Published:Updated:

`செய்ய மனசு, ஒருங்கிணைக்க சமூக வலைதளம்... உதவ இது போதாதா?' - இளம் சேவகி சிந்து #SheInspires

சிந்து
News
சிந்து

தனது 18 வயது முதல் இப்படி பல வகையிலும் சமூக சேவை செய்து வரும் சிந்து, இந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் மூலதனம் சமூக வலைதளங்கள் மட்டுமே என்கிறார்.

Published:Updated:

`செய்ய மனசு, ஒருங்கிணைக்க சமூக வலைதளம்... உதவ இது போதாதா?' - இளம் சேவகி சிந்து #SheInspires

தனது 18 வயது முதல் இப்படி பல வகையிலும் சமூக சேவை செய்து வரும் சிந்து, இந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் மூலதனம் சமூக வலைதளங்கள் மட்டுமே என்கிறார்.

சிந்து
News
சிந்து

எளியவர்களுக்கு உதவிகள் செய்யவும் இயலாதவர்களுக்கு சேவைகள் செய்யவும் மனமிருந்தால் மட்டும் போதுமா? சமூக வலைதளங்களை மட்டுமே பயன்படுத்தி மக்களுக்கு உதவ முடியுமா? 20+ வயதிலேயே இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்த முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நேர்மறை பதிலாக இருக்கிறார், திருச்சியைச் சேர்ந்த 23 வயதேயான பட்டதாரி இளம்பெண் சிந்து.

கிட்டத்தட்ட 500 மரக்கன்றுகள் நடவு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைப்பு, கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து தற்போதுவரை 1,500 குடும்பங்களுக்குத் தேவையான மளிகை உதவி, கல்வி உதவி, இரண்டு வருடங்களாகத் தினமும், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்குத் தேவையான உதவிகள்... அடுக்கிக்கொண்டே போகலாம் சிந்துவின் சேவைப் பக்கங்களை. மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தன் விழிப்புணர்வு செயல்பாடுகளின் மூலம் 35 பேர் வரை புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் செய்ய வைத்துள்ளார். தனது 18 வயது முதல் இப்படி பல வகையிலும் சமூக சேவை செய்து வரும் சிந்து, இந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் மூலதனம் சமூக வலைதளங்கள் மட்டுமே என்கிறார்.

சிந்து
சிந்து

சிந்துவிடம் பேசினோம். ``நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திருச்சியிலதான். சின்ன வயசுலயிருந்தே, யாருக்காச்சும் ஏதாச்சும் ஒரு வகையில உதவுறவளா நான் இருக்கணும்னு நினைப்பேன். ஆனாலும் கல்லூரியில இரண்டாம் ஆண்டு படிச்சப்போதான் அந்தப் பயணம் தொடங்கியது.

ஆரம்பத்துல, வீட்டுல எனக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியை சேமிச்சும், சேவையில் ஆர்வம் உள்ள நண்பர்கள்கிட்ட உதவிகளை பெற்றும் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம்னு திருச்சி மாவட்டத்துல இருக்குற சில இல்லங்களுக்குப் போய், அவங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். அதுல கிடைச்ச மன நிறைவு, இன்னும் நிறைய உதவிகள் செய்யணும்னு உத்வேகம் கொடுத்தது. மரம் நடுவது, சுற்றுச்சூழலை தூய்மையா வைக்கிறதுனு தொடர்ந்த என் பயணம், இளங்கலையில் ஆங்கிலம் படிச்ச என்னை முதுகலையில சோஷியாலஜியை படிக்கத் தூண்டியது. ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் சேவைனு தொடர விரும்பினேன். அதுக்காக நண்பர்களுடன் சேர்ந்து `மாறுவோம் மாற்றுவோம்' என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினேன்.

சிந்து
சிந்து

தொடக்கத்துல எங்ககிட்ட நிதி இல்லைன்னாலும், உழைப்பு இருந்தது. உடல் உழைப்பால செய்யக்கூடிய சேவை என்னனு யோசிச்சோம். சின்ன குழுவா சேர்ந்து குளம், ஏரி, கல்லூரி வளாகங்கள்ல மரக்கன்றுகளை நட ஆரம்பிச்சோம். 5,10-னு ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துல 500-க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டிருக்கோம். இயற்கையின் படைப்பு கொடைகள்ல ஒன்றான பனை விதைகளை நடத் தொடங்கினோம். அவ்வப்போது நண்பர்களோட முயற்சியால கிடைக்குற சிறு தொகையில எளியவர்களுக்கு உதவி வந்தோம்.

