லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இது விளையாட்டாக உதித்த ஐடியா!

சிந்தனா மாணிக்கவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனா மாணிக்கவேல்

வெற்றிக் கதை

‘எவ்ரி திங் பிகின்ஸ் வித் அன் ஐடியா’ என்றொரு பிரபல வாசகமுண்டு. சென்னையைச் சேர்ந்த சிந்தனா மாணிக்கவேலை கவனம்ஈர்க்கும் தொழிலதிபராக முன்னிலைப்படுத்தியிருப்பதும் அப்படியான ஓர் ஐடியாதான். ‘சுகர் மங்க்கீஸ்’ என்ற பெயரில் பேக்கிங் யூனிட் நடத்திவரும் சிந்தனா - சூப்பர் எனர்ஜெட்டிக்.

புத்தாண்டோ, தீபாவளியோ... பிரபலங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக் கும் பகிர விரும்பும் அன்பளிப்புகளில் முதலிடம் ஜார் கேக்குகளுக்குத்தான். இன்று சென்னையில் பிரபலமாகி வரும் ஜார் கேக்குகளை ஆறு வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் சிந்தனா. பேக்கிங் துறையில் எந்தப் பின்புலமும் இல்லாமல் இன்று அந்தத் துறையில் கொடிகட்டிப் பறப்பவர் சிந்தனா என்பது ஹைலைட்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் தன் வீட்டின் ஒரு பகுதியில்தான் பிசினஸ் வளர்க்கிறார் சிந்தனா. பெரிய இயந்திரங்களோ, பேக்கரி செட்டப்போ இல்லை. தெருவைத் தாண்டி மணக்கும் வெண்ணெயின் வாசம்தான் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுக்கிறது. சிந்தனாவின் பேச்சிலும்கூட அதே எளிமை.

 சிந்தனா குழுவினர்...
சிந்தனா குழுவினர்...

‘`நான் ஒரு புரொஃபஷனல் டென்னிஸ் பிளேயர். 18 வயசு வரைக்கும் இந்தியாவை ரெப்ரசன்ட் பண்ணி டென்னிஸ் விளையாடி யிருக்கேன். திடீர்னு ஸ்போர்ட்ஸ்லேருந்து ஒரு பிரேக் எடுக்க வேண்டிவந்தது. ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல பப்ளிக் ரிலேஷன்ல மாஸ்டர்ஸ் முடிச்சேன். ஒரு விஷயத்தை எப்படி புரொமோட் பண்ணலாம், உங்களை எப்படி மார்க்கெட் பண்ணிக்கலாம்னு அந்தக் கோர்ஸ் முழுக்கவே மார்க்கெட்டிங் பத்தினது. படிப்பை முடிச்சதும் மாலை வேளைகளில் டென்னிஸ் கோச்சிங் கொடுத்திட்டிருந்தேன். காலையில எனக்கு நிறைய ஃப்ரீ டைம் கிடைச்சது. எங்க பாட்டி குக்கர்லயே விதம் விதமான கேக் பண்ணுவாங்க. அத்தைங்க பேக் பண்ணுவாங்க. இவங்க யாருமே புரொஃபஷனல் பேக்கர்ஸ் இல்லை. இவங்களைப் பார்த்து எனக்கும் பேக்கிங்ல ஆர்வம் வந்தது. நான் கொஞ்சம் அடுத்த லெவலுக்குப் போய் இன்டர்நெட்ல வரும் ரெசிப்பிகளை டிரை பண்ண ஆரம்பிச்சேன். அம்மா சமையல் வேலைகளை முடிச்சதும் கிச்சன் என் கன்ட்ரோலுக்கு வந்துடும். தினம் ஏதாவது ஓர் அயிட்டம் டிரை பண்ணுவேன். அதை சாயந்திரம் கோச்சிங் கிளாஸ் போகும்போது எடுத்துட்டுப் போவேன். ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சாப்பிட்டுப் பார்த்துட்டுப் பாராட்டு வாங்க. ‘கன்னாபின்னானு பொருள்களை வாங்கி வேஸ்ட் பண்றே... என் பர்ஸ்தான் காலியாகுது’ன்னு அப்பா மட்டும் திட்டிக்கிட்டே இருப்பார்!

