
கவுன்சலிங்ல இந்தப் பணியிடத்தை உடனே செலக்ட் பண்ணிட்டேன். இப்போ மருத்துவ வசதிகள் எவ்வளவோ பரவாயில்லை. ஏழு வருஷங்களுக்கு முன்பு, கொல்லிமலையில ரெண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும்தான் இருந்துச்சு.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
மருத்துவத்தைப் பணம் ஈட்டும் தொழிலாகச் செய்பவர்களுக்கு மத்தியில், அதனை அறம் காக்கும் சேவையாகச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
தமிழகத்தின் முக்கியமான மலை வாசஸ்தலங்களில் ஒன்று கொல்லிமலை. ஊட்டி மற்றும் கொடைக்கானலைப் போலப் பெரிய அளவில் இன்னும் பிரபலமாகவில்லை. மனிதர்களின் காலடித்தடம் அதிகம் படாததால்தான் என்னவோ, தனக்கே உண்டான வனப்புடன் அமைதியும் எளிமையுமாக மூலிகைகளின் தாயகமாகத் தனித்துவத்துடன் வீற்றிருக்கிறது கொல்லிமலை. இயற்கை செழித்திருந்தாலும் கல்வியறிவில் இங்கு அதிகம் வேர் படரவில்லை. இதனால், வெளியுலகமே அதிகம் தெரியாத இங்குள்ள பழங்குடி மக்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு வாழ்வாதாரமே கிடையாது.
போதிய அடிப்படை வசதிகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், தங்களுக்கான தேவைகளையும் உரிமைகளையும் கேட்டுப் பெறுவதில்கூட இந்த மக்களுக்குத் தயக்கங்களும் தடைகளும் நிரம்பியிருக்கின்றன. அதில், மருத்துவ சேவை மிக முக்கியமான சவால். ஓர் அரசு மருத்துவமனை மற்றும் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தும், அவற்றில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவசர சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்கு மலையடிவாரத்திலுள்ள மருத்துவமனைகளுக்குத்தான் பழங்குடி மக்கள் விரைந்து செல்ல வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழலை உணர்ந்து, மக்களின் பிணி நீங்க அர்த்தமுள்ள சேவையைச் செய்துவருகிறார், மருத்துவர் ஒருவர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அரசு மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் புஷ்பராஜ்தான் அந்த மருத்துவர். இவர் நடத்திவரும் ‘அறம் க்ளினிக்’, பழங்குடி மக்களின் நலனில் முக்கியப் பங்காற்றுகிறது. கொல்லிமலையில் உள்ள செம்மேடு கிராமத்தில் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது இவரின் க்ளினிக். கொல்லிமலையிலுள்ள இந்த ஒரே ஒரு தனியார் க்ளினிக்கை, பெரும்பாலான பழங்குடி மக்களும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த புஷ்பராஜ், படித்தது அரசுப் பள்ளியில். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தவர், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், இனி தனக்கான இடம் கொல்லிமலைதான் எனத் தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறார். இந்த மலையையும் மக்களையும் பிரிய மனமின்றி இங்கேயே தங்கிவிட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்ததும், மாலை நேரத்தில் க்ளினிக் வேலையைக் கவனிக்க வந்த புஷ்பராஜைச் சந்தித்துப் பேசினேன்.
“பொருளாதாரத்துல பின்தங்கிய மக்களுக்கு மருத்துவ சேவை கொடுக்கிறதுலதான் எனக்கு அதிக ஆர்வம். இதுக்கு முன்பு சென்னையில நான் வேலை செஞ்சப்போ, துரைப்பாக்கம் பக்கத்திலிருக்கிற கண்ணகி நகர்லயும், காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு பகுதியிலயும் கட்டணமில்லாம மக்களுக்கு வைத்தியம் பார்த்தேன். என் விருப்பங்களுக்குச் சென்னை வாழ்க்கை அவ்வளவா ஒத்துவரலை. அமைதியான சூழல்ல வேலை செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகவே, அரசாங்க வேலைக்காக (Medical services recruitment board) எக்ஸாம் எழுதினேன். 2015-ல் கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. பணியிடத்தைத் தேர்வு செய்ற கவுன்சலிங்லதான் கொல்லிமலையைத் தெரிஞ்சுகிட்டேன். பின்தங்கிய, அடிப்படை வசதிகள்கூட சரிவர இல்லாத கொல்லிமலையில வேலை செய்யறது தண்டனைக்கான பணியிட மாற்றம் செய்றதுபோலன்னு சொல்வாங்க. இங்க வேலை செய்யப் பெரும்பாலானோர் ஆர்வம் காட்ட மாட்டாங்க. ஆனா, நான் இதுமாதிரியான இடத்துல வேலை செய்யத்தான் ரொம்பவே ஆசைப்பட்டேன்.

