
``நானறிஞ்சு பத்து தலைமுறையா இந்தத் தொழில் நடக்குது. கார்த்திகை, மார்கழி, தைன்னு மூணு மாசங்கள்தான் வியாபாரம். மற்ற காலங்கள்ல பொருள்களை வாங்கி பின்னி ஸ்டாக்வெச்சுக்குவோம்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
விருதுநகர் - திருநெல்வேலி பைபாஸ் சாலையில் ராம்கோ சிமென்ட் ஆலைக்குப் பின்புறம் இருக்கிறது எத்திலப்பன்பட்டி. ஆர்.ஆர்.நகர் சந்திப்பில் வலதுபுறம் கன்னிச்சேரி புதூர் சாலையில் திரும்பி மிகக்குறுகிய ஒரு தார்ச்சாலைக்குள் நுழைந்தால் ஊர் வந்துவிடும். பேருந்து வசதிகூட இல்லாத இந்த கிராமத்தில் அதிகபட்சம் நூறு வீடுகளுக்குள் இருக்கும். ஊரின் முகப்பிலுள்ள மேடையில் ஐந்தாறு முதியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். வலமும் புறமுமாக இருக்கிற கோயில்களில் பெண்கள் அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஊருக்குள் இருக்கும் ஒரே பெட்டிக்கடைக்குள் அமர்ந்திருக்கிறார் ஓர் இளம்தாய். பைப்படியில் அமர்ந்து தண்ணீருக்காகக் காத்திருக்கிறார்கள் சில பெண்கள். எல்லோரின் கைகளிலும் கொரடு இருக்கிறது. பேசியபடி பேச்சிருக்க, கைகள் கம்பிகளை மணிகளோடு கோத்து இழுத்துப் பின்னிக்கொண்டிருக்கின்றன.
எத்திலப்பன்பட்டி கிராமமே வித்தியாசமாக இருக்கிறது. வீட்டுக்கு வீடு வண்ணமேற்றப்பட்ட துளசி மாலைகள் காய்கின்றன. யார் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் கூடவே பாசிமணி மாலைகளை பின்னிக்கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் கம்பிகளில் பாசிகளைக் கோத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழகம் கடந்து தென்னிந்தியாவில் ஐயப்பன், முருகன், அம்மன் கோயில்களுக்கு மாலை போடுபவர்கள் எத்திலப்பன்பட்டி மக்கள் பின்னித்தரும் துளசிமணி மாலைகளைத்தான் அணிகிறார்கள். இந்த சின்ன கிராமத்தில் குடிசைத்தொழில்போல துளசிமணி மாலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.

வழக்கமாக, அலைகுடிகளாக இருக்கும் நாடோடிப் பழங்குடியினர்தான் பாசிமணி மாலைகள் கோத்துப் பார்த்திருக்கிறோம். ஒரு கிராமமே அதைத் தொழிலாக வைத்திருப்பது வியப்பாக இருக்கிறது.
``எங்க சமூகத்துக்கே இந்தத் தொழில்தான் பூர்வீகத் தொழில். எங்ககிட்ட கத்துக்கிட்டுத்தான் பிற சமூக மக்கள் இந்தத் தொழிலைச் செய்றாங்க. ரொம்ப புனிதத்தன்மை வாய்ந்த இந்தத் தொழிலை நாங்க தலைமுறை தலைமுறையா செய்றோம். எங்க பூர்வீகம் அயோத்தி. இலங்கைக்குப் போய் கதிர்காமத்துல தங்கி இருந்திருக்காங்க எங்க முன்னோர்கள். அங்கிருந்து தமிழகத்துக்கு வந்திருக்காங்க. எங்கே போனாலும் இந்தத் தொழிலும் எங்களோடவே வந்திருக்கு. இன்னைக்கும் அயோத்தி, இலங்கையில எங்க மக்கள் இந்தத் தொழிலை செஞ்சுக்கிட்டிருக்காங்க. தலைமுறை தலைமுறையா எங்க குடும்பங்களை வாழவெச்சுக்கிட்டிருக்கறது இந்தத் தொழில்தான்'' என்கிறார் பெருமாள்.
