'நானும் என் குடும்பமும் நல்லாயிருக்கணும்' என்பதே பெரும்பாலும் எல்லோரின் வழிபாடாக இருக்கும். பெரிய மனதுடையவர்கள் 'எல்லோரும் நல்லாயிருக்கணும்' என்று வேண்டுவார்கள். 'ஆடு, மாடெல்லாம் நல்லாயிருக்கணும்' என்று வேண்டிக்கொள்வதோடு அதற்கென்று ஒரு திருவிழாவே நடத்தும் மக்களும் இருக்கிறார்கள் என்பது வியப்பு தானே..?
திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி அருகே சோமவாரப்பட்டி கிராமத்தில்தான் இந்த அதிசயம். அங்குள்ள ஆல்கொண்டமால் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கலில் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது இந்தத் திருவிழா. இந்தத் திருவிழாவுக்குப் பின்னணியில் இருக்கிறது ஒரு புராணக்கதை.
ஆலமரத்தூர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய சோமவாரப்பட்டியில் மேய்ந்த பசுக்கள், அங்கிருந்த ஒரு புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தனவாம். அப்போது, பசு ஒன்றை பாம்பு தீண்டி உள்ளது. பாம்பின் விஷம் பசுவை பாதிக்காமல் இருக்க, விஷத்தை உண்டு அந்த சிவனே பசுவைக் காப்பாற்றியதாக நீள்கிறது அந்தக்கதை. தற்போதிருக்கும் ‘ஆல்கொண்டமால்’ கோயில் புற்று இருந்த இடத்தில் எழுப்பப்பட்டதாக நம்பிக்கை.

இந்தக் கோயிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மூன்று நாள்கள் பிரமாண்டமாக திருவிழா கொண்டாடப்படும். பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கானோர் மாட்டுவண்டி பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இத்திருவிழாவுக்கு வருகிறார்கள். மாட்டுப் பொங்கலன்று காலையில் தொடங்கி மறுநாள் பூப்பொங்கல் முடியும்வரை பெதப்பம்பட்டி சாலைகளில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மாட்டு வண்டிகள் மட்டுமே தெரியும். இந்த மூன்று நாள்களிலும் சுமார் 3 லட்சம் பேர் குவிகிறார்கள்.
"இந்த ஆல்கொண்டமால் தயவுலதான் எங்கவூர் ஆடு மாடுங்க ஜீவிச்சுக்கெடக்குங்கிறது எங்க நம்பிக்கை. ஆட்டு்க்கோ மாட்டுக்கோ நோவு கண்டா ஆல்கொண்டமாலுக்கு உருவார பொம்மை வாங்கி வைக்கிறதா வேண்டிக்குவோம். நோவு வரக்கூடாதுன்னு சொல்லி நேந்துக்கிறவங்களும் இருக்காங்க. திருவிழாவுக்கு முதநாள்ல இருந்து சுத்துவட்டார மண்பாண்டக் கலைஞர்கள் திரண்டு வந்து உருவாகப் பொம்மைக் கடைகளைப் போட்ருவாங்க. சிலபேரு ஊர்லயே பொம்மை செஞ்சு வாங்கிட்டு வருவாங்க.

இந்த உருவார பொம்மைகளை வாங்கி சாமி முன்னாடி வச்சு தேங்காய் உடைச்சு அந்தத் தண்ணியில பொம்மைக்கு கண் திறந்து வழிபடுவாங்க. இதைச் செய்துட்டா ஆடு, மாடுங்க ஆரோக்கியமா இருக்கும்ங்கிறது எங்க நம்பிக்கை...." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார். மாட்டுப் பொங்கலன்று பிறக்கும் கன்றுகளை கோயிலுக்கே நேர்ந்துவிடும் பழக்கமும் இருக்கிறது. அப்படி நேர்ந்துவிடப்படும் மாடுகளை 'சலகெருது' என்கிறார்கள்.
"சலகெருதுன்னா சலங்கை மாடுன்னு பேரு. அந்த மாட்டு்க்கு மூக்கணாங்கயிறு போடமாட்டோம். சுற்றுவட்டாரத்துல இருக்கற எல்லா கிராமங்கள்லயும் சலகெருது வளர்ப்பாங்க. அடையாளத்துக்காக அதோட காதுகளை சூலாயுதம்போல மாற்றி, உருமி இசைக்கு ஆட பயிற்சி கொடுப்பாங்க.

திருவிழாக்காலங்கள்ல இளைஞர்கள் சலங்கை கட்டிக்கிட்டு அந்த மாட்டுக்கு முன்னால இரண்டு நீள மூங்கில் கம்புகளை உயரத் தூக்கிக்கிட்டு நடனம் ஆடுவாங்க. அந்த மாடும் இசைக்கு ஏற்ற மாதிரி ஆடும். இதுக்கு சலங்கையாட்டம்னு பேரு..." என்கிறார் சிவகுமார்.
கால்நடைகளை சக உயிராக மதிக்கும் மரபு தமிழர்களுடையது. கால்நடைகளின் நலனுக்காகவே ஒரு வழிபாட்டையும் திருவிழாவையும் உருவாக்கி வைத்திருக்கும் சோமவாரப்பட்டி மக்கள் அதை மெய்ப்பிக்கிறார்கள்.