லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் ஜெயிக்கலாம்! - சித்ரா குமார்

சித்ரா குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்ரா குமார்

தெரிந்த முகம்... தெரியாத செய்தி

விளம்பரங்களில் பாட்டி கேரக்டரா? போட்டியின்றித் தேர்வாகிறவர் சித்ரா குமார். இந்தப் பாட்டிக்கு அவ்வளவு டிமாண்டு. 64 வயதிலும் அவ்வளவு எனர்ஜி, அநியாயத்துக்கு ஆக்டிவ் என அசத்துகிறார் சித்ரா.

‘`என் மகள் ஸ்வாதிதான் எங்க வீட்டின் முதல் நடிகை. அர்விந்த்சுவாமி, ரேவதி நடிச்ச ‘பாசமலர்கள்’ படத்துல நடிச்சிருக்கா. அதைத் தொடர்ந்து அவ நிறைய சீரியல்ஸ், டி.வி விளம்பரங்களில் நடிச்சா. இந்தத் துறையில் அவதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

என் ரெண்டு மகள்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, கடமைகளை எல்லாம் முடிச்ச நிலையில் இந்தத் துறைக்கு வந்தேன். என் மகள் `ஜன்னல்’ சீரியல்ல நடிச்சிட்டிருந்தபோது, கே.பாலசந்தர் சார் என்னையும் நடிக்கச் சொல்லிக் கேட்டார். ‘எனக்கு நடிப்பெல்லாம் வராது, வேண்டாம்’னு சொல்லிட்டேன். பொண்ணுகூட துணைக்குப்போகும்போதெல்லாம் ‘நீங்க ஏன் நடிக்கக் கூடாது’ங்கிற கேள்வி தொடர்ந்திட்டே இருந்தது. அவங்க கல்யாணமாகிப் போன பிறகு நிறைய நேரம் இருந்தது. ஏன் முயற்சிச்செய்யக் கூடாதுங்கிற ஞானோதயம் அப்போ வந்ததுதான்’’ - மகளைத் தொடர்ந்து மீடியாவில் வலதுகால் வைத்தபோது சித்ராவுக்கு வயது 55.

‘’முதல் வாய்ப்பு மாடலிங் கோ-ஆர்டினேட்டர் தாரா உமேஷ் மூலமா வந்தது. போத்தீஸ் விளம்பரம்தான் கேமரா முன்னாடி எனக்கு முதல் அனுபவம். அப்புறம் பிஜு, ருக்குன்னு அத்தனை முன்னணி கோ- ஆர்டினேட்டர்களும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பிச்சாங்க. போத்தீஸ் ஆடி சேல், ஜிஆர்டி, ஆச்சி மசாலான்னு எல்லாமே எனக்குப் பெரிய பிரேக் கொடுத்த விளம்பரங்கள்’’ - 50 ப்ளஸ்ஸில் வெற்றியை வசப்படுத்தியிருக்கும் சித்ரா, ‘எந்திரன்’, ‘ஓகே கண்மணி’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘வேதாளம்’ எனச் சில படங்களிலும் ‘ஆபீஸ்’, ‘கல்யாணம் முதல் காதல்வரை’ எனச் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

‘`64 வயசிலும் தினம் மேக்கப். ஆடிஷன், ஷூட்டிங்னு செம எனர்ஜியோடு ஓடிட்டிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அத்தனை பேரோடும் ஃபிரெண்ட்லியா இருப்பேன். அசின், காஜல் அகர்வால். ரம்யா கிருஷ்ணன். பிரபுதேவான்னு நிறைய செலிபிரிட்டீஸ்கூட வொர்க் பண்ணியிருக்கேன்.

சித்ரா குமார்
சித்ரா குமார்

`உங்க வயசென்ன... இவ்வளவு எனர்ஜியோடு இருக்கீங்களே’ன்னு கேட்பாங்க. சில ஷூட்டிங் காலையிலேருந்து நைட் வரை போகும். நடிப்பே வராதுன்னு நினைச்சுத் தயங்கின காலமும் உண்டு. இன்னிக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு என்னை பிசியா வெச்சிருக்கிறதும் அதே நடிப்புதான். மனசுக்குப்பிடிச்ச விஷயத்தைச் செய்யறபோது அது களைப்பாவோ, அலுப்பாவோ தெரியறதில்லை’’ - எனர்ஜி ரகசியம் சொல்கிறார்.

‘`வீட்டுல நானும் என் கணவரும்தான். பெரிய மகள் ஆர்த்திரவி, சூரியன் எஃப்.எம்மில் ஆர்ஜேவா இருக்கா. சின்னவள் அமெரிக்காவில் இருக்கா. கணவர் ஏர் இந்தியாவில் வேலைபார்த்து ரிட்டையர் ஆனவர். அவர்தான் எனக்குப் பெரிய சப்போர்ட். ஷூட்டிங் இருக்கும் நாள்களில் தன் தேவைகளை அவரே சமாளிச்சுப்பார். முதுமைங்கிறது ஓய்வெடுக்கிறதுக்கான அங்கீகாரம் இல்லை. என்னை மாதிரி நிறைய பேருக்கு அதுதான் வாழ்க்கையின் ஆரம்பமே. மனசுல தெம்பிருந்தா உடம்பு தானா செயல்படும். ஒரு விஷயத்துல உங்களுக்கு ஆர்வம் இருந்தா. அதை எந்த வயசிலும் நிறைவேத்திக்கலாம். கொஞ்சம் ஆரோக்கியம்... கொஞ்சம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு... பாசிட்டிவ் மனப்பான்மை... இந்த மூணும் போதும் ஜெயிக்க...’’ - சீனியர் சிட்டிசன்களுக்கு சேதி சொல்லும் சித்ராவுக்கு இன்னுமோர் ஆசை மிச்சமிருக்கிறது.

‘`விளம்பரங்களில் பெயர் சம்பாதிச்சிட்டேன். அதுக்கு இணையான பெயரை படங்களிலும் வெப் சீரிஸிலும் சம்பாதிக்கணும். 2020-ல் அதுதான் என் கோல்!’’

பின்னுங்க பாட்டி!