கவுன்சலிங்ல இந்தப் பணியிடத்தை உடனே செலக்ட் பண்ணிட்டேன். இப்போ மருத்துவ வசதிகள் எவ்வளவோ பரவாயில்லை. ஏழு வருஷங்களுக்கு முன்பு, கொல்லிமலையில ரெண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும்தான் இருந்துச்சு. அதுலயும், ஸ்கேன் இயந்திரம், பிசியோதெரபிக்கான ஏற்பாடுகள், ரத்த வங்கி, ஆம்புலன்ஸ்னு அடிப்படை வசதிகளுக்கு ரொம்பவே திண்டாட்டமா இருக்கும். அதனாலயும், விழிப்புணர்வு இல்லாததாலயும் இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடிப்போகணும்ங்கிற ஆர்வம் அதிகம் இருக்கலை.
மூலிகைகள், நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தி, காய்ச்சல், ஜலதோஷம்னு சிக்கலில்லாத பிரச்னைகளுக்குத் தாங்களே சுய வைத்தியம் செஞ்சுப்பாங்க. அது இப்பவும் நடக்குது. ஆனா, நாட்டு வைத்தியம்ங்கிற பேர்ல போலி மருத்துவர்கள் கொல்லிமலையில அதிகமா இருந்தாங்க. அவங்களை நம்பி உடல்நலனைக் கெடுத்துக்கிற, பிரச்னையைப் பெரிசுபடுத்திக்கிற மக்களின் எண்ணிக்கையும் அதிகமா இருந்துச்சு. இதனால, மக்களுக்குச் சரியான முறையில சிகிச்சை கொடுக்கிறதும், மருத்துவமனையை நாடி மக்களை வரவழைக்கிறதும் சவாலான காரியமா மாறுச்சு. பலவிதமான சிக்கல் தொடர்ந்தாலும், இந்த ஊரையும், இங்கிருக்கிற மக்களையும் பிடிச்சுப்போனதால கொல்லிமலையை விட்டுட்டுப் போக எனக்கு விருப்பமில்லை” என்று கொல்லிமலையில் ஐக்கியமான புஷ்பராஜுக்கு, அதன்பிறகு பொறுப்புகள் கூடியிருக்கின்றன.
செம்மேடு பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம், 2017-ல் வட்டாரத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. சோளக்காடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக உருவாக்கப்பட, அப்போதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த மையத்தில் பணியாற்றிவருகிறார் புஷ்பராஜ். ‘அறம் க்ளினிக்’ ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்த அடுத்தகட்ட நகர்வையும் அவர் விவரித்தார்...
``வெளியிடங்களுக்குப் போறப்போ, ‘உடம்பு சரியில்லை; மருந்து எழுதிக்கொடுங்க...’, ‘வைத்தியம் பாருங்க’ன்னு பழங்குடி மக்கள் என்கிட்ட உரிமையா கேட்பாங்க. தினமும் டியூட்டி முடிஞ்சதும் சாயந்திர நேரத்துல மக்களின் வீடு தேடிப்போய் சேவை நோக்கத்துல மருத்துவம் பார்த்தேன். ஏதாவது மருத்துவ அவசரம்னா, கொல்லிமலை அடிவாரத்துல இருக்கிற சேந்தமங்கலம், நாமக்கல், சேலம், ராசிபுரத்துல இருக்கிற ஆஸ்பத்திரிகளுக்குப் போக 2 - 3 மணி நேரத்துக்கு மேலயே ஆகும். அவசரகாலத்துல உயிரிழப்புகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால, உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுறப்போ உடனடியா சிகிச்சை எடுக்க மக்களை வரவழைக்கணும்னுதான் இந்த க்ளினிக்கை ஆரம்பிச்சேன்.
அந்த நேரத்துலதான் கொரோனா ரெண்டாவது அலை தீவிரமாச்சு. கொல்லிமலையில மிகக் குறைவான அளவுலதான் உணவகங்கள் இருக்குது. கோவிட் நேரத்துல அவையும் சரிவர இயங்கலை. ஊரடங்குக் கட்டுப்பாடுகளால பழங்குடி மக்கள் பலரும் சாப்பாட்டுக்கு ரொம்பவே சிரமப்பட்டாங்க. அதனால, க்ளினிக்ல கன்சல்டிங் கட்டணமா ஒவ்வொருத்தர் கிட்டயும் தலா 100 ரூபாய் வாங்கினேன். அதுல கிடைச்ச தொகையுடன் என் சொந்தப் பணத்தையும் சேர்த்து, மூணு மாதங்களுக்கு மூணு வேளையும் தலா 100 பேருக்கு உணவு கொடுத்தோம். மக்களோட பணத்தை அவங்களுக்கு உதவுற வகையில செலவழிக்கிறது நல்ல விஷயம்னாலும், இந்த க்ளினிக்கை முடிஞ்ச வரைக்கும் சேவை நோக்கத்துல மட்டுமே நடத்துறதுதான் நியாயமா இருக்கும்னு முடிவெடுத்தேன். ஆரம்பத்துல மூணு மாதங்களுக்கு மட்டும் கன்சல்டிங் கட்டணம் வாங்கின நிலையில, அதுக்கப்புறமா இப்பவரைக்கும் மருத்துவ ஆலோசனைக்கு (Consulting Fees) ஒரு ரூபாய்கூட வாங்கறதில்லை.