தம்மநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள் வருகிறது எத்திலப்பன்பட்டி. சிறிதும் பெரிதுமாக 20-க்கும் மேற்பட்ட துளசிமணி மாலைகள் தயாரிக்கும் மொத்தத் தயாரிப்பாளர்கள் இந்த கிராமத்துக்குள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் இந்த ஊரைச் சுற்றியிருக்கும் துலுக்கப்பட்டி, பாலாஜிநகர், கருப்பண்ணசார்பட்டி, காந்திநகர் எனப் பல்வேறு கிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
``சுத்துவட்டாரத்துல இருக்குற பெரும்பாலான பெண்கள் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள்ல வேலை செய்றவங்க. ஊருக்குள்ளேயே பஸ் வந்து கூட்டிக்கிட்டுப் போகும். சாயங்காலம் வேலை முடிச்சுட்டு வநதவுடனே எல்லாப் பெண்களும் பாசிமணி கோக்க ஆரம்பிச்சுருவாங்க. ஆம்பிளைகளும் டீக்கடை, மந்தைன்னு எங்கே போனாலும் கையில கொரடும் கம்பியும் கொண்டு போயிருவாங்க. இங்கேயிருந்து வியாபாரிகள் வழியா இந்தியா முழுவதும் எங்க மாலைகள் போகுது...'' என்கிற பெருமாள், 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை தருகிறார்.
பெருமாள் வீட்டுக்கு முன்பு துளசி மாலை சாயமிடப்பட்டுக் காய்ந்துகொண்டிருக்கிறது. பெருமாளின் கைகளிலும் ரோஸ் நிற சாயம் அப்பியிருக்கிறது.
``துளசி மாலை, கிறிஸ்டல் மாலை, ருத்திராட்ச மாலைன்னு 150 வகைகளுக்கு மேல இங்கே செய்வோம். இப்போ படிச்ச புள்ளைங்க இந்தத் தொழிலுக்குள்ள வந்துட்டாங்க. அவங்க இன்னைக்குள்ள புள்ளைங்க விரும்புற மாதிரி டிசைன் மாலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இருந்தாலும் எங்கூருக்கு அடையாளம்னா, அது துளசி மாலைதான். அந்தக் காலத்துல துளசி மாலைன்னா துளசிக்கட்டையைப் பதப்படுத்தி செய்வாங்க. இப்போ அதெல்லாம் இல்லை. அதுக்கான விலையும் நம்ம மக்களுக்குக் கட்டுபடியாவாது. பூவரசு கட்டைகளைக் குடைஞ்சு சின்னச் சின்ன பாசியா செய்வாங்க. அந்தக் கட்டைப்பாசி மாலைக்குத்தான் துளசி மாலைன்னு பேரு. சின்னது, பெருசுக்கு தனித்தனியா நம்பர் இருக்கு. எத்திலப்பன்பட்டியைப் பொறுத்தவரை 6, 8, 10-ன்னு மூணு வகை செய்றோம். இந்தக் கட்டைப்பாசியில கலர் ஏத்தி விதவிதமா செய்யலாம். இயற்கையான வெள்ளை கலர், சந்தன கலர் ரெண்டும் நல்லாப் போகும். ஐயப்பன், முருகனுக்கு மாலை போடுறவங்க இதைத்தான் முதல் மாலையாப் போடுவாங்க.
அடுத்து, ருத்திராட்சப்பூ மாலை... இது பார்க்க சின்ன ருத்திராட்சம் மாதிரி தெரியும். ஆனா, இதுக்கும் ருத்திராட்சத்துக்கும் சம்பந்தமில்லை. இது ஒருவகைப் பூ. இது தவிர, மஞ்சள், சிவப்புல ஓம்சக்தி மாலை, ஒரிஜினல் ருத்திராட்ச மாலை, கல் மாலை, கருங்காலி மாலை, ஸ்படிக மாலையும் இங்கே செய்றாங்க...'' என்கிற முத்தம்மாள், பெருமாளின் மனைவி.
