Published:Updated:

``இல்லாதவர்களுக்கு உதவுவது ஒரு போதை!

லிடியா
News
லிடியா

பசியோடு இருப்பவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணி செய்பவர்கள், கல்வி பெற வாய்ப்பு இல்லாதவர்கள் என வாழ்வு முழுவதும் கஷ்டங்களைச் சந்திப்பவர்களுக்கு தோள் கொடுக்கிறார் இளம் சேவையாளர் லிடியா.

Published:Updated:

``இல்லாதவர்களுக்கு உதவுவது ஒரு போதை!

பசியோடு இருப்பவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணி செய்பவர்கள், கல்வி பெற வாய்ப்பு இல்லாதவர்கள் என வாழ்வு முழுவதும் கஷ்டங்களைச் சந்திப்பவர்களுக்கு தோள் கொடுக்கிறார் இளம் சேவையாளர் லிடியா.

லிடியா
News
லிடியா

தினம் தினம் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்தப் பாகுபாடுமின்றி சுழற்றியடிக்கும் சித்திரவதை, பசி! நம் தினசரிகளில் கடக்கும் பலருக்கும் இந்தச் சித்திரவதையே வாழ்வாகி இருக்கும். பசியைப் போக்கிக்கொள்ள மட்டுமே வாழ்வை அர்ப்பணித்து இருக்கும் எளியவர்கள் எத்தனை பேர்?

இப்படி, பசியோடு இருப்பவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணி செய்பவர்கள், கல்வி பெற வாய்ப்பு இல்லாதவர்கள் என வாழ்வு முழுவதும் கஷ்டங்களைச் சந்திப்பவர்களுக்கு தோள் கொடுக்கிறார் இளம் சேவையாளர் லிடியா.

திருநெல்வேலி, சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் 21 வயது இளம் பெண் லிடியா. பள்ளிப் பருவம் முடிந்த உடனே அவர் துவங்கிய விஎஃப்ஹெச் (VFH- Voice From Heart) தன்னார்வல அமைப்பு தற்போது வளர்ந்து, கொரோனா சூழ்நிலையில் பசியாலும் பிணியாலும் வாடும் பலருக்கு உதவி வருகிறது.

லிடியா
லிடியா

தன் பணிகள் குறித்தும், அனுபவங்கள் குறித்தும் பேசினார் லிடியா.

``சிறு வயதில் இருந்தே எனக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அடுத்தவர்கள் இடத்தில் என்னை பொருத்திப் பார்க்கும் பழக்கம்தான் இதற்குக் காரணம். சாலை ஓர யாசகர்கள், திருநங்கைகள் நிலை புரிந்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் என் கோபங்களை, சமூகப் பார்வையை எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக நண்பர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள Voice From Heart என ஒரு முகநூல் பக்கம் தொடங்கினோம். பின் நாங்கள் மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்குச் சென்று உதவினோம். அப்படித்தான் தொடங்கியது VFH. பின் குழுவாக நண்பர்கள் இணைய, உணவுப் பொருள்கள் வழங்க ஆரம்பித்தோம். பள்ளிக்குழந்தைகளிடம் மாதம் 10 ரூபாய் கேட்போம்.

இன்றைய குழந்தைகளுக்கு 10 ரூபாய் பெரிதல்ல. ஆசிரியர்களும் 100 ரூபாய் கொடுத்து உதவ முன்வர, இப்படி உதவும் எண்ணம் உள்ளவர்கள் எல்லாம் சிறு தொகை அளிக்கத் திட்டம் வகுத்தோம். அத்துடன், உதவும் மனங்களையும் பரவலாக்க இத்திட்டம் உதவியது. இவ்வாறு, நான் வசிக்கும் பரமக்குடி, ராமநாடு பகுதிகளில் தொடர்ந்து இல்லாதவர்களுக்கு உதவி வந்தோம்.

2018-ம் ஆண்டு கஜா புயல் வந்தபோது, தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் தெரிந்த நண்பர்கள் மூலம் உதவினோம். நாங்கள் உதவிய பகுதிகளுக்கு வேறெந்த அமைப்பும் உதவவில்லை, ஊடகங்களும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை அளித்தது.

பின் சென்னைக்கு பி.டெக் படிப்பதற்காக வந்தேன். முதல் நாளில் மெரினா கடற்கரையில் இருக்கும் யாசகர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தேன்.

லிடியா
லிடியா

என்னைப் பார்த்து ஊக்கமடைந்த தோழிகளும் என்னுடன் சேர, தொடர்ந்து உணவளிக்கும் பணியைத் தொடர்ந்தோம். மற்ற சில கல்லூரி மாணவர்களும் உடன் சேர, இப்போதுவரை சென்னையில் ஒரு நண்பர்கள் குழு வி.எஃப்.ஹெச் பணியை செய்து வருகிறது.

பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். படிப்பில் அவர்களை திருப்திபடுத்தினால்தானே, இதுபோன்ற பணிகளுக்கு அனுமதி கிடைக்கும்! நெல்லையில் உடன் படிக்கும் மாணவிகள், சீனியர்கள் என அனைவருக்கும் என்னை பிடித்துப்போக அவர்களும் என்னுடன் இணைந்து பிறருக்கு உதவ முன்வந்தனர். கல்லூரியிலும் வெளியிலும் நடக்கும் பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, அந்தப் பணத்தை VFHக்கு செலவு செய்தேன். பின் இதற்காகவே போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். அப்படித்தான் இந்திய அளவிலான `வாய்ஸ் அப் இந்தியா' போட்டியில் இறுதி சுற்றுவரை சென்றேன்.

கையில் பணமே இல்லாதபோது, அனுமதி எதுவும் கேட்காமலே நண்பர்களின் பர்ஸில் இருந்து எடுத்துக் கொடுத்துவிடுவேன். அவர்களும் எதுவும் கேட்பதில்லை! கையில் பணம் இல்லாதபோதுகூட தேவை ஏற்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் மனதில் இருக்கும். இல்லாதவர்களுக்கு உதவுவது ஒரு போதை. அவர்களின் வாழ்த்துதான் என்னை இன்னும் இன்னும் ஓடவைக்கும்.

உழைப்பாளர் தினம் அன்று தெருவோரக் கடை வைத்திருக்கும் பாட்டிகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்தோம். பெரும்பாலானவர்கள் புடவை கேட்டது வியப்பு! ஒரு நாள் ரயில் நிலையதில் இருக்கும் யாசகர்களுக்கு உதவக் கிளம்பினோம்.

லிடியா
லிடியா

ரயில்நிலையக் காவலர், `யாசகர்களுக்கு சில அமைப்புகள் உணவு வழங்குகின்றனர், நீங்கள் சுகாதார ஊழியர்களுக்கு உதவலாமே' எனக் கூறினார். அதன் பின் சுகாதார ஊழியர்களிடம் பேசினோம். பெரும்பாலும் உதவ நினைக்கும் அத்தனை பேருடனும் பேசுவது என் வழக்கம். நாம் அவர்களுடன் பேசுவதும் பழகுவதும்தான் மிகப் பெரிய உதவி. முக்கியமாக, மனநலம் குன்றிய குழந்தைகளுடன்.

VFH இரண்டாவது ஆண்டு விழாவின்போது சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு அளித்தோம். அவர்கள் கூறிய வாழ்த்துகளும் வார்த்தைகளும் வாழ்நாளில் மறக்க முடியாதவை.

முதன்முதலாக ஒரு பெண்ணின் கல்விக்கு உதவியதை மறக்க முடியாது! அவளுக்கு சொந்த அக்காவாக என்னை உணர்ந்து, நம்பிக்கை கொடுத்தேன். ஆனால், கடைசி நிமிடம் வரை பணம் கிடைக்கவில்லை. எங்கிருந்தோ வந்து ஒரு நண்பரின் உறவினர் உதவுவதாக முன்வந்தார். இப்படி நான் பல முறை தடுக்கி, தயங்கி நிற்கும் போதெல்லாம் ஒரு தேவதை உதவ ஓடிவருவார். ஆரம்பத்தில் ஓடி ஓடி உதவி செய்த நண்பர்கள் இன்று உடன் இல்லை. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்கள் என்றும் இல்லை. என்னால் முடியும் வரை நான் இந்த உதவிகளைச் செய்து கொண்டிருப்பேன்.

லிடியா
லிடியா

சமூக ஊடகங்களில் உதவிகள் குறித்து போஸ்ட் செய்வதில்லை. மாறாக ஊக்கமளிக்கும் சொற்றொடர்களைப் பகிர்கிறோம். கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கிய `திறமைக்கான திறவுகோள்' என்னும் திட்டம் லாக்டௌனால் முடங்கியிருக்கிறது.

இந்தச் சேவைப் பயணத்தில் பலர் எனக்கு உதவியதுபோல, பல பல உபத்திரங்களும் வந்தன. அரசியல் கட்சியினர் விளம்பரத்துக்காகப் பயன்படுத்த முயன்றனர். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களிடம் உதவி கேட்டால், ஒரு பெண்ணுக்குச் செய்யும் உதவிக்கு கைம்மாறாக எதையும் கேட்கலாம் என எண்ணுகின்றனர். பிற தன்னார்வ அமைப்புகளுக்குள் பெரும் அரசியலே நடக்கிறது. VFH-ஐ என்.ஜி.ஓ வாக பதிவு செய்யவே பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. பெண்ணாக வீட்டை விட்டு வெளிவருவதே இந்த சமூகத்தில் பெரும் போராட்டமாகத்தான் உள்ளது. அத்தனை பேச்சுகள்! இத்தனையும் கடந்து இன்றுவரை ஓடவைத்துக் கொண்டிருப்பது எளியவர்களின் புன்னகைதான். உலகில் புன்னகை இருக்கும்வரை என் உதவிகளும் தொடரும்” என்றவர், சில நாள்களுக்கு முன் தன் கேசத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

தனக்கென மட்டும் மனிதர்கள் வாழும் உலகில் லிடியா போன்றவர்கள்தாம் எத்துணை அற்புதம்!