Published:Updated:

`25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires

குப்பம்மாள்
News
குப்பம்மாள்

தமிழகம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன. `என்ன தமிழகத்திலா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டால், ஆம் என்பதைத் தவிரச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

Published:Updated:

`25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires

தமிழகம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன. `என்ன தமிழகத்திலா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டால், ஆம் என்பதைத் தவிரச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

குப்பம்மாள்
News
குப்பம்மாள்

ஆதிக்கம் - அடிமைத்தனம்... இந்த இரண்டு வார்த்தைகளின் பின்னால்தான் ஒட்டுமொத்த உலகின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால வரலாறு அடங்கிக் கிடக்கிறது. இந்த வார்த்தைகள்தான் வரலாற்றில் எத்தனை பெரிய போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் விதை வித்திட்டவை. நாம் அனைவரும் இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் இந்த 70 வருட காலத்தில் நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஜிபிஎஸ், கூகுள் என அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகத்துடன் இயைந்து நாமும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இன்றளவும் இந்த சமூகத்தில், கை ரேகை தேய்ந்துபோன கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு என எதுவும் கிடையாது. ஆனால், 24 மணி நேரத்தில் உறங்கும் 8 மணி நேரத்தைத் தவிர்த்து மீதமுள்ள 16 மணி நேரமும் வாங்கிய சொற்ப கடனுக்காகத் தலைமுறை தலைமுறையாய் ஆதிக்க முதலாளிகளுக்காக உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த கடைநிலை மக்களுக்கு இந்தச் சமூகம் சூட்டியிருக்கும் பெயர் `கொத்தடிமைகள்!'.

ஆம், செங்கல் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் நம் கண்களுக்கும், அரசு அதிகாரிகள் கண்களுக்கும் புலப்படாமல் புலம்பிக் கொண்டிருக்கும் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்கள். பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன.

`என்ன தமிழகத்திலா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டால், ஆம் என்பதைத் தவிரச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. வேலூர், விழுப்புரம், திருவள்ளூர் எனத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வறுமையுடன் தொழிற்சாலைகளில் போராடிக்கொண்டிருக்கின்றனர் இந்த மக்கள்.

கொத்தடிமை
கொத்தடிமை
Representational Image

இந்தியாவில் கொத்தடிமை முறையினை ஒழித்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் 1976-ம் ஆண்டு `கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம்' கொண்டுவரப்பட்டது'. இந்த சட்டத்தின் கீழ் இதுவரையில் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 65,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால், நடைமுறையில் அரசுகளின் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். ஆதிவாசிகள் பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் படி தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொத்தடிமைகளாகத் தொழிற்சாலைகளில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. தேவைக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில்தான் மக்கள் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக்கப் படுகின்றனர். இதில் பலர் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக குடும்பமாகக் கொத்தடிமைகளாக தற்போது வரையிலும் இருந்து வருகின்றனர்.

அப்படி, இரண்டு தலைமுறைகளாகக் கொத்தடிமையாக இருந்து மீண்ட குப்பம்மாள் இன்று, அந்த இருள் சூழ்ந்த உலகிலிருந்து ஏராளமான கொத்தடிமைகளை மீட்டு அனைவருக்கும் மறுவாழ்வு அளித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் வசித்து வருகிறார் குப்பம்மாள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையிலும், குப்பம்மாள் திருவள்ளூரில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் கொத்தடிமையாக இருந்து வந்தார்.

கிட்டத்தட்ட 25 வருடங்கள் அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குப்பம்மாள் தன்னுடைய கடந்தகால அனுபவங்கள் குறித்தும், லட்சிய போராட்டம் குறித்தும் நம்மிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

குப்பம்மாள்
குப்பம்மாள்

``என் கணவர் குடும்பம் திருவள்ளூர் அடுத்த சிறுவானூர்ல இருக்குற அரிசி ஆலையில கொத்தடிமைகளா இருந்துருக்காங்க. கல்யாணம் ஆகுற வரைக்கும் எனக்கு அது தெரியாது. எங்க வீட்லயும் ரொம்ப வறுமைங்கிறதால பெருசா எதுவும் விசாரிக்காம கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அவங்க குடும்பமா அரிசி ஆலையில வேல செய்யுறதா சொன்னாங்க. நானும் அவங்ககூட சேர்ந்து அங்க வேல பார்க்கப் போனேன். அங்க போனதுக்கு அப்புறமாதான் எனக்குத் தெரிஞ்சது, என் மாமனார் காலத்துல இருந்தே அவங்க குடும்பம் அங்க கொத்தடிமைகளா இருக்காங்கனு.