கொல்லிமலையில இருக்கிற அரசாங்க ஆஸ்பத்திரிகள் எதுலயுமே கொரோனா சமயத்துல ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கோவிட் வார்டு உருவாக்க முடியலை. கோவிட் டெஸ்ட் எடுக்கவும், தொற்று உறுதிசெய்யப்பட்டதுக்கு அப்புறமா சிகிச்சை பெறவும் முறையான மருத்துவ வசதிகளும் இங்க கொண்டுவர முடியலை. அந்த நேரத்துல மலை அடிவார ஊர்கள்ல இருக்கிற ஆஸ்பத்திரிகளுக்குப் போறதுக்குள்ள நோயாளியோட நிலைமை மோசமாகிடும். அல்லது படுக்கைவசதி இல்லாமப் போயிடும்.
அதனால, சிலரின் உதவியுடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை நான் ஏற்பாடு செஞ்சு, செயற்கை சுவாசம் தேவைப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியா சிகிச்சை கொடுத்தேன். இந்த க்ளினிக்ல போதிய படுக்கை வசதிகள் இல்லை. எனவே, கோவிட் பாதிப்பு தீவிரமா இருந்த மக்களுக்கு, அவரவர் வீட்டுக்கே போய் சிகிச்சை கொடுத்தேன். இரண்டாம் அலையில மட்டும் மொத்தமா 200 பேருக்குச் செயற்கை சுவாசம் கிடைக்க ஏற்பாடு செஞ்சோம். கொல்லிமலையில இருக்கிற பலதுறை அரசு அதிகாரிகளும் அப்போ எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணினாங்க. இந்த க்ளினிக் மூலமா, அந்த நேரத்துல ஏராளமான மக்களின் உயிரைக் காக்க முடிஞ்சதுல பெரிய நிறைவு கிடைச்சது” பெருமிதத்துடன் சொல்லும் புஷ்பராஜ், இந்த க்ளினிக்கில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தன் சொந்தப் பணத்திலிருந்து 30 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார்.

24 மணி நேரமும் இந்த க்ளினிக் செயல்படுகிறது. பழங்குடிச் சமூகத்திலிருந்து முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக முன்னேறியிருக்கும் எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவம் முடித்த இளநிலை மருத்துவர்கள் இரண்டு பேர், சில செவிலியர்கள் உட்பட எட்டுப் பேர் இங்கு பணியாற்றுகின்றனர்.
“டென்டல் கேர், எக்ஸ்ரே வசதி, ரத்தப் பரிசோதனை, பிசியோதெரபி சிகிச்சை உட்பட பல்வேறு வசதிகளையும் இந்த க்ளினிக்ல ஏற்படுத்தியிருக்கோம். அவசர காலத்துல முதலுதவி கொடுத்து, அதுக்கப்புறமா மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை மலை அடிவார ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புறதால உயிரிழப்புகளைத் தடுக்க முடியுது. இந்த க்ளினிக்ல சிகிச்சைக்கான கட்டணத்தை மட்டும் குறைவான அளவுல வாங்குறோம். அந்தத் தொகையிலதான், பணியாளர்களுக்குச் சம்பளம், கட்டட வாடகை, பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்கிறோம். இந்த க்ளினிக்ல லாபம்னு ஒரு ரூபாய்கூடக் கிடைக்காது.
ஆரம்ப சுகாதார நிலையத்துல என் டியூட்டி முடிஞ்சதும் தினமும் சாயந்திரம் அஞ்சு மணிக்கு இந்த க்ளினிக்குக்கு வருவேன். 9 மணி வரைக்கும் நானும் சிகிச்சை கொடுப்பேன். இந்த வேலையில எனக்கான வருமானம்னு எதையும் எதிர்பார்க்கிறதில்லை. ஒவ்வொரு மாசமும் என் கையில இருந்துதான் பணம் போட வேண்டியதா இருக்கும். பேங்க்ல லோன் வாங்கித்தான் செலவுகளைச் செஞ்சுகிட்டிருக்கேன். இதுவரைக்கும் 15 லட்சம் ரூபாய் கடனை அடைச்சாச்சு. மீதி 15 லட்சத்துக்கு வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன்.
கொல்லிமலையில இருக்கிற அரசாங்க மருத்துவமனையிலயும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்லயும் போதுமான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துறதுக்கு வேலைகள் நடந்துகிட்டிருக்கு. அதுவரைக்கும் மக்களின் நலனை உறுதிசெய்றதுல சிறு பங்களிப்பா இந்த க்ளினிக் செயல்படுது. நான் இன்னும் எத்தனை வருஷம் கொல்லிமலையில வேலை செய்வேன்னு தெரியலை. ஒருவேளை நான் பணிமாறுதலாகி வெளியூருக்குப் போனாலும், இந்த க்ளினிக் நல்லபடியா செயல்படணும். அதுக்காக சேவை நோக்கம் கொண்ட மருத்துவர்கள், பணியாளர்கள் யார் வேணாலும் இங்க வந்து வேலை செய்யலாம்” என்று உள்ளன்புடன் கூறி முடித்தார் டாக்டர் புஷ்பராஜ்.