அது ஒரு தீபாவளி சீசன். தீபாவளிக்குச் சில நாள்கள் முன்னாடி ஃபிரெண்ட்ஸ் மற்றும் ஃபேமிலியோடு ஏற்காடுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணியிருந்தோம். அன்னிக்கு நான் என் ஃபிரெண்ட்ஸ்கூட சேர்ந்து நிறைய கப் கேக்ஸ் பேக் பண்ணியிருந்தேன். திடீர்னு வீட்லேருந்து போன் பண்ணி உடனே ஏற்காடு கிளம்பறோம்னு கூப்பிட்டாங்க. பேக் பண்ணியிருந்த அத்தனை கேக்கையும் என்ன பண்றதுன்னு தெரியலை. ஃபிரெண்ட் வீட்டுல காலியான ஊறுகாய் பாட்டில்களும், ஆலிவ் பாட்டில்களும் இருந்தன. ஏதோ ஒரு பொறிதட்ட, அந்த பாட்டில்களைச் சுத்தம் பண்ணி, எல்லா கேக்குகளையும் வெட்டி பாட்டில்களுக்குள்ளே அடைச்சு, தயாரா இருந்த ஐசிங்கையும் அது மேல ஊற்றி எடுத்துட்டுப் போயிட்டோம். அவசரத்துலயும் டென்ஷன்லயும் அதை எடுத்துட்டுப் போனதையே மறந்துட்டோம். அடுத்த நாள் திடீர்னு ஞாபகம் வந்து எடுத்துப்பார்த்தா, அந்த ஊர் வெதருக்கு அப்படியே இருந்தது. சாப்பிட்ட எல்லாரும், `இது வித்தியாசமா இருக்கே... சூப்பர் ஐடியாவா இருக்கே'ன்னு பாராட்டினாங்க. இது நடந்து ஆறு வருஷங்களுக்கு முன்னாடி. அப்போவே வெளிநாடுகள்ல ஜார் கேக்ஸ் பிரபலம். இன்டர்நெட்ல அப்படிப் பார்த்த இன்ஸ்பிரேஷன்லதான் எனக்கும் அந்த பாட்டில் ஐடியா உதிச்சது. ஆனா, இன்னிக்கு சென்னையில ஜார் கேக் செம டிரெண்டாயிடுச்சு...’’ - விளையாட்டாக உதித்த, ஐடியா பிசினஸுக்கான வடிவமாகவே மாறியிருப்பதில் சிந்தனா செம ஹேப்பி.

‘`ஊர்லேருந்து வந்ததும் மறுபடி அதே மாதிரி ஜார் கேக் பண்ணி நிறைய பேருக்குக் கொடுத்தேன். ‘என்ன இது ஊறுகாய் பாட்டில்ல கேக்கா... இதையெல்லாம் யாராவது வாங்குவாங்களா’ன்னு கிண்டல் பண்ணினவங்கதான் அதிகம். நான் கவலையே படலை. இந்த கான்செப்ட் எப்படியும் சக்ஸஸ் ஆகும்னு நம்பினேன். அதே வருஷம் தீபாவளிக்கு 30 ஜார் கேக்குகளுக்கான ஆர்டர் வந்தது. அதுவரைக்கும் நான் யார்கிட்டயும் கேக்குகளுக்குப் பணம் வாங்கினதில்லை. முதன்முறையா அதை ஒரு பிசினஸா பார்க்க வெச்ச ஆர்டர் இது. வெறுமனே பாட்டில்ல கேக்கை அடைச்சுக் கொடுக்காம, அதை எவ்வளவு வித்தியாசமா கொடுக்க முடியும்னு மெனக்கெட்டேன். கோல்டன் ஃபேப்ரிக், பிரின்ட்டடு ஃபேப்ரிக்னு தீமுக்கேத்தபடி நிறைய டெகரேட் பண்ணுவேன். அப்போகூட இதுதான் எனக்குப் பெரிய திருப்புமுனையா அமையப்போகுதுன்னு எதிர்பார்க்கலை. சும்மா எல்லா பாட்டிலுக்கு அடியிலும் என் போன் நம்பரை ஒட்டி அனுப்பினேன். ஆனா, அது எப்படியோ எனக்கான விளம்பரமாகிடுச்சு. ஏகப்பட்ட பேர் போன் பண்ணி ஆளுக்கு பத்து, இருபதுன்னு ஆர்டர் பண்ணினாங்க. அப்படியே அன்னிக்கு 100 ஜார்களுக்கான ஆர்டர் வந்தது. இதை ஒரு பிசினஸா பண்ணலாம் என்ற நம்பிக்கையும் அன்னிக்குதான் வந்தது’ என்கிறவர், ‘சுகர் மங்க்கீஸ்’ என்ற பெயர் உதித்த பின்னணியையும் அதே சுவாரஸ்யத்துடன் பகிர்கிறார்.