என் மாமனார் மில் முதலாளிகிட்ட ஒரு ஆபரேஷன் செலவுக்காக 5000 ரூபாய் அப்போ வாங்குனாராம். அதுக்கு மில்லு முதலாளி வட்டிக்கு மேல வட்டி போட்டதால அவங்களால கடன திருப்பி அடைக்க முடியல. வாங்குன கடன அடைக்காததால அவங்க குடும்பத்துல இருந்த எல்லாருமே ஆலையில வேலைக்கு வந்துருக்காங்க. என் வீட்டுக்காரர் அவரோட 15 வயசுல மில்லுக்கு வந்தாராம். எனக்கு கல்யாணம் நடந்தப்போ எனக்கு 13 வயசுதான். அதனால, என்ன நடக்குதுனு எனக்கு ஒண்ணுமே புரியல. நானும் அவங்ககூட சேர்ந்து ராப்பகலா உழைச்சேன். கல்யாணம் நடந்து முடிஞ்சு அரிசி ஆலைக்கு வேலைக்குப் போனதோட சரி. அதுக்கு அப்புறமா எங்க அப்பா, அம்மானு யாரையுமே என்னால பார்க்க முடியல.

நான், எங்க வீட்டுக்காரர், அவரு அப்பானு மூணு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மூட்டை நெல் பதப்படுத்தி அடுக்கி வெப்போம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான ரேஷன் அரிசிய முதலாளி வாங்கிக் கொடுத்துருவாரு. அதுக்கு 500 ரூபாய் கணக்கு செஞ்சு தினமும் எங்க சம்பளத்துல இருந்து 25 ரூபா பிடிச்சிப்பாங்க. நாங்க 100 மூட்டை நெல் அடுக்குனா எங்களுக்கு மொத்தத்துல 300 ரூபா கிடைக்கும். ஆரம்பத்துல ஒரு மூட்டைக்கு 3 ரூபாதான் கொடுத்தாங்க. கடைசியா மூட்டைக்கு 8 ரூபா வரைக்கும் தந்தாங்க.

எனக்கு முதல் குழந்தை பிறந்தப்போ ஆஸ்பத்திரிக்கு என்னையும் என் வீட்டுக்காரரையும் மட்டும்தான் அனுப்பி வெச்சாங்க. அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருஷம்தான் உயிரோட இருந்துச்சு. வேலை செஞ்சுட்டு இருந்ததால குழந்தையை பக்கத்துல உக்கார வெச்சிருந்தேன். அப்போ, குழந்தை பக்கத்துல இருந்த தண்ணித்தொட்டியில தவறி விழுந்து இறந்துடுச்சு. அத பாத்துட்டு நாங்க துடிச்சுப் போய்ட்டோம். உடனடியா குழந்தைய தூக்கிட்டு கணக்குப்பிள்ளகிட்ட போய் சொல்லி அழுதோம். அதுக்கு அவரு, `இருங்க முதலாளிகிட்ட சொல்லிட்டு வர்றேன்'னு சொல்லிட்டு கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம எழுந்து போயிட்டாரு. முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சுதான் வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ஆனா, அதுக்குள்ள என் குழந்தை இறந்துடுச்சு. என் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்யுறதுக்குக்கூட எங்க 3 பேர்ல என்னையும், என் வீட்டுக்காரரையும் மட்டும்தான் அனுப்பி வெச்சாங்க. எங்க மாமனாரு அங்கேயேதான் இருந்தாரு.

உடம்பு சரியில்லைன்னாகூட ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. அப்படியே வேல செஞ்சுட்டேதான் இருப்போம். இப்ப எங்களுக்கு ரெண்டு பொம்பள பிள்ளைகளும் ஒரு ஆம்பள பையனும்னு மூணு பிள்ளைங்க இருக்காங்க. அவங்களும் அந்த மில்லுலதான் பொறந்தாங்க. குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்கக்கூட முடியாது. ரொம்ப கொடுமை படுத்துவாங்க. 100 மூட்டை நெல்லுக்குக் கொறஞ்சா பொம்பளைன்னுகூட பாக்காம என்ன பயங்கரமா அடிப்பாங்க.

