மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்வதற்காக நாள்தோறும் பெரியார் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட, படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் அப்படி பயணம் செய்பவர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டி, அவனியாபுரம்,தெப்பக்குளம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் அரசு பேருந்துகளில், மாணவர்கள் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துகொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில், பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களை அணுகி அவர்களிடம், ``படியில் பயணம் பண்ணாதீங்க அண்ணா!" என தன் மழலை மொழியில் கனிவாக கோரிக்கை வைத்து விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகிறார் இரண்டாம் வகுப்பு மாணவர் சுதர்சன்.
3 வயது முதல் தன் தந்தையுடன் பல்வேறு விழிப்பு உணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் சுதர்சன், பனை விதைகளை விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, மதுரையில் பள்ளி மாணவர் ஒருவர் படிக்கட்டு பயணத்தின் போது உயிரிழந்த செய்தியை நாளிதழ்களில் பார்த்து தன் தந்தை வருத்தப்படுவதைக் கண்ட சுதர்சன், தினமும் மாலையில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையுடன் பேருந்து நிலையங்களுக்குச் சென்று படிக்கட்டு பயணம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் கிளம்பும் போது, கையில் 'படியில் பயணம்... நொடியில் மரணம்!' என்ற பதாகையுடன் நின்றுக் கொண்டு, ``தாய், தந்தையை நினை... படிக்கட்டு பயணத்தை மற!" எனத் தன் தந்தையுடன் உரக்கமாக முழங்கும் சிறுவன் சுதர்சனை பெரியார் பேருந்து நிலையமே வியப்புடன் திரும்பிப் பார்க்கிறது.

கள விழிப்பு உணர்வு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களை பயன்படுத்தியும் சுதர்சன் விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிறுவன் சுதர்சனின் விழிப்பு உணர்வு வீடியோ மதுரை வட்டாரத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.