தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரின் மகன் தர்மசுதன், அதே பகுதியிலுள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று வழக்கம்போல் தர்மசுதன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் தர்மசுதனை ஆசிரியர் கண்டித்ததோடு வகுப்பறைக்குள் அமரவைத்திருக்கிறார். மதியம் 11 மணி அளவில் இடைவேளையின்போது மாணவ, மாணவிகள் அனைவரும் வெளியில் சென்றிருக்கின்றனர்.

ஆனால், தர்மசுதனை மட்டும் ஆசிரியர் விடவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டுக்கு வந்த மாணவன் தர்மசுதன், தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, `தன்னை இடைவேளையின்போது ஆசிரியர் சிறுநீர் கழிக்க அனுமதிக்கவில்லை' எனக் கூறி அழுதிருக்கிறார்.
உடனே தர்மசுதனின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர். ஆனால், பள்ளியில் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று வட்டாரக் கல்வி அலுவலரிடமும் கூறியிருக்கின்றனர். அங்கும் சரியான பதில் சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்ற பெற்றோர், தர்மசுதனையும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது புகார் மனுவும் அளித்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆசிரியர்மீது 4-ம் வகுப்பு மாணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.