இதுக்கு மேல எதுக்கு உயிர் வாழணும், செத்துடலாம்னுகூட நானும் என் கணவரும் நெனச்சிருக்கோம். ஆனா, எங்க பிள்ளைங்களுக்காகதான் இப்ப வரைக்கும் உயிரோட வாழ்ந்துட்டு இருக்குறோம். அரிசி ஆலையில பெரிய கேட் இருக்கும். எல்லா பசங்களும் ஸ்கூலுக்கு போறத அது வழியா பாத்துட்டு என் பசங்களும் ஸ்கூலுக்கு போகணும்னு ஆசைப்பட்டாங்க. நான் 8-வது வரைக்கும் படிச்சிருக்கிறதால எனக்கு படிப்போடு அருமை நல்லா தெரியும். அதனால முதலாளிகிட்ட என் பசங்களும் பள்ளிக்கூடம் போய் மத்த பசங்கள மாதிரி படிக்கணும், அனுமதிங்கனு கேட்டேன். அதுக்கு முதலாளி, `உன் புள்ளைங்க படிச்சு என்னத்த கிழிக்கப் போறாங்க. ஒழுங்கா உங்க வேலைய சொல்லிக் குடுங்க'ன்னு எங்களை அடிச்சு விரட்டிட்டாரு.

என் புள்ளைங்க அங்க பட்ட கஷ்டம்தான் என்னை அங்கிருந்து வெளிய வரணும்னு யோசிக்க வெச்சுச்சு. அங்க வழக்கமா லோடு ஏத்திக்கிட்டு போற அண்ணன் ஒருத்தர் மூலமா உதவி கெடச்சது. அவரு ஒரு தொண்டு நிறுவனம் மூலமா, அரசு அதிகாரிகளுக்கு எங்கள பத்தி தெரியப்படுத்துனாரு. அப்போ 2006-ல திருவள்ளூர் வருவாய் அலுவலரா இருந்த முத்துலட்சுமி மேடம் எங்கள மீட்க ஆலைக்கு போலீஸோட வந்தாங்க. ஆனா, அவங்க வர்றது தெரிஞ்சு எங்க முதலாளி எங்கள எல்லாரையும் உள்ள வெச்சு வெளிய பூட்டிட்டு போயிட்டாரு. சோதனைக்கு வந்தவங்களும் மில் பூட்டி இருந்ததால தவறான தகவல்னு போயிட்டாங்க. அப்போ நான் 25 அடி உயரம் இருந்த மில்லு சுவர எகிறி குதிச்சி ஓடிப்போய் அவங்கள வழிமறிச்சு கூட்டிட்டு வந்தேன். அவங்க வந்துதான் எங்கள அந்த மில்லுல இருந்து மீட்டாங்க.

மீட்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டவர்கள்
Representational image

ஆனா, அங்கிருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு இன்னும் ரொம்ப கஷ்டமா இருந்துது. வெளி உலகம் ரொம்பவும் வித்தியாசமா இருந்துச்சு. எங்களுக்குத் தங்க வீடு, செய்ய வேலைனு எதுவுமே இல்லாம எங்க மூணு பசங்களோட நடுத்தெருவுல நிர்கதியா நின்னோம். அப்போ எங்கள மீட்க உதவி செஞ்ச அந்தத் தொண்டு நிறுவனம் மூலமாதான் எங்களுக்கு எல்லா அடிப்படை உதவிகளுக்கும் கெடச்சது. வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுனு எதுவுமே இல்லாம தவிச்சிட்டு இருந்தோம். அதுல இருந்து எழுந்து வர சில வருஷம் ஆச்சு. 2010-க்கு பிறகுதான் நாங்க பொருளாதார ரீதியா நிலையானோம்.

