
சுவை
தீபாவளிப் பலகாரப் பட்டியலில் முறுக்குக்குத் தவிர்க்க முடியாத இடம் உண்டு. வீடுகளில் முறுக்குச் சுற்றிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி, கடை முறுக்குகளில் கண் பதிக்கத் தொடங்கிய மக்களின் மனங்களை ஆக்கிரமித்துவிட்டது `மணப்பாறை முறுக்கு.’ அரிசி முறுக்கு, நெய் முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, சிறுதானிய முறுக்கு, ஓம முறுக்கு, கடலை மாவு முறுக்கு, பூண்டு முறுக்கு என... மணப்பாறையில் அணிவகுக்கும் வகை வகையான முறுக்குகள் வாயூறவைக்கின்றன. மொறு மொறுவென இதமாக நாவில் கரையும் பதமும், சுண்டியிழுக்கும் ருசியும் மணப்பாறை முறுக்கின் விசேஷம்.
திருச்சியிலிருந்து 48 கி.மீ தொலைவில் உள்ளது மணப்பாறை. திரும்பும் பக்கமெல்லாம் முறுக்குக் கடைகள். விற்பனையில் பரபரப்பாக இருந்த மணப்பாறை முத்தன் தெருவைச் சேர்ந்த ‘முறுக்கு’ மனோகரைச் சந்தித்துப் பேசினோம். ‘டேஸ்ட் பாருங்க...’ என்று முறுக்கை நீட்டியபடி பேச ஆரம்பித்தார், “60வருஷத்துக்கும் முன்னாடி மணி ஐயர் என்பவர்தான் எங்க ஊர் ரயில்வே ஸ்டேஷனில் இந்த முறுக்கு வியாபாரத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். அவரிடம் வேலைசெய்த பலரில் என் அப்பா துரைசாமியும் ஒருத்தர். ஆரம்பத்தில் நல்லா போய்க்கொண்டிருந்த மணி ஐயரின் முறுக்கு வியாபாரம், என்ன காரணத்தினாலோ திடீர்னு சரிவைச் சந்திச்சிருக்கு. தொழில் நஷ்டமடைஞ்சதால குடும்பத்துடன் இந்த ஊரைவிட்டே போய்விட்டாராம் மணி ஐயர். ஆனால், அவரிடம் வேலை பார்த்தவங்களுக்கு வேற வழி இல்லை. ‘எப்படியாவது இந்த முறுக்கு வியாபாரத்தை முன்னேத்திரணும்’ங்கிற முனைப்போடு வேலை செஞ்சிருக்காங்க. அவங்களோட கடின உழைப்புதான் இன்னைக்கு மணப்பாறை முறுக்குக்குத் தனி அந்தஸ்து கிடைக்கக் காரணம். இப்போ சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முறுக்கு வியாபாரத்தில் இருக்காங்க. மணப்பாறை முறுக்குக்கு வேறெந்த ஊர் முறுக்கும் ஈடுகொடுக்க முடியாது.

மணி ஐயருக்குப் பிறகு, ரயில்வே ஸ்டேஷன்ல எங்க அப்பா தனியா கடை போட்டார். நாங்க அண்ணன் தம்பிங்க ஆறு பேரு. 15 வயசுலேயே என் அப்பாவுக்கு உதவியா நான் முறுக்கு சுட ஆரம்பிச்சுட்டேன். இந்தத் தொழிலில் பெரிய வருமானம் கிடைக்காது. அதிகமான உழைப்புக்குக் குறைவான கூலிங்கிறதால என் அண்ணன், தம்பிகளெல்லாம் வேற வேற வேலைக்குப் போயிட்டாங்க. ஆனால், ஏனோ எனக்கு மட்டும் இந்தத் தொழிலை விட்டுப் போக மனசு இல்லை. கொஞ்ச காலத்துக்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட் பக்கம் கடை போட்டு பிசினஸை டெவலப் பண்ணிட்டேன். `முறுக்குதான் என்னுடைய வாழ்வு’ன்னு ஆனதுக்குப் பிறகு வெறும் மனோகரா இருந்த நான், `முறுக்கு மனோகரா’கிட்டேன்” என்று நெகிழ்ந்தவர் முறுக்கு செய்முறைகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்...

