
தெரிந்த முகம்... தெரியாத செய்தி
அழகான அம்மாக்கள் சும்மா இருக்கலாமா? அதனால்தான் தேவி மகேஷும் பிசியாகி இருக்கிறார். தேவி மகேஷைத் தெரியாதவர்களுக்கு அவர் நடித்துள்ள ‘லெவிஸ்டா இன்ஸ்டன்ட் காபி’ விளம்பரம் ஒன்றுபோதும் அறிமுகத்துக்கு.
‘’என் பொண்ணு யுவினா பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க. ‘வீரம்’ படத்துலயும் நிறைய விளம்பரங்களிலும் நடிச்சிருக்கா. ஆரம்ப காலத்துல அவகூட ஷூட்டிங்குக்குத் துணைக்குப் போயிட்டிருந்தேன். அப்படிப்போற இடங்களில் டைரக்டர்ஸ் ‘நீங்களும் நடிக்கலாமே’ன்னு கேட்பாங்க. அப்போ அந்த ஐடியாவே இல்லை. பொண்ணுக்கு அடுத்து, ஒரு பையன் பிறந்தான். அவன் பிறந்து ரெண்டு வருஷங்கள் கழிச்சுதான் சரி நடிக்கலாமேன்னு தோணுச்சு. டி.வி.எஸ் எக்ஸெல்தான் நான் பண்ணின முதல் விளம்பரம். அது செம ஹிட்டானதும் என் மேலயே எனக்கு நம்பிக்கை அதிகமாச்சு. இன்னிக்கு என் பொண்ணு மாதிரியே நானும் செம பிசி!’’ - க்யூட்டாகச் சிரிப்பவர், இதுவரை நூற்றுக்கும் மேலான விளம்பரங்களில் முகம்காட்டியிருக்கிறார். போத்தீஸ், ஹெல்டா ஆயில் போன்றவை சில உதாரணங்கள்.
``அம்மா கேரக்டர் பண்றது சாதாரண விஷயமில்லை. அழகான மாடல்கள் எல்லாராலும் அழகான அம்மாவா நடிச்சிட முடியாது. இன்னும் சொல்லப்போனா ஒல்லியான ராம்ப் மாடல்கள், ஹவுஸ் ஒயிஃப் கேரக்டருக்கு செட் ஆக மாட்டாங்க. அந்த இடத்துலதான் நான் பொருந்திப் போறேன். ‘உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு... அதுவும் சூப்பர் அம்மா கேரக்டரா பண்றீங்களே’ன்னு நிறைய பேர் கேட்பாங்க. நான் நிஜத்துல எப்படியோ அப்படித்தான் ஸ்கிரீன்லயும் இருக்கேன். வேற எந்த சீக்ரெட்டும் இல்லை!’’ - ரகசியம் சொல்கிறவர், இந்தத் துறையின் மிகப் பெரிய சவாலாகச் சொல்வது, தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வதை.
``அழகையும் இளமையையும் அப்படியே மெயின்டெயின் பண்ணணும், ஹெல்த்தியா இருக்கணும். எனர்ஜெட்டிக்கா இருக்கணும். அதுக்காக நான் பண்ற ஒரே விஷயம் ஸும்பாவும் தூக்கமும். அழகைத் தக்கவெச்சுக்கிறது எனக்கு ரொம்ப சிம்பிள். நல்ல தூக்கம் போதும். பார்லரோ, பெரிய ட்ரீட்மென்ட்டோ தேவையே இல்லை'' - சிம்பிள் தீர்வுகள் சொல்பவரின் முன்னுரிமை குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும்.
``கணவர், குழந்தைங்க, அவங்க படிப்பு, மகளின் ஷூட்டிங், டிராவல்னு எல்லாருக்குமான நேரம்போகத்தான் எனக்கான நேரத்தைப் பத்தி யோசிப்பேன். எப்போதாவது எனக்கும் என் மகளுக்கும் ஒரே நேரத்துல ஷூட்டிங் வரும். அப்ப எங்கம்மா பொறுப்புல மகளை விட்டுட்டு நான் என் வேலையைப் பார்ப்பேன். இந்தத் துறையில நிம்மதியா இருக்கணும்னா ஒரு விஷயத்தைக் கண்டிப்பா ஃபாலே பண்ணணும். இங்கே புகழுக்கும் பணத்துக்கும் குறைவிருக்காது. ஆனா, அந்தப் புகழ் போதைக்கு அடிமையாகிடக் கூடாது. தினமும் வேலை இருக்கணும்... தினமும் மேக்கப் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி நிக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்திக்கிற பக்குவம் அவசியம்.

படங்களில் நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வருது. அம்மா கேரக்டர்ஸுக்குக் கேட்கறாங்க. ஆனா, என் வயசு ஹீரோயின்ஸுக்கே அம்மாவா நடிக்கக் கேட்கறதுதான் கொஞ்சம் இடிக்குது. குட்டிப் பசங்களுக்கு அம்மான்னா ஐ'ம் ஓகே. சீரியல் வாய்ப்புகள் தினம் தினம் வருது. ஆனா, சீரியல்னு வந்தா வாழ்க்கையின் பெரும் பகுதியை கேமரா முன்னாடியே செலவழிக்க வேண்டியிருக்கும். அது எனக்கு சரியா வராது. இப்போ குட்டிப் பசங்களுக்கு அம்மாவா கூப்பிடறாங்கன்னா, இன்னும் சில வருஷங்கள் கழிச்சு பெரிய பசங்களுக்கு அம்மாவா கேட்பாங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டாதான் இங்கே தாக்குப்பிடிக்க முடியும்'' - யதார்த்தம் உணர்ந்தவருக்கு மாடலிங் துறையின் மீது பெரிய மரியாதை இருக்கிறது.
``நான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சபோது ‘இது பெண்களுக்குப் பாதுகாப்பான துறையில்லை... உனக்கெதுக்கு இதெல்லாம்’னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. எனக்கே அந்த பயம் இருந்தது. ஆனா, என் மகள்கூட நான் போன இடங்களில் அப்படி எந்தப் பிரச்னையையும் உணர்ந்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை. அந்த நம்பிக்கையிலதான் துணிஞ்சு முடிவெடுத்தேன். நாம யாருங்கிறதை நம்ம கேரக்டர்தான் முடிவு பண்ணுது. ‘இதுதான் நான்’னு முதல் சந்திப்பிலேயே புரியவெச்சிட்டோம்னா யாரும் தப்பா ஒரு பார்வையைக்கூட நம்ம பக்கம் திருப்ப மாட்டாங்க’’ - அனுபவ அட்வைஸ் தருபவரின் மகளைத் தொடர்ந்து மகன் பிரணவ்வும் மாடலிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த வருடம் மூன்று பேரும் அவ்வளவு பிசி. ``எதிர்காலத்தைப் பத்தின பயம் எனக்கில்லை. ஷேர் மார்க்கெட், டிரேடிங் துறையில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதுதான் காரணம்’’ - பக்கா பிளானுடன் காத்திருக்கிறார் அழகான அம்மா!