கட்டுரைகள்
Published:Updated:

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அதிர்ச்சியான பதில்களே வருகின்றன!

சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சு.வெங்கடேசன்

அந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின அறிஞர்கள் அதில் இடம் பெறவில்லை.

நீட் தற்கொலைகள், கூடங்குளம் அணுக்கழிவுப் பாதுகாப்பு, ரயில்வேயில் இந்தி தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவது எனப் பல்வேறு பிரச்னைகளைப் பாராளுமன்றத்தில் எழுப்பி அம்பலப்படுத்தும் தமிழ்க்குரல் சு.வெங்கடேசனுடையது. முழுமையான தரவுகளோடு உணர்ச்சிபூர்வமாக சு.வெ. பேசும் தமிழ்ப்பேச்சை மொழி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட ரசித்துப் பாராட்டுகிறார்கள். தன் தொகுதி, தன் கட்சி நிலைப்பாடெனப் பேசாமல் பண்பாடு, கல்வியென தேசத்தின் பொதுப்பிரச்னைகளை விவாதிக்கும் சு.வெங்கடேசனிடம் ஒரு மாலைப்பொழுதில் உரையாடினேன்.

“நாடாளுமன்றச் சூழல் எப்படியிருக்கிறது?”

‘`எல்லாவற்றுக்கும் போராட வேண்டியிருக்கிறது. முதலில் கேள்வி நேரமே இல்லை என்றார்கள். அதைப் போராடிப் பெற்றோம். பிறகு, ஒரு நாளில் 5 கேள்விகள் மட்டும் கேட்க வேண்டும் என்றார்கள். அப்படிப் பார்த்தால்கூட அனைத்து உறுப்பினர்களும் கேட்ட கேள்விகள் மொத்தம் 2,400. பதில் வந்ததோ, 210 கேள்விகளுக்குத்தான். பதில் வருகிறதோ, இல்லையோ மக்கள் பிரச்னைகள் பற்றி நான் தினமும் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தேன். 5 கேள்விகள் கேட்டால் ஒன்றுக்குப் பதில் அளித்தார்கள். ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட சூழலில், ‘நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’ என்று நாடாளுமன்ற வளாகத்தில் தனி நபராகப் போராட்டம் நடத்தினேன். நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்டேன். இதற்கு பதில் வரவில்லை என்றாலும் பல மாநில உறுப்பினர்களால் கவனிக்கப்பட்டது.’’

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

“ஐந்தில் ஒன்று என்றாலும் பாராளுமன்றத்தில் தரப்பட்ட பதில்களில் நிறைய அதிர்ச்சிகள் வெளிவந்தனவே?”

“உண்மைதான். தெற்கு ரயில்வே பணியில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது பற்றிக் கேள்வி எழுப்பினேன். இந்தி பேசக் கூடியவர்கள் 66% சதவிகித அளவில் தேர்வு பெற்றிருப்பதை அமைச்சரின் பதிலே அம்பலப்படுத்தியது. கூடங்குளம் அணுக்கழிவு பற்றிக் கேள்வி எழுப்பியபோது, அணுசக்தித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் தரப்பில் இருந்து அளித்த பதிலில், அணுக்கழிவுகளைக் கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டார்கள். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைச் சில ஆண்டுகள் அணு உலைக்குள் உள்ள தொட்டியில் பாதுகாப்பார்களாம். பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகில் உள்ள மையத்தில் வைப்பார்களாம். இதன்மூலம் நீண்டகாலத்திற்கு அணுக் கழிவுகளைக் கூடங்குளத்திலேயே வைத்தி ருப்பார்கள் என்பது தெரியவந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் பற்றிய கேள்விக்கு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ‘கொரோனா காலத்தில் மற்ற மாநிலங் களைவிடத் தமிழகத்தில் மிகக் குறைவாகவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், தமிழக அரசு இது பற்றி எந்தவொரு எதிர்வினையும் ஆற்றவில்லை. ‘கபசுரக் குடிநீர் மூலம் மூன்று கோடி தமிழக மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உண்டானது, மத்திய அரசு ஏன் கொரோனாவுக்கு எதிரான மருந்தாக அதை அறிவிக்கவில்லை?’ என்று கேட்டேன். ‘உலக அரங்கில் இதன் பயனை அறிவிக்கும் முயற்சியில் 9 வகையான ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக அமைச்சர் சொன்னார். உண்மையில் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.”

“மத்திய அரசு நியமித்துள்ள கலாசாரக் குழுவுக்கு எதிராக எம்பிக்களை ஒருங்கிணைத்தீர்கள். கலாசாரக் குழுவில் என்னதான் பிரச்னை?”

“அந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின அறிஞர்கள் அதில் இடம் பெறவில்லை. பெண்களுக்கும் இடம் இல்லை. குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இக்குழுவில் வாய்ப்பளிக்கவில்லை. இது முழுக்க வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சி. ஜான் மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி தொடங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு களையெல்லாம் நிராகரித்து, புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணின் பண்பாட்டை சாதியத்தின் பீடங்களில் அமர்ந்துகொண்டு ஒருபோதும் எழுத முடியாது. அதனால் இந்தக்குழுவைக் கலைக்கவேண்டும் என்றேன். தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்.பிக்களிடம் கையொப்பம் பெற்று குடியரசுத்தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.’’

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

“அரசியலில் தீவிரமாகச் செயல்படுகிறீர்கள். அதனால் இலக்கியப் பணியில் தொய்வு விழுந்திருக்கிறதா?”

“10 ஆண்டுகளுக்கு ஒரு நாவல் எழுதுகிறவன் நான். 10 மாதத்தில் இலக்கியப்பணி தொய்வு விழுந்து விட்டதா, வேகம் கூடிவிட்டதா என்பதை மதிப்பிட்டுவிட முடியாது.”

“மோடி அரசுமீது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலை பலவீனமாகத்தானே இருக்கிறது?”

“அதிகமான உறுப்பினர்களை வைத்திருப்பதால், தாங்கள் நினைத்ததை நடத்திவிட பா.ஜ.க அரசு நினைக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வேண்டுமானால் நாங்கள் பலவீனமாக இருக்கலாம். ஆனால், அரசியல் நிலைப்பாடுகளைப் பொறுத்தவரையில் மிக வலிமையாக வினை ஆற்றுவதாகவே நினைக்கிறேன். அவர்களின் உள் நோக்கத்தை அவர்கள் தரும் பதில்கள் மூலமே அம்பலப்படுத்துகிறோம்.”