அதுக்கு அப்புறமாதான் நான், எங்களை மாதிரி கொத்தடிமைகளா சிக்கி தவிச்சிட்டு இருக்குற தொழிலாளர்கள எல்லாம் மீட்கணும்னு முடிவு பண்ணி அதுக்கான முயற்சிகள்ல இறங்குனேன். அதுக்கு என் கணவர் ஆதரவா இருந்தாரு.

அரசு அதிகாரிகளை எப்படி அணுகுறது, எந்தப் பிரச்னைக்கு யாருகிட்ட போகணும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். கொத்தடிமையா இருந்த எனக்கு, திருவள்ளூர் மாவட்டத்துல எங்கெல்லாம் இது மாதிரி சனங்க இருக்காங்கனு தெரியும். அரசு அதிகாரிகளை சந்திச்சு புகார் அளிச்சு அவங்க மூலமா முதல் முறையா 2010-ல ரெட்ஹில்ஸ் பக்கத்துல ஒரு அரிசி ஆலையிலிருந்து 10 பேரை மீட்டேன். அதுல தொடங்கி இந்த 10 வருசத்துல 100 பேருக்கு மேல வெவ்வேறு இடங்கள்ல இருந்து மீட்டதுல என் முயற்சிகளும் நிறைய அடங்கியிருக்கு.

தமிழ்நாடு முழுக்க எங்களை மாதிரி கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவங்க எல்லாரும் ஒன்றாக இணைந்து `விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கம்' ஆரம்பிச்சோம். எங்க சங்கத்தின் மூலமா மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொத்தடிமைகள் மீட்கப்பட்டிருக்காங்க.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்

அவங்களுக்கு சங்கத்தோட சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமா தையல் பயிற்சி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சினு 10-க்கும் மேற்பட்ட தொழில்களைக் கற்றுக்கொடுத்து சான்றிதழ்களும் கொடுத்துட்டு வர்றோம். நெறைய பேரு வெளியில வந்து சொந்தமா தொழில் செஞ்சுட்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறாங்க. அத பாக்கும்போது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கும். ஏதோ என்னால முடிஞ்சது ஒரு 100 பேரை அந்த இருள் சூழ்ந்த உலகத்துல இருந்து வெளியில கொண்டு வந்துருக்கேன். கொத்தடிமையா இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொருத்தரும் என்ன மாதிரியே முயற்சி செஞ்சா, தமிழ்நாட்டுல கொத்தடிமை முறைய முழுமையா ஒழிச்சிடலாம். அந்த நம்பிக்கையிலதான் நானும் போராடிட்டு இருக்கேன்.

அங்கிருந்து வெளிய வந்து என்னோட பசங்க எல்லாரையும் நல்லா படிக்க வெச்சேன். இப்போ சுயமா தொழில் செஞ்சு ஒரு நாளைக்கு 600-ல இருந்து 700 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்குறோம். என் பெரிய பொண்ணு டிகிரி முடிச்சிருக்கா, பசங்க ஸ்கூலுக்கு போயிட்டு இருக்காங்க. போதிய விழிப்புணர்வு இல்லாததாலதான் இன்னும் கூட நெறைய பேரு செங்கல் சூளையிலும், அரிசி ஆலையிலயும் கொத்தடிமைகளா இருக்காங்க. என்றாலும், அரசாங்கம் இந்த விசயத்துல இப்ப சிறப்பா செயல்பட்டு வருது.

இந்த உலகத்துல யாருக்கும் யாரும் அடிமை கிடையாது. அதை தெரிஞ்சுக்கிட்ட விழிப்பும், மன உறுதியும் இருந்தாலே போதும். எவ்ளோ பெரிய பிரச்னையா இருந்தாலும் வெளிய வந்துடலாம். அதுக்கு நான் ஒரு சின்ன உதாரணம் சார்!"

இருளிலிருந்து திரண்ட ஒளியாக விடைகொடுக்கிறார் குப்பம்மாள்.

குப்பம்மாள்
குப்பம்மாள்

குப்பம்மாளின் சேவையை அங்கீகரிக்கும் விதமாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ அவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.

இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 14-ம் பிரிவு, குறைந்த கூலி சட்டம் 1948, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை அரசு அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்தினால், பல குப்பம்மாக்கள் மறுவாழ்வு பெறுவார்கள், நாட்டில் கொத்தடிமை முறையை முழுமையாக ஒழிக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.