
`தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் பிசினஸ் பண்ணிட்டிருந்த நாங்க, இன்னிக்கு இந்தியா முழுக்க ஆர்டர் எடுத்துப் பண்றோம். பிளாக் பிரின்ட் செய்த சேலை, சல்வாருக்கு இன்னிக்கு எக்கச்சக்க மவுசு இருக்கு.
விக்ரமன் படத்தின் தெலுங்கு டப்பிங் பார்ப்பது போல இருக்கிறது அருணா - விஜய குமாரின் வாழ்க்கை. திருவள்ளூரைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு பிளாக் பிரின்ட்டிங்தான் வாழ்வாதாரம். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பது இவர்களது வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். பத்தாவது மட்டுமே படித்திருக்கும் அருணா, இன்று ‘மைத்ரி’ என்ற பெயரில் பிளாக் பிரின்ட்டிங் யூனிட் நடத்தும் முதலாளியம்மா. அருணாவின் சமயோசித முடிவுதான் இன்று இவர்களை வெற்றிகரமான தொழில் முனை வோராக அடையாளப்படுத்தியிருக்கிறது.
‘`எனக்குப் பூர்வீகம் ஆந்திராவுல அனந்த பூர்னு ஒரு கிராமம். கல்யாணமாகி சென்னை வந்தப்ப என் கணவர் விஜயகுமார், டெக் ஸ்டைல் பிசினஸும் பிளாக் பிரின்ட்டிங்கும் பண்ணிட்டிருந்தார். வீட்டையும் குழந்தைங்க ளையும் பார்த்துக்கற நேரம் போக, ஓய்வு நேரத்துல என் கணவர் பிளாக் பிரின்ட்டிங் பண்றதை எட்ட இருந்து பார்த்துக்கிட்டிருப் பேன். அப்புறம் அவருக்கு சின்னச் சின்ன உதவிகள் பண்ண ஆரம்பிச்சு நானும் அந்தக் கலையைக் கத்துக்கிட்டேன். வாழ்க்கை நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனா, என் கணவர் வேலைக்கு வெச்சிருந்த ஆட்கள் அவருக்கு நேர்மையா இல்லைங்கிறதும், பல நாள்களா ஏமாத்திட்டிருக்கிறதும் தெரிய வந்தது. டெக்ஸ்டைல் பிசினஸை நிறுத்திட்டு பிளாக் பிரின்ட்டிங் மட்டும் பண்ணிட்டிருந் தோம். ஆனா, அந்த வருமானத்துல ரெண்டு குழந்தைங்களை வெச்சுக்கிட்டு வாழ்க்கை நடத்த முடியலை. ‘நாளைக்காவது விடிஞ் சிடாதா...’னு ஏங்கின காலம் போய், ‘நாளைக்கு விடியாமலே போயிடக்கூடாதா...’ங்கிற நிலைமையில கொண்டு வந்து நிறுத்திடுச்சு. ‘இந்த பிசினஸே வேணாம்... கூலி வேலை பார்த்தாவது குடும்பத்தைக் காப்பாத்தறேன்’னு என் கணவர் பிளாக் பிரின்ட்டிங் பிசினஸையும் நிப்பாட்ட முடிவெடுத்தார். மெட்டீரியல்களை எல்லாம் மூட்டைகட்டி வெச்சிட்டாரு. விடிஞ்சதும் எல்லாத்தையும் வித்துட்டு, வேற வேலையைப் பார்ப்போம்னு சொல்லிட்டாரு. அன்னிக்கு ராத்திரி முழுக்க நான் தூங்கலை.
விடிஞ்சதும் என் கணவர்கிட்ட ‘கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்... இனிமே வேலைக்கு ஆட்களை வைக்க வேணாம். நான் பிரின்ட்டிங்கை பார்த்துக்கறேன். நீங்க வெளியில போய் மார்க்கெட்டிங்கை கவனிங்க... அதுவும் சரியா வரலைனா நீங்க சொன்னபடி இந்த பிசினஸே வேணாம்னு முடிவெடுப்போம்’னு சொன்னேன். அதெல் லாம் வேணாம்னு அவர் சொல்லிடக் கூடாதேங்கிற பதைபதைப்பு மனசு முழுக்க...’’ திக்திக் தருணம் சொல்லி நிறுத்துகிற அருணாவை தொடர்கிறார் அவரின் கணவர் விஜயகுமார்.
