
- அனுன்ஷியா.மா
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்திலுள்ள ‘மகிழ் ஆர்கோஃபிட்’ இயற்கை விவசாயம் பொருள்கள் நிறுவனத்தின் உரிமையாளர், கனிமொழி. பத்து வருடங்கள் பேராசிரியராகப் பணிபுரிந்தவர், தற்போது இயற்கை விவசாயியாகவும், சக பெண்களுக்கு விவசாயப் பயிற்சியளிக்கும் முன்னோடியாக வும் நம்பிக்கை அளிக்கும் பெண்.

‘`அடிப்படையில் நான் ஒரு நுண்ணுயிரியல் வல்லுநர். கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினேன். நுண்ணுயிரியல் மற்றும் நோய்த்தடுப்பியல் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற் காகப் பல புத்தகங்களை ஆராய்ந்தபோது, கடந்த 30 வருடங்களில் மக்களிடம் நோய் வாய்ப்படுதல் சதவிகிதம் மிகவும் அதிகரித்து வருவதை அறிந்தேன். மிக முக்கியமாகக் குழந்தைப்பேறின்மை, விரைவில் பருவம் அடைதல், புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றுக்கு, பிற காரணிகளைத் தாண்டி மாறிய நம் உணவுப் பழக்கங்களும் முக்கிய காரணம் என்பதை அறிந்தபோது அதிர்ந்தேன். இதி லிருந்து மக்கள் மீள நம் பாரம்பர்ய உணவுப் பழக்கங்களுக்கு மாறுவதே சிறந்த வழி. அதற்கு என்னாலான முயற்சியாக, வேளாண்மை செய்ய முடிவெடுத்தேன். கரிம (Organic) விவசாயத்தைவிடவும் சிறந்தது இயற்கை வழி (Natural) விவசாயம் என்பதால், அதைத் தேர்ந்தெடுத்து களத்துக்கு வந்தேன். கரிம விவசாயத்தில்கூட உரங்களின் பயன்பாடு இருக்கும். ஆனால், இயற்கை வழி விவசாயத்தில் மண்ணே போதும். இத்தகைய மண்ணில் விளையும் உணவுப் பொருள்கள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்’’ என்று சொல் லும் கனிமொழி, இயற்கை வழி விவசாயம் மீதான தன் ஆர்வம் காரணமாகப் பேராசிரியர் பணியை விட்டுவிட்டார். வகுப்பறை டு வயல்வெளி என தான் எடுத்த முடிவுக்காகச் சந்தித்த எதிர்ப்பு, சவால்களைப் பகிர்ந்தார்.
‘`இயற்கை வழி விவசாயம் செய்ய வேண்டும் என்ற யோசனை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பே எனக்குத் தோன்றியது. ஆனாலும் துணிந்து களத்துக்கு வரத் தயக்கம், குடும்பத் தினர் ஆதரவின்மை, உறவினர்கள் நெருக்கடி, பொருளாதார நிலைமை, நிலமின்மை எனப் பல சவால்கள். பெண் என்ற காரணத்தால் பலரும் எனக்குக் கடன் வழங்க மறுத்தனர். எனினும் நான் முயற்சிகளைக் கைவிடவில்லை. இறுதியாக, இரண்டு வருடங்களுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த ‘களஞ்சியம்’ சுய உதவிக் குழுவினர் எனக்குத் தேவையான நிலத்தை வாடகைக்குக் கொடுத்தனர். வங்கிக் கடனும் கிடைத்தது. வேலையைத் தொடங்கினேன்’’ என்பவர், தன் விளைபொருள்கள் பற்றிப் பகிர்ந்தார்.

‘`தற்போது மஞ்சள் மற்றும் காளான் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது, காளான். அது ஒரு நுண்ணுயிர் தயாரிப்பு. மஞ்சள் உற்பத்தியில் லாபம் எனது நோக்கம் இல்லை. இயற்கை வழியாகத் தயாரித்த மஞ்சள் பல நோய்களுக்குத் தீர்வாக அமையும். அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இவற்றுடன் ஆடு, மாடு, கோழிகள், மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா தயாரிப்பு என ஒரு கூட்டுப் பண்ணையாக எனது மையம் அமைந் திருக்கிறது. தற்போது இரண்டு நிறுவனங்களுக்கு நான் உற்பத்திசெய்யும் மஞ்சளை விநியோகம் செய்து கொண்டிருக்கிறேன். பலருக்கும் என் தயாரிப்பு சென்றடைந்துள்ளது’’ என்று சொல்பவருக்கு, இன்னும் சில இலக்குகளும் இதில் உள்ளன.
‘`என் தொழிலை மேம்படுத்தி ஒரு நுண்ணுயிர் மையத்தை அமைக்க வேண்டும். அது மாணவர்களின் திட்டப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதன் மூலம், இளம் தலைமுறையினர் இயற்கை வழி விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதை மேற்கொள்ளவும் ஊக்குவிக்க வேண்டும். ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக அந்த மையத்தை மாற்ற வேண்டும் என்பதே என் கனவு’’ என்றவர் நிறைவாகச் சொன்னார்...
‘`பெண்களை இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிப்பதையும் என் கடமையாக நினைக்கிறேன். தற்போது 200 பெண்களுக்கு அப்பயிற்சி அளித்துள்ளேன். 10 பெண்கள் காளான் சாகுபடி மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படி, பல பெண்களை இந்தக் களத்துக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய உற்பத்தியை நான் வாங்குவதன் மூலம் அவர்களை இத் தொழிலில் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்வோம்..!”