காலை 9 மணிக்கு பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அமர்ந்தால், மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்குள் பத்து மாலைகளைப் பின்னிவிடுவார் முத்தம்மாள். முகம் பார்த்துப் பேசும்போதே கை ஜெட் வேகத்தில் கம்பியில் முடிச்சிடுகிறது.
108 மாலை, 54 மாலை என இரண்டு வகைகள் உண்டு. இந்த எண்ணிக்கைகூடக் குறைந்து போய்விடக் கூடாது. கன்னிசாமிகள், சிறுவர்கள் 54 மாலை தரிப்பார்கள். மூத்தவர்கள், குருசாமிகளெல்லாம் 108 மாலை. இவை தவிர, நிறைய டிசைனிங் மாலைகளும் இங்கே தயாராகின்றன. எத்திலப்பன்பட்டியின் பிரதான துளசி மாலை வணிகரென்றால் விஜயராஜ்.
35 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறார். சுத்துப்பட்டு கிராமங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இவருக்காக பாசிமணிகளைக் கோக்கிறார்கள்.
``இங்கிருக்கிற சின்ன வியாபாரிகள் மதுரையில மூலப்பொருள்கள் வாங்குறாங்க. பெரிய வியாபாரிங்க மொத்தமா உற்பத்தியாகுற மாநிலங்கள்ல இருந்தே இறக்கிருவோம். துளசி மாலைக் கட்டைகள் ஆக்ராவுல இருந்து வருது. அங்கே நிறைய தொழிற்சாலைகள் இருக்கு. விலை குறைவா கிடைக்கும். ருத்திராட்சப்பூ ஒடிசாவுல இருந்து வாங்குவோம். கல்லு, ஸ்படிகமெல்லாம் மேற்குவங்கத்துல இருந்து வரும். கறுப்புக்கல் நேபாளத்துல இருந்தும், அம்மன் மாலைகளுக்கான கற்கள் மதுராவுல இருந்தும் வருது. ஒரிஜினல் ருத்திராட்சக் கொட்டை மதுராவுல கிடைக்கும். ஒரு முகம் மட்டும் ரொம்ப டிமாண்ட். தமிழ்நாட்டுல நடிகர்கள் ரஜினியும் தனுஷும் மட்டும்தான் ஒரு முக ருத்திராட்சம் போட்டிருக்காங்க.

எங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறவங்ககிட்ட மூணு மாசம் டைம் வாங்கிக்குவோம். இன்னைக்கு மதுரா வியாபாரிங்ககிட்ட புக் பண்ணினா, ரெண்டு மூணு மாசம் ஆகும் கிடைக்க. விலையும் ரொம்ப அதிகம். மூலப்பொருள்களெல்லாம் தனித்தனி மூட்டைகள்ல வரும். ருத்திராட்சப்பூ மட்டும் நூல்ல கோத்து வரும். அதோட ஒரிஜினல் நிறம் கறுப்பா இருக்கும். அதுக்கு மட்டும் ரோஸ் கலர் சாயம் போடுவோம். மற்றபடி வேறெந்த செயற்கையான பொருளையும் சேர்த்து பக்குவப்படுத்த வேண்டியிருக்காது...'' என்கிறார் விஜயராஜ்.
விஜயராஜ் 80 வகையான பாசிமணி மாலைகள் செய்கிறார். இந்தத் தலைமுறை விரும்பும் விதவிதமான கல் மாலைகளையும் உருவாக்குகிறார். இந்தியா முழுவதும் இவரது தயாரிப்புகள் செல்கின்றன.
