
தமிழக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு, சவுமியாவின் கனவை நினைவாக்கியதோடு ஒரு தலைமுறையின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
“எல்லாமே கனவு மாதிரியிருக்கு சார்... சின்ன வயசுல இருந்து கூடவே வளர்ந்த கனவு சார் டாக்டராகுறது... ரெண்டாவது தடவை நீட் எழுதி 184 மார்க்குதான் கிடைச்சுச்சு. ‘இந்த மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்காது’ன்னு மனசொடிஞ்சு போயிட்டேன்... இப்போ வரைக்கும் எம்பிபிஎஸ்ல சேர்ந்ததை நம்ப முடியலே...” - சவுமியாவுக்குக் கண்கள் கலங்குகின்றன.
மற்றவர்களுக்கு எப்படியோ, சவுமியாவைப் பொறுத்தவரை இது மகத்தான சாதனை. பழங்குடியாக அங்கீகரிக்கப்படாத, லம்பாடி நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் வசிக்கும் லம்பாடி சமூகத்திலேயே இவர்தான் முதல் மருத்துவர் என்றும் சொல்கிறார்கள். தமிழக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு, சவுமியாவின் கனவை நினைவாக்கியதோடு ஒரு தலைமுறையின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ள பி.எல்.தண்டா (பொரசப்பட்டு லம்பாடி தண்டா) என்ற சிறு கிராமத்தில் வசிக்கிறார் சவுமியா. அப்பா மண்ணு, அவ்வப்போது கேரளாவுக்குப்போய் கால்வாய் தூர்வாரும் பணி செய்கிறார். அம்மா ராதா உள்ளூரில் விவசாயக்கூலியாக இருக்கிறார். அக்கா, இரண்டு தம்பிகளோடு பிறந்த சவுமியா, அந்தச் சமூகத்துக்கே இன்று முன்மாதிரியாகியிருக்கிறார்.

“படிப்புதாம்மா வாழ்க்கையை மாத்தும்னு அப்பா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். அக்கா பத்தாவது வரைக்கும் படிச்சா. அவளுக்குத் திருமணமாகிடுச்சு. சின்ன வயசுலயே டாக்டராகணுங்கிற ஆசை என் மனசுல ஒட்டிக்கிச்சு. எந்த சிரமத்தையும் அப்பா எங்ககிட்ட காமிச்சதில்லை. படிப்புன்னு காசு கேட்டா எங்கேயாவது கடன் வாங்கியாவது குடுத்திருவார். அரத்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலதான் படிச்சேன். என்னோட நம்பிக்கை சாகாம காப்பாத்தினது எங்க ஹெச்.எம். சதாசிவம் சார்தான். ‘வெறியோட படி... நிச்சயம் டாக்டராவே’ன்னு அடிக்கடி சொல்வார். பத்தாவதுல 461 மார்க் எடுத்தேன். ப்ளஸ் டூவிலும் ஓரளவுக்கு மார்க் வந்துச்சு. நீட் வந்தபிறகு கொஞ்சம் பயம் வந்துச்சு. ‘இதுவரைக்கும் நீ எழுதின தேர்வுகளைப் போல இதுவும் ஒரு தேர்வு, அவ்வளவுதான், தைரியமாப்படி’ன்னு எங்க ஹெச்.எம். சொன்னார்.

ப்ளஸ்டூ முடிச்சுட்டு நேரடியா நீட் தேர்வு எழுதினேன். பெரிசா பயிற்சியில்லை. 90 மார்க்தான் வந்துச்சு. ‘சரி, எம்பிபிஎஸ் வேணாம், நர்சிங் படி’ன்னு எல்லாரும் சொன்னாங்க. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சரி, நம்ம நிலைமைக்கு இதெல்லாம் சரியா வராதுன்னு புரிஞ்சுக்கிட்டு நர்சிங்குக்கு ஓகே சொல்லிட்டேன். ஆனா, அப்பா ‘நான் எப்படியாவது பணத்தை ரெடி பண்றேன். நீ கோச்சிங் போயி நீட் எழுது’ன்னு கடன் வாங்கிச் சேத்துவிட்டார். ரெண்டாவது முறை எழுதி 184 மார்க் எடுத்தேன்.
இந்த மார்க்குக்கும் நிச்சயம் எம்பிபிஎஸ் கிடைக்காது. அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலே. ரொம்பத் தவிப்பா இருந்துச்சு. என்னைவிட அப்பாவும் அம்மாவும் உடைஞ்சு போயிட்டாங்க. அந்தச் சூழல்லதான், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு உண்டுன்னு அறிவிச்சாங்க. நம்பிக்கையோட கவுன்சிலிங் போனோம். ஆனா, என் மார்க்குக்கு பிரைவேட் காலேஜ்தான் கிடைச்சுச்சு. அதுக்கான கட்டணத்தைக் கேட்டா மலைப்பா இருந்துச்சு. ‘வேணாம் விட்றலாம்’னு நினைச்சோம். அங்கிருந்த ஒரு சார், ‘பேங்க்ல கடன் கொடுப்பாங்கம்மா, முதல்ல காலேஜைத் தேர்வு பண்ணிக்கோ, விட்றாத’ன்னு சொன்னார். சரி, சும்மா தேர்வு பண்ணி வச்சுக்குவோம்ன்னு நினைச்சுத்தான் கவுன்சிலிங்ல கலந்துக்கிட்டேன்.
இப்போ அரசாங்கத்திலேயே கல்விக்கட்டணம் கட்றோம்ன்னு சொல்லிட்டாங்க. நம்ப முடியலே... எங்காவது ஒரு இடத்துல தப்பு பண்ணியிருந்தாலும் இந்த வாய்ப்பை இழந்திருப்பேன்... எனக்கு வழிகாட்டின எங்க தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கவுன்சிலிங்ல என்னைக் கல்லூரியைத் தேர்வு பண்ணுமான்னு வழிகாட்டின முகம் தெரியாத சார்... எல்லாருக்கும் ரொம்ப நன்றி... நான் டாக்டராகி என்னைமாதிரி கஷ்டப்படுற மக்களுக்கு சிகிச்சை கொடுப்பேன்...” என்கிறார் சவுமியா.
சவுமியாவின் அப்பா மண்ணு, மகள் பேசுவதை நெகிழ்ந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கிறார். “உங்கள் வீட்டிலிருந்து ஒரு டாக்டர்... இப்போ எப்படியிருக்கு” என்று அவரிடம் கேட்டேன். என் கைகளைப் பற்றிக்கொண்டு “அரசாங்கத்துக்கு நன்றிய்யா” என்றார். அவர் கண்களில் நீர் கசிகிறது. ஆனந்தக் கண்ணீர்!