தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தலைவர்கள்!

 ஜெசின்டா அர்டெர்ன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெசின்டா அர்டெர்ன்

பெண்ணால் முடியும்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலம் பொருந்திய நாடுகளே அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க... தைவான், நியூசிலாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகத் திட்டமிட்டு தங்கள் மக்களைக் காப்பாற்றி வருகின்றன. இந்த ஏழு நாடுகளின் தலைவர்கள் அனைவருமே பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது.

சீனாவை மிகக் கடுமையாக கொரோனா தாக்கிக்கொண்டிருக்க, அண்டை நாடான தைவானை அது பெருமளவில் பாதிக்காமல் தடுத்தவர்களில் பிரதான பங்காற்றியவர் அதிபர் சை இங் வென் (Tsai Ing-wen). சீனாவில் நோய்த் தொற்றுப் பரவத் தொடங்கியதுமே, தன் நாட்டுக்கு வரும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தினார். அவர்களைச் சந்தித்தவர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தைவானில் ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. மாறாக 124 புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். சீனாவுடனான அரசியல் போரால் ஒதுக்கி வைக்கப்பட்ட தைவான்தான், இன்று ஒரு கோடி மாஸ்க்குகளை அமெரிக்காவுக்கு அனுப்பியதோடு, பிற நாடுகளுக்கும் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. “சர்வதேச அமைப்புகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட வலி எங்களுக்குத் தெரியும். ஆனால், அதை இப்போதும் செய்யாதீர்கள். எங்களால் உங்கள் நாடுகளுக்கு உதவ முடியும்” என்றார் சை இங் வென். தைவானில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு மட்டுமே.

 எர்னா சோல்பெர்க்,  சை இங் வென்
எர்னா சோல்பெர்க், சை இங் வென்

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் நான்காவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி. ஆனாலும், மற்ற நாடுகளைக் காட்டிலும் இழப்பு விகிதம் குறைவு. காரணம், ஜெர்மனியின் சான்சிலரான ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel). ``இது தேசத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்'' என்று எச்சரிக்கை செய்தார். பல கட்ட பிரச்னைகளையும் எதிர்கொண்ட பிறகு, இப்போது மீண்டுகொண்டிருக்கிறது ஜெர்மனி. `அவர் ஒரு டிப்ளோமடிக் லீடர் இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களின் ஒற்றுமையைப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்' என்று புகழ்கிறார்கள் அறிஞர்கள்.

 ஏஞ்சலா மெர்க்ல்,  கேத்ரின் ஜகப்ஸ்டாட்டர்
ஏஞ்சலா மெர்க்ல், கேத்ரின் ஜகப்ஸ்டாட்டர்

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஆறாக இருக்கும்போதே ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், வெளிநாட்டினர் வரத் தடை எனப் பம்பரமாக சுழன்றார். நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன் (Jecinda Ardern). ``தினமும் ஃபேஸ்புக் லைவ்வில் நாட்டையும் வீட்டையும் கவனித்துக்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள், தன் இரண்டு வயது மகளுக்குக் கழிவறை உபயோகிக்கச் சரிவர கற்றுத் தராமல்போனது எனச் சிந்தித்து, சிரித்து மக்களை இயல்பாக்குகிறார். இறுக்கமான நிலைமையைக் கச்சிதமாகக் கையாள்கிறார் ஜெசின்டா'' என அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரே ஜெசின்டாவைப் பாராட்டுகிறார்.

ன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய தோடு, கடுமையான ஊரடங்கைப் பின்பற்றியதால் ஐஸ்லாந்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தோடு நின்றிருக்கிறது. ஊரடங்கைத் தளர்த்தச் சொல்லி மக்கள் பிரதமர் கேத்ரின் ஜகப்ஸ்டாட்டரிடம் (Katrin Jakobsdottir) கோரிக்கை வைக்க, “இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதாலும் நம்மிடையே அந்த வைரஸ் இல்லை எனப் புரிந்துகொள்ளக் கூடாது” என மக்களைக் காப்பதில் அதீத கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் கேத்ரின்.

 ஜெசின்டா அர்டெர்ன்
ஜெசின்டா அர்டெர்ன்

லகின் மிக இள வயது பிரதமர் என்பதை நிரூபிக்கும்விதமாக சமூக வலைதளங்கள் மூலம் தன் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (Sanna Marin). அதோடு, சோஷியல் மீடியாவில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர்களை விழிப்புணர்வுப் பணிகளுக்கான இன்ஃப்ளூயன்ஸராக பயன்படுத்துகிறார். இவர்களுடைய பணியே அச்சுறுத்தல் இல்லா விழிப்புணர்வை வழங்குவதுதான். ``முன்கூட்டியே நடவடிக்கைகளில் இறங்கிய காரணத்தால் பாதிப்பிலிருந்து சுதாரித்துக்கொண்டோம். இனி எந்தவிதமான அச்சுறுத்தல் வந்தாலும் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்கிற சன்னாவின் பூஸ்ட்அப் வார்த்தைகளில் நிமிர்ந்து நிற்கிறது பின்லாந்து.

குழந்தைகளுக்காகச் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய ஒரே பிரதமர் நார்வே நாட்டின் எர்னா சோல்பெர்க் (Erna Solberg). அந்தச் சந்திப்பில் பெரியவர்களுக்கு அனுமதியில்லை. பிள்ளைகள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் அளித்தார். “இது அச்சுறுத்தக்கூடிய சூழல்தான். பயப்படுவதில் ஒன்றும் தவறில்லை” என அவர்களுக்குச் சொன்னார். நார்வேயில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 182.

 சன்னா மரின்,  மெட்டே ஃப்ரெட்ரிக்ஸன்
சன்னா மரின், மெட்டே ஃப்ரெட்ரிக்ஸன்

கொரோனா பாதிப்பு 7,912, இறப்பு 370 என்பதோடு டென்மார்க் நின்றிருப்பதற்கு காரணம், பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்ஸன் (Mette Frederiksen). ஐரோப்பாவிலேயே முதன்முறையாக இந்த நாட்டில்தான் பள்ளிகள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. நாடு முழுவதும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருக்கிறார் மெட்டே. அவரின் அறிவிப்புக்குப் பாராட்டுகளும் எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்திருக்கின்றன.

ங்களது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மிகப்பெரும் ஜனநாயக நாடுகள் பல ஆண்டுகளாக விவாதித்துக்கொண்டிருக்கும் சூழலில், பெண்களே நாட்டை வழி நடத்தினால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணம் இவர்களே!