Mine) அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசால் கடந்த 3.11.2021 அன்று அரசாணை எண் 295ன் மூலம் காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை கனிமச் சுரங்கங்களுக்குத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
காடுகள் மற்றும் காட்டுயிர்களின் பாதுகாப்புக்கு இந்தத் தடை ஆணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி நிறுவனங்களின் நலனையும் அரசின் வருவாயையும் அதிகரிப்பது எனும் காரணங்களுக்காக, காப்புக்காடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை பிறப்பிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய வன மதிப்பாய்வகத்தின் தரவுகளின்படி தமிழகத்தில் 20.31% நிலப்பரப்பு மட்டுமே காட்டுப்பகுதியாக உள்ளது. அதில், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகள் வலசைப்பாதைகள் ஆகியவை உள்ளன. இந்தத் தடை ஆணை தளர்த்தப்பட்டதால் மீதமுள்ள காப்புக்காடுகள் அனைத்துக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தடை ஆணை வழங்கப்பட்ட பின்னர் மட்டும் காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்ட 32 குவாரிகளின் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிராகரித்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட குவாரிகள், சுரங்கங்கள் TAMIN நிறுவனத்தின் பெருமளவிலான குவாரி, சுரங்கங்கள் உட்பட பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, அரசுக்குப் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், எனவே பாதிக்கப்பட்ட குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின் நலனைக் காக்க, அரசின் வருவாயைப் பெருக்க ஏதுவாக இந்த விதியில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் அனுமதி மறுக்கப்பட்ட குவாரிகளும் ஏற்கனெவே ஒரு கி.மீ சுற்றளவுக்கு செயல்பட்டுவந்த காரணத்தால் மூடப்பட்டிருந்த குவாரிகளும், சுரங்கங்களும், செங்கல் சூளைகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் காட்டுயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்.
தமிழகத்தில் காடுகளை ஒட்டியிருக்கும் எல்லாப் பகுதிகளிலும் மனித - காட்டுயிர் மோதல் நிலவுகிறது. தற்போது வனத்துறைக்குச் சொந்தமான நிலம் என்று வரையறுக்கப்பட்டிருக்கும் இடங்களில் மட்டுமல்லாமல், காட்டை ஒட்டிய பிற பகுதிகளையும் பல ஆயிரம் ஆண்டுகளாகக் காட்டு விலங்குகள் பயன்படுத்திவருகின்றன. வனத்துறை நிலம், வருவாய்த்துறை நிலம், தனியார் நிலம் என்ற பிரிவினைகள் எல்லாம் நமக்குத்தான். நமது நிலப் பாகுபாடுகளைக் காட்டுயிர்கள் அறியாது. அப்படியான இடங்களில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் விலங்குகளின் இயல்பான வலசை பாதிக்கப்பட்டு அவை விளைநிலங்களில், மனிதக் குடியிருப்புகளில் புகுந்துவிடும். குறிப்பாக யானைகளும், காட்டு மாடுகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். வேளாண்மையும் பாதிக்கப்படும்.

காப்புக்காடுகளுக்கு மட்டுமே விதி தளர்த்தப்பட்டிருப்பதாகவும் காட்டுயிர் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் (Elephant Corridor) ஆகியவற்றில் ஒரு கிலோமீட்டர்வரை சுரங்கப்பணிகளுக்கு இருக்கும் தடை தொடரும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மேற்கு, கிழக்கு மலைத்தொடர்களில் பெரும்பாலும் காப்புக்காடுகளே உள்ளன. அவற்றை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது. `Right of Passage’ எனும் இந்திய யானைகள் திட்டத்தின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தமிழகத்தில் யானைகள் வலசைப் பாதைகள் 17 மட்டுமே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் பல பாதைகள் அறிவிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

யானைகளின் இரு பெரும் வாழ்விடங்களை இணைக்கும் குறுகிய வலசைப் பாதைகளைக் குறிக்கவே Corridor என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை இணைப்புப் பாதைகள் எனலாம். இந்த இணைப்புப் பாதைகளுக்கு நிகராக யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகள் (Traditional Migratory Paths) அனைத்தும் முக்கியமானவை. அவை தடைப்பட்டுவிடக் கூடாது.
கோவை அருகே தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக, காடுகளையொட்டி தோண்டப்பட்ட பெருங்குழிகளால் யானைகளின் வலசை பாதிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில்கொண்டு அங்கு சுரங்கப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதை நாம் அறிவோம். தற்போது எல்லா இடங்களிலும் சுரங்கப் பணிகளுக்கு அனுமதித்திருப்பது வேதனைக்குரிய செய்தி.
அதுபோலவே இந்தத் தடைநீக்கத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து காடுகளையொட்டியுள்ள மலைகளைச் சிதைத்து, கற்களும் மண்ணும் அண்டை மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவலம் இனி சட்டரீதியாகவே தொடரும் என்பது வேதனையளிக்கிறது. உச்ச நீதிமன்றம் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்புகளின் நோக்கங்களுக்கு எதிராக இந்த அரசாணை உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்!

தொடர்ந்து பல்வேறு பசுமைத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் தமிழக அரசு காப்புக்காடுகளையொட்டி குவாரிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே, தமிழகத்தின் பசுமையைக் காப்பதில் அக்கறையோடு செயல்பட்டுவரும் முதல்வர் தலையிட்டு காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய 14.12.2022 அன்று வெளியான அரசாணை எண் 243-ஐ ரத்துசெய்ய வேண்டும் எனப் பசுமை உணர்வோடு கேட்டுக்கொள்கிறோம்!" எனத் தெரிவித்திருக்கின்றன.