எங்க சேவைகளையெல்லாம் மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்து அதன் மூலம் அதை இன்னும் அதிகரிக்க முடிவு செய்து, சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் யூடியூப் போன்றவற்றுல தினமும் நாங்க செய்யும் பணிகளை பதிவிட ஆரம்பிச்சோம். வாட்ஸ்அப் குழுவாக ஆரம்பிச்சது, அமைப்பாக மாறுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது அப்போதான்.

எங்களுடைய பணிகளைப் பார்த்தும், என் மேல நம்பிக்கை வெச்சும் சமூக வலைதளங்கள்ல பலர் இப்போ எங்ககிட்ட உதவிகளை அனுப்பி வைக்கிறாங்க. அதை நாங்க இல்லாதவங்களுக்கு கை மாற்றிவிடுறோம்.

சிந்து
சிந்து

சமூக வலைதளங்களின் மூலம் மட்டுமே எங்க குழு பல நூறு மக்களின் பசியைப் போக்கியிருக்கு, படிப்புச் செலவை ஏற்றிருக்கு, மருத்துவ உதவிகள் செய்திருக்கு. முக்கியமா ரத்ததானம் அதிகளவில் செய்துட்டு வர்றோம்'' என்றார்.

மேலும் சிந்து, ``எங்க அமைப்பைச் சேர்ந்தவங்க எல்லாரும் ஒரே ஊரைச் சேர்ந்தவங்க இல்லை, பல்வேறு ஊர்கள்ல இருந்தும் ஒரு குடையின் கீழ் இணைஞ்சிருக்கோம். அதனால அவங்க மூலமா தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள்லயும் உதவிகள் செய்துட்டு வர்றோம். கஜா புயலால் பாதிக்கப்பட்டவங்களுக்குத் தேவையான உதவிகள் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

கொரோனா ஊரடங்குக் காலத்துல கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வழங்கியிருக்கோம். சில மாணவர்களின் கல்லூரிப் படிப்புச் செலவை ஏற்றிருக்கோம். இப்போ சில மாதங்களா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துறதோடு கீமோதெரபி செய்துகொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் செய்வது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வர்றோம்.

அந்த வகையில எங்க குழுவின் மூலம் கடந்த ரெண்டு மாசத்துல மட்டும் 35 பேர் முடிதானம் செஞ்சிருக்காங்க. அதுல நான், என் அத்தை, என்னோட ரெண்டு சகோதாரர்களும் அடக்கம்'' என்றார்.

`வீட்டில் சிந்துவுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?' என்று கேட்டால், மெலிதாகப் புன்னகைக்கிறார். ``பெண் என்பதாலயும், கல்லூரி செல்லும் வயதுதான் ஆகுது என்பதாலயும் எங்கம்மாவுக்கு ஆரம்பத்துல துளியும் என் செயல்பாடுகள்ல விருப்பமில்ல. ஆனா என் முயற்சியையும் உறுதியையும் உணர்ந்ததுக்கு அப்புறம், `அக்கா குழந்தையின் பிறந்தநாளுக்கு சாலையோரங்கள்ல வசிக்கிறவங்களுக்கு உணவு வழங்கிக் கொண்டாடலாமா சிந்து?'னு கேட்கிற அளவுக்கு என்னை புரிஞ்சுக்கிட்டாங்க'' என்கிறார்.

சிந்து
சிந்து

கடலூர், திருச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு வருடங்களாக சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர் `மாறுவோம் மாற்றுவோம்' குழுவினர். சமூக வலைதளங்களையே அதற்கான உதவிகளை ஒருங்கிணைக்கும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

தற்போது படிப்பை முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிந்துவுக்கு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு என ஓர் இல்லம் உருவாக்க வேண்டும், அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் தன் முயற்சியில் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என்பதே லட்சியம்.

சேவைகள் தொடரட்டும்!