இன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளைப் பிடித்து சோலை அழகுபுரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பெற்றார். 11 சுற்றுகள் நடந்த போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டன.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியினை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் இன்று காலை தொடங்கி வைக்க எம்.பி சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் கலோன், தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆன்லைன் மூலம் விண்னப்பித்து அனுமதி பெற்ற மாட்டு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் நல்ளிரவு முதல் அவனியாபுரத்துக்கு வரத் தொடங்கினர்.
ஜல்லிக்கட்டில் முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்பு தொடர்ந்து மொத்தம் 11 சுற்றுகள் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. 250 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினார்கள்.

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் சோலை அழகுபுரம் விஜய், அவனியாபுரம் கார்த்திக், விளாங்குடி பாலாஜி ஆகியோர் சிறப்பாக காளைகளை அடக்கினர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாடு பிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கலெக்டர் அவ்வப்போது அறிவித்து உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். விதிமுறைகளைக் கடைபிடிக்காத மாடுகள், வீரர்கள் வெளியேற்றப்படனர்.
மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் காவல்துறையினர் என மொத்தம் 58 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

11 சுற்றுகள் நடந்த போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டு போட்டி நிறைவுபெற்றது.
28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்துபுரம் விஜய் முதலிடம் வந்தார். 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் இரண்டாமிடமும் 13 காளைகளை அடக்கி விளாங்குடி பாலாஜி மூன்றாமிடமும் வந்தனர்.

சிறந்த காளையாக முதலிடம் வந்த காத்தனேந்தல் காமேஷ், இரண்டாமிடம் வில்லாபுரம் கார்த்தி, மூன்றாமிடம் அவனியாபுரம் முருகன் ஆகியோரின் காளைகள் அறிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு கார், டூவீலர், கன்றுடன் பசு, தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகள் தயார்நிலையில் இருந்தன.