‘`பிசினஸை க்ளோஸ் பண்ண வேணாம்னு அவங்க சொல்லிட மாட்டாங்களா... பேக் பண்ண பொருளை எல்லாம் எடுத்து மறுபடி பிசினஸை தொடர்ந்துட மாட்டோமான்னு எனக்கும் மனசுக்குள்ள பதைபதைப்பு... அதே மாதிரி அவங்க சொன்னதும் ஒரு நிமிஷம்கூட யோசிக்கலை. கல்யாணமான புதுசுல என் மனைவியை பட்டிக்காடு, பட்டிக்காடுன்னு கிண்டல் பண்ணியிருக்கேன். வீட்டு வேலை களையும் பார்த்துக்கிட்டு, குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு, நான் பிளாக் பிரின்ட்டிங் பண்றபோது எனக்கு உதவி செய்வாங்க. ரொம்ப இயல்பா அவங்க தொழிலையே கத்துக்கிட்டாங்கன்னு அப்புறம்தான் தெரிஞ் சது. என்னைவிட வேகமா அவங்க பிரின்ட்டிங் பண்றதைப் பார்த்திருக்கேன். பட்டிக்காடுனு கிண்டல் பண்ணதுக்கு பிராயச்சித்தமா அவங் களை நம்பி பிரின்ட்டிங் யூனிட்டை ஒப்படைச் சேன். நான் வெளியே போய் ஆர்டர் பிடிக் கிறது, மார்க்கெட்டிங் பண்றதுன்னு இறங்கி னேன். மெள்ள மெள்ள பிசினஸ்ல மறுபடி தலையெடுத்தோம். சின்னதா ஒரு கடையும் ஆரம்பிச்சு நாங்க பிளாக் பிரின்ட் பண்ணின சேலை, சல்வார் மெட்டீரியல்களை விற்கவும் ஆரம்பிச்சோம். தாய்மொழி தெலுங்குன்றதால கஸ்டமர்ஸ்கிட்ட தமிழ்ல பேசவே அருணா அவ்வளவு கஷ்டப்படுவாங்க. வெளியூர்லேருந் தெல்லாம் கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு கஸ்டமர், ‘இந்த பிளாக் பிரின்ட்டிங்கை சொல்லித் தருவீங்களா’ன்னு கேட்க, தயக்கமே இல்லாம அருணா ஓகே சொல்லிட்டாங்க. ‘இப்பதான் மறுபடி பிசினஸ் பிக்கப் ஆகத் தொடங்கியிருக்கு. மத்தவங் களுக்கு சொல்லிக் கொடுத்தீங்கன்னா உங்க பிசினஸ் என்னாகிறது’ன்னு சிலர் அட்வைஸ் பண்ணாங்க. ஆனாலும் அருணா அசர லையே...’’ மனைவியைப் பெருமிதமாகப் பார்க்கிறார் விஜயகுமார்.
‘`எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவங்க அப்படி நினைச்சிருந்தா நாங்க இன்னிக்கு தொழில் பண்ண முடிஞ்சிருக்குமா... கலைங் கிறது ஒரு கடல் மாதிரிங்க... கத்துக்கொடுத்தா நாம வளருவோமே தவிர, குறைஞ்சிட மாட்டோம். இன்னும் சொல்லப் போனா அப்படி நான் டிரெயினிங் கொடுத்ததாலதான் இன்னிக்கு இந்த அளவுக்கு தமிழ் பேசறேன்...’’ வார்த்தைகளில் முந்தும் தெலுங்கை தவிர்த்து, தமிழ் வார்த்தைகளைத் தேடித்தேடிப் பேசுகிறார் அருணா.
ஆரம்பத்தில் கெமிக்கல் வைத்து பிளாக் பிரின்ட்டிங் செய்துகொண்டிருந்த இவர்கள், அடுத்தகட்டமாக ஆர்கானிக் முறைக்கு மாறி யிருக்கிறார்கள். வெங்காயத் தோல், மாதுளை ஓடு, பீட்ரூட், மஞ்சிஷ்டா, செம்பருத்தி, இன்னும் சில மரப்பட்டைகள் என இயற்கை யான பொருள்களை வைத்து கலர் எடுத்து, பிரின்ட்டிங்குக்கு பயன்படுத்துகிறார்கள். கெமிக்கல் இல்லாத இந்த உடைகள் உடலை உறுத்தாது, ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்கிறார்கள்.
‘`தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் பிசினஸ் பண்ணிட்டிருந்த நாங்க, இன்னிக்கு இந்தியா முழுக்க ஆர்டர் எடுத்துப் பண்றோம். பிளாக் பிரின்ட் செய்த சேலை, சல்வாருக்கு இன்னிக்கு எக்கச்சக்க மவுசு இருக்கு. எந்த மாதிரியான மெட்டீரியல்லயும் பிளாக் பிரின்ட் பண்ண லாம். புதுசுல மட்டுமில்லீங்க... சென்டிமென்ட் டான சேலை, டிரஸ்ல கறை பட்டிருந்தாலோ, சாயம் போயிருந்தாலோ உடுத்த முடியாமப் போயிருக்கும். அதுல சாயம் ஏத்தினா, துணி யோட தன்மை பாதிக்கப்படும். அதுக்கு பதிலா பிளாக் பிரின்ட்டிங் பண்ணிட்டா, புதுசு போலவே தெரியும். இந்த பிசினஸை உங்களுக்கு கத்துக்கொடுக்கவும் நாங்க தயார். குறைஞ்சபட்சமா அஞ்சாயிரம் முதலீடு போட்டு நீங்களும் பிசினஸ் தொடங்கலாம். ஆர்வமிருக்கிறவங்களுக்கு வழிகாட்ட நாங்க ரெடி...’’ அழைப்பு விடுக்கிறார் அருணா.