‘`சுகர் இல்லாம பேக் பண்ண முடியாது. அதனால `சுகர்'. தினமும் காலையில அம்மா கிச்சன்லேருந்து வெளியில வந்ததும் நான் உள்ளே போய் அதகளம் பண்ணிட்டு வருவேன். ‘ஒரு குரங்கு உள்ளே வந்துட்டுப் போன மாதிரியே இருக்கு’ன்னு அம்மா சொல்வாங்க. அதனால `மங்க்கீ'. ரெண்டையும் சேர்த்து என் தயாரிப்புகளுக்கு ‘சுகர் மங்க்கீஸ்'னு பெயர் வெச்சிட்டேன். எனக்கு குரங்கு ரொம்பப் பிடிக்கும். இன்னொரு பொருத்தமும் இருக்கு. நிறைய இனிப்பு சாப்பிடறவங்க குரங்கு மாதிரி ஹைப்பரா பிஹேவ் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்தப் பெயர் வெச்சபோதும் ஏகப்பட்ட கிண்டல்களும் விமர்சனங்களும் வந்தன. குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும், இதுவும் ஹிட்டாகும்னு நம்பினேன். ஆயிருச்சு’ - வெற்றியைத் தொட்டவர், இதுவரை எல்லாவற்றையும் சுயம்புவாகவே கற்றுத் தேர்ந்து வருகிறார்.

சிந்தனா மாணிக்கவேல்
சிந்தனா மாணிக்கவேல்

‘`இந்த வருஷ தீபாவளிக்கு என் ஸ்பெஷல் அறிமுகம் ரோஸ்மில்க் ஜார். ரோஜா இதழ்களை வெச்சு, ரோஸ் மில்க் ஃபிளேவரில் பார்க்கவும் ருசிக்கவும் செமையா இருக்கும் இது’’ - பார்க்கவும் ருசிக்கவும் ஆசையைத் தூண்டுகிறார். விஜய், விக்ரம், இயக்குநர் பாலா, இயக்குநர் மிஷ்கின், நடிகைகள் ப்ரியா ஆனந்த் என சிந்தனாவின் செலிபிரிட்டி கஸ்டமர் லிஸ்ட் வேற லெவல்.

‘`சர்க்கார் 100-வது நாள் செலிபிரேஷனுக்காக விஜய்க்கு நட்ஸ் ஃப்ளாரில் ஒரு கேக் பண்ணிக்கொடுத்திருந்தேன். மைதாவே இல்லாம, முழுக்க முழுக்க பாதாம், பிஸ்தா, ஹேஸல்நட்ஸின் பவுடர்களை மட்டும் வெச்சு மூணு லேயர்களில் ஸ்பெஷலா பண்ணியிருந்தேன். ஆக்சுவலி அந்த கேக் சர்க்கார் பார்ட்டிக்காகப் பண்ணினது. விஜய் சாப்பிட்டுப் பார்த்து ரொம்பப் பிடிச்சுப் போனதால மீதி கேக்கை வீட்டுக்கு அனுப்பிட்டார். ‘பார்ட்டிக்கு வேற கேக் வெச்சுக்கோங்க’ன்னு சொல்லிட்டாராம்!

விக்ரம் சாருக்கும் சரி, அவங்க பசங்களுக்கும் சரி ஆல்டைம் ஃபேவரைட் ரெட் வெல்வெட் கேக் அல்லது நட்டெல்லா கேக். மிஷ்கின் சார் பொண்ணு பர்த்டேவுக்கு நான்தான் எப்போதும் கேக் சப்ளை பண்ணுவேன். அவங்க சாய்ஸ் ரெயின்போ கேக். பாலா சார் ஃபேமிலிக்கும் ரெட் வெல்வெட்தான் ஃபேவரைட்’’ - செலிப்ரிட்டி சாய்ஸ் சொல்கிறவருக்கு ஆரோக்கியத்தின் மேல் அக்கறைகொண்ட பலதுறைப் பிரபலங்களும் வாடிக்கையாளர்கள். காரணம் சிந்தனாவின் ஹெல்த்தி பேக்ஸ்!

‘`நான், என் அம்மா, கஸாண்ட்ரான்னு ஒருத்தங்க, தீபான்னு ஓர் அக்கா... இதுதான் எங்க டீம். எங்களுடைய குறுகியகால வளர்ச்சியைப் பார்த்துட்டு நிறைய பேர் அவங்களோடு பார்ட்னர்ஷிப்ல வொர்க் பண்ணக் கூப்பிடறாங்க. இதுல பெரிய நிறுவனங்களும் அடக்கம். ஆனா கமர்ஷியலா போயிட்டா, ஹோம் பேக்கிங்கின் அழகு போயிடும் என்பது என் கருத்து. கமர்ஷியலா பண்ணும்போது கஸ்டமர்ஸ் ஆர்டர் பண்ணின உடனே சப்ளை பண்ற அளவுக்கு ஸ்டாக் தயாரா இருக்கணும். ஹோம் பேக்கிங்கில் ஆர்டர் வந்தபிறகுதான் செய்யவே ஆரம்பிப்போம். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு, திருப்தியா இருக்கு’’ - சிறப்பாகச் சொல்கிறார் சிந்தனா!