பாசிகளைத் தரமான தாமிரக்கம்பியில் கோத்து கொரடால் முடிச்சிட வேண்டும். இது பழகியவர்களுக்கே லாகவப்படும். தாமிரக்கம்பியில் கோப்பது ஒரு வேலை. கோத்த பாசிகளை இழுத்துப் பின்னுவது இன்னொரு வேலை. வயதானவர்கள் கம்பியில் கோத்துக்கொடுப்பார்கள். துளசி மாலையில் ஒரு பாசிக்கும், இன்னொரு பாசிக்கும் இடையில் குப்பா என்ற சிறிய தகட்டையும் கோக்க வேண்டும். குப்பாவில் தங்க முலாம், வெள்ளி முலாம் என இரண்டு வகையுண்டு. தங்க முலாம் போட்ட குப்பா மாலை பளபளப்பாக இருக்கிறது.
108 பாசிகள் அடங்கிய மாலையை குப்பா சேர்த்துக் கோத்தால் 1 ரூபாய் 50 காசு கூலி. கோத்த மாலையைக் கொரடு கொண்டு பின்னினால் 10 ரூபாய். பெரியவர்கள் சாதாரணமாக 10 மாலைகள் கோப்பார்கள். நல்ல கைதேர்ந்தவர்கள் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பின்னினாலே பத்து மாலைகளை முடித்துவிடுவார்கள். எல்லோருமே துணைத் தொழிலாக இதை வைத்திருப்பதால் கிடைத்தவரை லாபம்.

கருப்பண்ணசார்பட்டி ஆவுடையம்மாளுக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். நான்கு பிள்ளைகள் இருக்கிறாா்கள். பார்வைகூட மங்கிவிட்டது. ஆனாலும் இப்போதும் பாசிமணிகளை கோத்துக்கொண்டிருக்கிறார். கை அவ்வளவு லாகவமாக வேலை செய்கிறது.
``டீ குடிக்கல்லாம் புள்ளைகளை எதிர்பார்த்துக்கிட்டு உக்காந்திருக்க முடியுமா ராஜா... ஆத்தா இந்த திண்டுல குந்திக்கிட்டு பத்து கம்பியாவது கோத்துப்புடுவேன். 15 ரூவா யாரு தருவா..?'' -பொக்கை வாய் விரிய சிரிக்கிறார் ஆவுடையம்மா பாட்டி.
அவருக்கு அருகிலேயே அமர்ந்து கோத்துக்கொண்டிருக்கிற பூச்சம்மாவுக்கு சர்க்கரைநோயால் கால் விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எழுந்து நடமாட முடியாது. அவருக்கும் வயது 70-க்கு மேலிருக்கும். கால்களை மடக்கி அமர்ந்தபடி பாசிமணி கோத்துக்கொண்டிருக்கிறார்.
``ரெண்டு புள்ளைக... ஆறு பேரன், பேத்திக... எல்லாரும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. நாமளும் சுமையா இருக்கக் கூடாதுல்ல. என்னால ஓடியாடி வேலை செய்ய முடியாது. அதான் உக்காந்த இடத்துல இதைக் கோத்துக்கிட்டிருக்கேன். 9 மணிக்கு உக்காந்தா 3 மணிக்குச் சாப்பிட எழுந்திருப்பேன். திரும்பவும் நாலு மணிக்கு உக்காந்து 6 மணிக்கெல்லாம் ஏறக்கட்டிருவேன். ஒரு நாளைக்கு 45 ரூவாய்க்குக் கோப்பேன்'' என்கிறார் பூச்சம்மா பாட்டி.
கருப்பண்ணசார்பட்டிக்குக் கிழக்கே பைபாஸ் சாலைக்குக் கீழேயிருக்கிறது துலுக்கப்பட்டி. ஊரின் முகப்பிலேயே பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து பின்னிக்கொண்டும், கோத்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஜெயபாரதியின் வேகத்துக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. அவருக்கு முன்னால் பின்னி முடித்த மாலைகள் குவிந்துகிடக்கின்றன.