``சரியான விகிதத்தில் அரிசியையும், உளுந்தையும் அளவான நீரோடு சேர்த்து அதோடு எள், ஓமம், சீரகம் ஆகியவற்றையும் கலந்து, மாவை பக்குவமாகத் தயார் செய்யணும். விறகு அடுப்பில் எண்ணெயைக் காயவைக்க வேண்டும். கைப்பிடி மாவை முறுக்குக்குழாயில் வைத்துச் சுற்றி, முறுக்கைப் பிழிந்து, பொன்னிறத்தில் பொரித்து எடுக்கணும். கொஞ்சம் டைம் மிஸ் ஆனாலும், எண்ணெய் ஓவராக் கொதிச்சு முறுக்கு கருகிடும். இந்த கைப்பக்குவத்தைவிட மணப்பாறை முறுக்கு ருசிக்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் இருக்கு.” சஸ்பென்ஸ் வைத்தவர், ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்துப் பருகச் சொன்னார். லேசான உவர்ப்புத் தன்மையுடன் இருந்தது. இந்தத் தண்ணீர்தான் மணப்பாறை முறுக்கின் தனிச்சுவைக்கு முதன்மையான காரணம்ங்க” என்றார்.
அடுத்ததாக `பாரதவிலாஸ்’ முறுக்குத் தயாரிப்பாளர் ராஜசேகரைச் சந்தித்தோம், “இந்த முறுக்குத் தொழில்ல நாங்க மூன்றாவது தலைமுறை. திருநெல்வேலி அல்வா ருசிக்கு எப்படி தாமிரபரணி ஆற்றின் தண்ணீர்தான் காரணம்னு சொல்லுவாங்களோ... அதைப்போல மணப்பாறை முறுக்கின் ருசிக்கும் இங்குள்ள தண்ணீரின் தன்மைதான் காரணம். முதலில் மாவைப் பிழிந்து, மிதமாக வேகவைத்து எடுத்துவிடுவோம். அடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு எடுப்போம். இரண்டு முறை எண்ணெயில் வேக வைத்து எடுப்பதுதான் மணி அய்யர் காலத்துத் தொழில் ரகசியம். இரண்டு முறை வேகவைப்பதால், முறுக்கின் மொறுமொறுப்புத் தன்மை கூடும். மணப்பாறைத் தண்ணீர், அரிசி மாவு, ஓமம், எள், சீரகம், வறுகடலை, மாவு பிசையும் பக்குவம், இரண்டு முறை பொரிப்பது என அனைத்தும்தான் மணப்பாறை முறுக்கின் ருசிக்கான சீக்ரெட்” என்று சிரிக்கிறார்.

`அருள் அன்னை முறுக்கு ஆலை’யின் உரிமையாளர் எட்வின் அபிலாஷிடம் பேசினோம். “முள் முள்ளாக இருப்பதுதான் மணப்பாறை முறுக்கு. மக்களின் ரசனைகள் மாற மாற, மணப்பாறைப் பாரம்பர்யம் மாறாமல் ராகி, பூண்டு, புதினா, காரம் என வகை வகையாக முறுக்குகளைச் செய்து விற்கிறோம். எங்க ஊர் முறுக்கு அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஆனால், முறுக்குத் தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கை எண்ணெயைவிட வேகமாகக் கொதிக்கிறது. இந்தத் தொழிலில் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் ஒருவர், மாசம் பத்தாயிரம் சம்பாதிப்பதே சிரமம். அதனால், இந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்டு பலர் வேறு வேலைக்கு மாறிவருகிறார்கள். மணப்பாறை முறுக்கையும், அதை நம்பி உள்ளவர்களின் வாழ்க்கையையும் எப்படியாவது காப்பாத்தியாகணும். ஆனா, என்ன வழினுதான் தெரியலை” என்று அவர் சொன்னபோது, மனதை எதுவோ பிசைந்ததுபோலிருந்தது!