கொரோனா காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி, மாஸ்க்கின் முக்கியத்துவம் என்ன ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பாடல்கள் மூலமாக ஏற்படுத்தியவர், கும்மிடிப்பூண்டி காவல்துறை அலுவலர் (கான்ஸ்டபிள்) சசிகலா. பொது முடக்கத்தின்போது இவரது கொரோனா பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்தன; பாராட்டுகள் குவிந்தன. சமீபத்தில், பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை பற்றிய `குட்டிம்மா’ என்ற விழிப்புணர்வு பாடலை எழுதி, பாடியிருக்கிறார் சசிகலா. இதுவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து, இதுபோல பல விழிப்புணர்வு பாடல்களை எழுதிப் பாட விரும்புகிறார் கான்ஸ்டபிள் சசிகலா.
``பிறந்தது புதுக்கோட்டை மாவட்டம் குலவாய்ப்பட்டி கிராமம். ஏழைக் குடும்பம். சின்ன வயசுலயிருந்தே இசை மேல, பாடல் மேலயெல்லாம் ரொம்ப ஆசை. ஆனா, வீட்ல ஊக்கப்படுத்த யாரும் இல்ல. வீட்ல யாருக்கும் இசை பத்தியெல்லாம் தெரியாது. அரசுப் பள்ளியில படிச்சேன். புதுக்கோட்டை அரசு கல்லூரியில உயிரியல் துறையில இளங்கலைப் பட்டம் வாங்கினேன்.
காவல்துறையில சேரணும்ங்கிற ஆசை, சின்ன வயசுலயிருந்தே இருந்தது. முயற்சியெடுத்து சேர்ந்தேன். என்னை சிவகங்கையில கட்டிக்கொடுத்தாங்க. என் கணவர், பாடல் மீதான என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அவரும் என்னைப் பாட வைக்க விரும்பினார். சொல்லப்போனா, அவர் தந்த ஊக்கத்தாலதான் இப்போ நான் காக்கி உடையில பாட்டுப் பாடிட்டிருக்கேன்'' என்பவர், அதற்கான முதல் வாய்ப்பு அமைந்தது பற்றிச் சொன்னார்.

``எங்க காவல் நிலையத்துக்குப் பக்கத்திலேயே எடிட்டிங் ஸ்டூடியோ ஒண்ணு இருக்கு. அங்கே பாடலும் கற்றுக் கொடுப்பாங்க. நான் தெம்மாங்கு, குத்துப் பாடல்கள் நல்லா பாடுவேன்ங்கிறதால, அதையெல்லாம் அங்க போய் கத்துக் கிட்டேன். டியூட்டி முடிச்சிட்டு 8 மணிக்கு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம், அரை மணி நேரம் அதையெல்லாம் பிராக்டீஸ் செய்வேன்.
கொரோனா ஆரம்பிச்ச காலத்துல மக்களுக்கு வைரஸ் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாகச் சென்றடையல. அதனால, அது பத்தின விழிப்புணர்வு பாடல் ஒண்ணை எழுதிப் பாடலாம்னு முடிவு செஞ்சேன். அப்படி ரெண்டு பாடல்களை வெளியிட்டேன். மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. கலைகள் மூலமா ஒரு கருத்தை மக்களுக்குச் சொல்லும்போது அது எளிமையா சென்றடைவதை, அந்த அனுபவம் என்னை உணரவெச்சது'' என்பவர், தன் அடுத்த முயற்சியான, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் பற்றிச் சொன்னார்.

``குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளைப் பார்க்கும்போது ஆற்றாமையா இருக்கும். நான் மகிளா கோர்ட்தான் அட்டெண்ட் செய்றேன். 9 வயசு, 10 வயசுக் குழந்தைகள் எல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதா வர்ற வழக்குகளை பாக்குறேன். அங்க அதிகமான போக்ஸோ வழக்குகளைப் பார்க்கப் பார்க்க, கோபமும் இயலாமையும் சேர்ந்து வரும். அந்தச் சூழலும் சமூக அக்கறையும்தான், `குட்டிம்மா’ என்ற, குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பாடலை எழுதவெச்சது.
நிறைய பேர் பாடலை கேட்டுட்டுப் பாராட்டினாங்க. குறிப்பா, பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி கற்றுக்கொடுக்கப் போவதா சொன்னாங்க. இப்படியான விழிப்புணர்வை பல பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தியது மன நிறைவை கொடுக்குது'' என்பவரின் `குட்டிம்மா' பாடல், குழந்தைகள் தற்காப்புக் கலை கற்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்களை வலியுறுத்துகிறது.
``ஒரு 10 வயசு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும்போது தள்ளிவிட்டு ஓடவாவது அவளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் தேவை. அதற்குத் தற்காப்புக் கலைகள் மிகவும் அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய காலச்சூழல்ல இருக்கோம்'' என்பவர், கொரோனா விழிப்புணர்வுப் பாடலைவிட, `குட்டிம்மா' பாடலில் தன் குரலில் முன்னேற்றம் தென்படுவதையும் குறிப்பிடுகிறார்.
``எல்லாரும், ரெண்டாவது பாடல்ல குரலும், பாடும் விதமும் நல்லாயிருக்கிறதா சொன்னாங்க. இன்னும் நல்லா பிராக்டீஸ் செய்யணும், நிறைய பாடணும். ஏன்னா, ஒவ்வொரு வீட்டுக்கும் போய் நம்மளால விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. சொன்னாலும், அதையெல்லாம் அவங்களால உள்வாங்கிக்க முடியாது. ஆனா, ஒரு விழிப்புணர்வு பாட்டு எத்தனையோ வீடுகளை சென்றடையுது. ஒரு கலை வடிவத்தில், அதுவும் காவல்துறையைச் சேர்ந்தவர் சொல்லும்போது, `என்ன அது..?!'னு மக்களும் ஆர்வமாகி கவனிக்கிறாங்க. பலருக்கும் அந்தத் தகவல்கள் போய்ச் சேருது'' என்றவர் தன் பாடல்களுக்கான வீடியோ உருவாக்கம் பற்றி பகிர்ந்தார்.

Also Read
``இதை நான் அதிகமா வெளிய சொன்னதில்ல. சிலருக்கு மட்டும்தான் தெரியும். நீங்க கேட்டதால சொல்றேன். ஒரு பாடலை உருவாக்கி வெளியிட, என் ஒரு மாத சம்பளம் செலவாகும். செலவுக்கு சில நேரங்கள்ல பற்றாக்குறை ஏற்பட்டாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறோம்ங்கிற மனநிறைவு இருக்கு... அது போதும்'' என்றவர், தன் முயற்சிகளுக்குத் தனது துறையில் கிடைக்கும் ஆதரவு பற்றிப் பகிர்ந்தார்.
``நான் பாடல் எழுதி, பாடி, ரெக்கார்ட் செய்ததும் அதிகாரிகளிடம் போட்டுக் காட்டுவேன். கருத்துள்ள பாடல்களா இருக்குனு பாராட்டி ஊக்குவிச்சாங்க. இதேபோல இன்னும் பல பாடல்களை உருவாக்குங்கனு சொன்னாங்க. உயரதிகாரிகள் மட்டுமல்லாம, என்கூட வேலைபார்க்கும் சக ஊழியர்களும் சப்போர்ட்டிவ்வா இருக்காங்க.
போலீஸ் ஸ்டேஷன்ல, சின்னச் சின்னப் பசங்க எல்லாம் போதைப் பொருள் விற்றதா கைதாகி பொட்டலங்களோட உட்கார வைக்கப்பட்டிருப்பாங்க. பதின்ம வயதுச் சிறுவர்கள் பலர் போதைக்கு அடிமையாவதையும் பார்க்குறேன். எனவே, போதைப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு பாடலைதான் அடுத்து உருவாக்கப் போறேன்'' என்கிறார் சசிகலா.
காக்கிச்சட்டை - கலை - சமூக அக்கறை இணைந்த பயணம் தொடர வாழ்த்துகள்!