ஜெயபாரதி செவித்திறன் சவால் உடையவர். சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. வெளியில் சென்று வேலை செய்ய முடியாததால் வீட்டில் அமர்ந்துகொண்டு பாசிமணி பின்ன ஆரம்பித்தார். இன்று அதுதான் வாழ்வாதாரமாகியிருக்கிறது.
``துலுக்கப்பட்டியில மட்டும் 200 பெண்கள் பாசிமணி கோக்குறாங்க. ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைக்கும். காலையில வீட்டுல உக்காந்து பின்னுவேன். மதியம்போல மந்தைக்குப் போய் ஆளோட ஆளா உக்காந்து பின்னுவோம். திரும்பவும் சாயங்காலம் வீட்டுல செய்வோம். சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனாலும் பாசியையும் கம்பியையும் எடுத்துக்கிட்டுப் போவோம். பஸ்லகூட உக்காந்து கட்டுவோம். ரேஷன் கடைக்குப் போறப்போ லேட் ஆனா அங்கே உக்காந்துகூட இந்த வேலையைப் பார்ப்போம்...'' என்கிறார் ஜெயபாரதி. குடும்பத்துக்கு ஜெயபாரதியின் உழைப்புதான் ஜீவாதாரமாக இருக்கிறது.
துலுக்கப்பட்டியைச் சேர்ந்த நாகராஜனுக்கு திருமணமாகவில்லை. வயது 50-க்கு மேல் ஆகிவிட்டது. பூர்வீக வீட்டில் தனித்திருக்கிறார். எழுந்து நடக்க முடியாது. காலில் பிரச்னை. 1,000 ரூபாய் முதியோர் உதவித்தொகை வருகிறது. அதுபோக அவரது வாழ்வாதாரம், பாசி கோப்பது.
``என்னால பின்ன முடியாது. கைவாகு வரலே... ஒரு நாளைக்கு ரெண்டு கம்பி கோப்பேன். 20 ரூபா கூலி கிடைக்கும். ஒரு பாசியைக் கோத்து கீழே ஒண்ணு, மேலே ஒண்ணுன்னு குப்பா போடணும். கோத்துட்டு கம்பி மிச்சமிருந்தா திருப்பிக் கொடுத்துடணும். வாங்கும்போதே கையில காசு தந்துருவாங்க. என்னால எழுந்து நடமாட முடியாது. கால் வளைஞ்சுக்கும். சும்மாவே உக்காந்திருக்காம ஒரு கைத்தொழில்...'' என்று சிரிக்கிறார் நாகராஜன்.
``நானறிஞ்சு பத்து தலைமுறையா இந்தத் தொழில் நடக்குது. கார்த்திகை, மார்கழி, தைன்னு மூணு மாசங்கள்தான் வியாபாரம். மற்ற காலங்கள்ல பொருள்களை வாங்கி பின்னி ஸ்டாக்வெச்சுக்குவோம். கெட்டுப்போற பொருள் இல்லே பார்த்துக்குங்க... தீபாவளி முடிஞ்சவுடனே ஊர் பரபரப்பாகிடும். ஏத்துறது, இறக்குறதுன்னு வேலையும் சூடுபிடிச்சுடும். சாதாரண கட்டையில இருந்து தரமான ஸ்படிகம் வரைக்கும் எங்ககிட்ட கிடைக்கும். ஸ்படிகம், கருங்காலி, ரத்தினக்கல்லுகள்லாம் விலை அதிகம். இன்னைக்கு மார்க்கெட்ல ஸ்படிகம்னு சொல்லி விக்கிறதுல முக்கால்வாசி போலிதான். இருட்டுல ஒண்ணோட ஒண்ணை உரசினா தீப்பொறி வரணும். அதுதான் ஒரிஜினல் ஸ்படிகம். இதெல்லாம் எங்களுக்கு ஆர்டர் கொடுத்தாத்தான் பொருள் வரவழைச்சு செஞ்சு கொடுக்க முடியும்.
