லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாழ்க்கையில ஒவ்வொரு நிமிடமும் புதுசு! - மேகா ராஜன்

மேகா ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
மேகா ராஜன்

தெரிந்த முகம்... தெரியாத செய்தி

மேசான், ஹமாம், ப்ரூ இன்ஸ்டன்ட். என ஏகப்பட்ட விளம்பரங்களில் நமக்கெல்லாம் பரிச்சயமானவர் மேகா ராஜன். கம்பீரமான ஆளுமையும் கணீர் குரலும் மேகாவின் யுஎஸ்பி. விளம்பரங்களில் அசத்தல் அம்மாவாகக் கலக்கும் மேகா, நிஜத்திலும் சூப்பர் மாம்.

‘’படிச்சது ஹோட்டல் மேனேஜ்மென்ட். ஆனா, மும்பையில ஜெட் ஏர்வேஸின் கேபின் க்ரூவில் இருந்தேன். அப்போதான் என் முதல் போர்ட்ஃபோலியோ பண்ணினேன். 2000-ல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியின் ஃபைனலிஸ்ட். அப்புறம் சென்னைக்கு வந்தேன். ராம்ப் ஷோஸ், டிராவல் ஷோஸ், டாகுமென்ட்டரி, புரொடக்ட் லான்ச்னு செம பிசியா ஓடிக்கிட்டிருந்தேன். கே.பாலசந்தர், நாகா, சமுத்திரக்கனின்னு முக்கியமான இயக்குநர்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். எனக்கு நடிப்பு ரொம்பப் பிடிக்கும். வாய்ஸ் ஆக்டிங் அதைவிடவும் பிடிக்கும். என் குரலில் இன்னொருத்தர் நடிக்கிறதை ரொம்ப ரசிப்பேன்...’’ - கடகடவென அறிமுகம் தரும் மேகாவின் குரலும் நடிப்பில் பிசி. மேடை நாடகங்களிலும் மேடம் பிசி. கடந்த வருடம் இவரது நடிப்பில் கீதா கைலாசம் இயக்கிய தமிழ் நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது.

``யாரையும் தோற்கடிக்கணும் என்கிற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. இருக்கிறதை வெச்சு திருப்தியா வாழ என்னால முடியும். தயிர் சாதம் சாப்பிடறது, சூரிய உதயம் பார்க்கிறதுன்னு அந்த திருப்தி எப்படி வேணாலும் எனக்கு வரலாம்!’’ - எளிய விஷயங்களின் ரசிகையாக இருக்கிறார். டி.வி சீரியல், சினிமா, வெப் சீரிஸ்... மூன்றிலும் நடிக்கக் கேட்டு இவர் வீட்டு காலிங் பெல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

``டி.வி சீரியல்ஸ்ல நடிக்க எக்கச்சக்கமான வாய்ப்புகள் வருது. ஆனா, பெரும்பாலான சீரியல்களின் கதைகளில் எனக்கு உடன்பாடில்லை. வெறுப்பும் நெகட்டிவிட்டியும் வியாபிச்சுக் கிடக்கிற இன்றைய உலகத்துல மீடியா ரொம்ப பவர்ஃபுல். அந்த பவரைவெச்சு ஏன் பாசிட்டிவிட்டியையும் நல்ல உணர்வுகளையும் பரப்பக்கூடாதுங்கிறதுதான் என் கேள்வி. வெப் சீரீஸ்ல நல்ல கதையும் கேரக்டரும் அமைஞ்சா ஓகே. கடைசியா நான் பண்ணின படம் ‘ஜெயம்கொண்டான்’. அந்தப் படம் பண்ணி பத்து வருஷங்களாச்சு. என் பையனுடன் இருக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம்’’ - மூன்றுக்கும் மூன்று காரணங்கள் சொல்பவர், பயணங்களின் தீவிர காதலி!

``டிராவலிங் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். எனக்குன்னு ஒரு டிராவலிங் குரூப் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. பூடான், ஹிமாலயாஸுக்கு சைக்கிளிங் போயிட்டு வந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானும் என் பையனும் ஸ்காண்டினேவியா, நியூசிலாந்து போயிட்டு வந்தோம். வாழ்க்கையில ஒவ்வோர் அனுபவமும் புதுசு. ஒவ்வொரு நிமிடமும் புதுசு. பயணங்களைவிடப் பெரிய ஆசான் வேற இருக்க முடியாது. நம் வட்டம் எவ்வளவு சின்னதுங்கிறதை அதைவிட்டு வெளியே வரும்போதுதான் புரிஞ்சுக்கறோம். சகிப்புத்தன்மையைக் கத்துக்கறோம். மற்றவர்களைப் புரிஞ்சுக்கறோம். வித்தியாசமா யோசிக்கிறவங்களை மதிக்கக் கத்துக்கறோம். குழந்தைங்களோடு டிராவல் பண்றதுங்கிறது அலாதியான அனுபவம். அதை ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயம் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும். எந்தப் பாடப் புத்தகத்தாலும் சொல்லித்தர முடியாத எத்தனையோ விஷயங்களைப் பயணங்களின் மூலம் குழந்தைங்களுக்கு ஈஸியா சொல்லிக் கொடுத்துட முடியும்...’’ - டிராவல் டைரி வாசிப்பவருக்கு விளம்பரங்களில் ஏற்கும் அம்மா கேரக்டரில் அவ்வளவு நிறைவு.

``தாய்மை ரொம்ப ஸ்பெஷலான உணர்வு. அது ஓர் அழகான பயணம். எல்லா நேரமும் பர்ஃபெக்ட்டான அம்மாவா இருக்க முடியுமான்னு தெரியலை. ஆனாலும், ரொம்பவே ரசனையான பயணம். ஹமாம் சோப், ப்ரூ இன்ஸ்டன்ட்... ரெண்டும் எனக்குப் பாராட்டுகளை வாங்கிக் குவிச்ச விளம்பரங்கள். குறிப்பா ஹமாம் சோப்புக்கு நல்ல வரவேற்பு. ‘அம்மான்னா இப்படித்தான் இருக்கணும்’னு என்கிட்ட தனிப்பட்ட முறையில் கருத்துகளைப் பகிர்ந்துக்கிட்ட அம்மாக்கள் பலர். இந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு எங்க பெண் குழந்தையைத் தற்காப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பறோம்னு சொல்லியிருக்காங்க. நானும் கிட்டத்தட்ட அப்படியோர் அம்மாதான்!’’ - பெருமையாகச் சொல்பவருக்கு `கதைசொல்லி' எனும் இன்னொரு முகமும் இருக்கிறது.

மேகா ராஜன்
மேகா ராஜன்

``குழந்தைங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது ரொம்பப் பிடிக்கும். பிரிட்டிஷ் கவுன்சிலில் இதுக்காக ஒரு ஸ்பெஷல் கோர்ஸ் முடிச்சிருக்கேன். கேம்பிரிட்ஜ்ல டீச்சர்ஸை டிரெயின் பண்றேன்...’’ - அஷ்டாவதானியின் அடுத்த இலக்கு டைரக்‌ஷன். தனக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்த விளம்பரங்களில்தான் டைரக்டராக அறிமுகமாக ஆசையாம்.

அத்தனைக்கும் ஆசைப்படுங்கள் மேகா!