இங்கருந்து திருமணமாகிப் போற பொண்ணுங்க மூலமா இந்தத் தொழில் மாவட்டம் கடந்தும் வளர்ந்துக்கிட்டிருக்கு. தமிழகம் தாண்டி ஆந்திரா, கேரளாவுல மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு. சீஸன் டைம்ல அங்கருந்து வியாபாரிங்க இங்கே வந்துருவாங்க...'' என்கிறார் லோகேஸ்வரன். எத்திலன்பட்டியில் இருக்கும் மற்றொரு பெரிய உற்பத்தியாளர். 300-க்கும் மேற்பட்டோருக்கு இவர் வேலை கொடுக்கிறார்.
30 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை இங்கே மாலைகள் தயாராகின்றன. ஸ்படிகம், ரத்தினக் கற்கள் ஆர்டர் செய்தால் செய்து தருகிறார்கள். வெள்ளிக்கம்பியில் கோக்கப்பட்ட கருங்காலி மாலை 2,500 ரூபாய். செந்துளசி மாலையும் செய்கிறார்கள். தங்ககுப்பா மாட்டப்பட்ட செந்துளசி மாலை பேரழகாக இருக்கிறது.
``கைமுதல் போட்டுச் செய்யவேண்டிய தொழில் இது. மூலப்பொருள்களுக்கு பணமும் செய்யறவங்களுக்குக் கூலியும் கைமேல தரணும். அதனால இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோக முடியலே. இன்னைக்கு நிறைய படிச்ச புள்ளைக இந்தத் தொழிலுக்கு வந்திருக்காங்க. அவங்கள்லாம் புதுசா யோசிக்கிறாங்க. ஆந்திராவுல இதை மெஷின்ல செய்யறாங்க. மெஷின் ஒரு மணி நேரத்துல அஞ்சாயிரம் மாலைகளைக் கோத்துப் போட்டுரும். ஆனா நாங்க இன்னும் இதை மரபுப்படிதான் செய்றோம். நல்லா பின்னத் தெரிஞ்ச ஒருத்தர் ஒரு நாளைக்கு பதினைஞ்சு மாலைகள் பின்ன முடியும். இந்தத் தொழில் கடைகளை நம்பியிருக்கு. அவங்க வெக்கிறதுதான் விலை. மொத்த வியாபாரிகளைப் பொறுத்தவரை மாலைக்கு ரெண்டு ரூபா கிடைச்சாப் போதும்னு நினைப்போம்.
இந்த மாலைகளை உடம்புல ஒருத்தர் உடுத்தினா அவர் சாமியாயிடுறார். அந்த அளவுக்கு இதைப் புனிதமா நினைக்கிறாங்க. அந்த நம்பிக்கையைக் காப்பாத்தணும். தெய்வ பயத்தோட சுத்தபத்தமா இருந்துதான் பாசிமணிகளைப் பின்றோம். சாமிகளுக்கான மாலை மட்டுமில்லாம டிசைனிங் மாலைகளுக்கும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியிருக்கு. இன்னைக்குள்ள பிள்ளைகளுக்குப் பிடிச்ச மாதிரி வருஷத்துக்கு எப்படியும் 20 வெரைட்டியாவது புதுசா செய்வேன். சிமென்ட் ஃபேக்டரியில வேலை செய்ற இன்ஜினீயர்களோட மனைவிமார்கள்கூட பொழுதுபோக்கா எங்ககிட்ட பாசி வாங்கி பின்னித் தர்றாங்க. எல்லாரும் ரசிச்சுச் செய்ற தொழில் இது. இந்தத் தொழிலுக்கு புவிசார் குறியீடு கிடைச்சா மிகப்பெரிய வெளிச்சம் கிடைக்கும். அரசாங்கம் கருணை காட்டணும்'' என்கிறார் விஜயராஜ்.
ரசிக்கத்தக்க ஒரு தொழில் பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறியிருக்கிறது. சிதறிக்கிடக்கிற இந்தத் தொழிலை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த கிராமங்களை அரசு ஏறெடுத்துப் பார்க்க வேண்டும். மாலை பின்னும் தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும்!