அலசல்
Published:Updated:

“எனக்குக் கொசுக்கடி பழகிருச்சு...” - கைவிடப்பட்டாரா சுதாகரன்?

சுதாகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுதாகரன்

சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த அவர் திருமணம் செய்திருக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் சில முயற்சிகள் செய்தார்கள்.

கடந்த 1995, செப்டம்பர் 7-ம் தேதி நடந்த சுதாகரனின் ஆடம்பர திருமணத்தை மறக்க முடியுமா? அந்த வைபவத்தை முன்னின்று பிரமாண்டமாக நடத்திவைத்தார் ஜெயலலிதா. அந்தத் திருமணத்துக்கு அன்றைய தேதியில் நூறு கோடி ரூபாய் செலவானதாக நாடே வாய் பிளந்தது. கூடவே, ஜெயலலிதா - சசிகலா மீதும் விழுந்தது ஆடம்பர கரும்புள்ளி. அதன் பிறகு ‘சின்ன எம்.ஜி.ஆர்’ என்ற அடைமொழியுடன் ஆதரவாளர்கள் புடைசூழ பவனிவந்தவர் சுதாகரன். இப்படி கோடிகளில் புரண்ட சுதாகரன்தான், இன்று கவனிப்பாரற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு சுவர்களுக்குள் விரக்தியுடன் நாள்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார். அதேசிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவும் இளவரசியும் அடுத்தடுத்து விடுதலையாகி, வழி நெடுகிலும் பிரமாண்ட வரவேற்போடு, பிப்ரவரி 8-ம் தேதி தமிழகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால், சுதாகரன் மட்டும் தன் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயைப் புரட்ட முடியாமல், தவித்துவருகிறார்.

“எனக்குக் கொசுக்கடி பழகிருச்சு...” - கைவிடப்பட்டாரா சுதாகரன்?

சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். இரண்டாவது பிள்ளையான சுதாகரனுடன் உடன்பிறந்த சகோதரர் டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க பொதுச்செயலாளராக இருக்கிறார். மற்றொரு சகோதரர் பாஸ்கரன் நடிகராகவும், சகோதரி ஸ்ரீதலாதேவி தொழிலதிபராகவும் இருக்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதிலிருந்தே தன் சகோதரர்களுடன் தொடர்பில்லாமல்தான் சுதாகரன் இருந்திருக்கிறார். சிறையில்கூட சசிகலா, இளவரசி ஆகியோருடன் சுதாகரன் சரியாகப் பேசிக்கொள்ளவில்லையாம். இந்தச் சூழலில், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த மன்னார்குடி உறவுகள் யாரும் முன்வராததால், விரக்தியின் விளிம்பில் சுதாகரன் தத்தளிப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சுதாகரனின் உறவு வட்டாரங்களில் பேசினோம். ‘‘சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த அவர் திருமணம் செய்திருக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் சில முயற்சிகள் செய்தார்கள். ஆனால், அவர்களாலும் பணத்தைப் புரட்ட முடியவில்லை. கடைசியாக சுதாகரனின் அப்பா விவேகானந்தன்தான் அவருக்காகப் பணம் ஏற்பாடு செய்ய முட்டிமோதி வருகிறார். பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி இருந்த நாள்களில் மன்னார்குடி உறவுகள் பலரும் வந்து சந்தித்துப் பேசினார்கள். ஆனால், அப்போது யாரும் சுதாகரனைச் சந்திக்க விரும்பவில்லை. அவரது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சில சிறைக் காவலர்கள்தான், சுதாகரனின் உறவுகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னரே, சுதாகரனின் குடும்பத்தினர் வந்து பார்த்தார்கள்.

“எனக்குக் கொசுக்கடி பழகிருச்சு...” - கைவிடப்பட்டாரா சுதாகரன்?

ஒருகாலத்தில் வெள்ளை வெளேரென உடை உடுத்திக்கொண்டு, ‘சின்ன எம்.ஜி.ஆர்’ அடையாளத்துடன் பவனி வந்த சுதாகரன், சிறைச்சாலைக்குள் முற்றும் துறந்த மனநிலையில் இருக்கிறார். நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, சாமி படத்தின் முன்பாக கண்களை மூடி தியானிப்பதே அவரது வாடிக்கையாகிவிட்டது. யாருடனும் பேசுவதையும் அவர் விரும்புவதில்லை. சிறையில் அளிக்கப்படும் உணவையே உண்கிறார். தனக்காக ஸ்பெஷல் உணவு எதையும் அவர் கேட்பதில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாக, தன் குடும்பத்துக்கு ஒரு பண நெருக்கடி ஏற்பட்டபோது, யாரும் கைகொடுக்க முன்வரவில்லை என்ற ஆதங்கம் அவர் மனதில் குடிகொண்டிருக்கிறது. இதனால், உறவுகளிடம் பற்றற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார்.

1996 முதல் 2017 வரை, சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கெனவே 92 நாள்களைச் சிறையில் அனுபவித்துவிட்டதால், டிசம்பர் 17-ம் தேதியே அவர் விடுதலையாகி இருக்க முடியும். ஆனால், அபராதத் தொகை செலுத்தாததால் அவரால் விடுதலை பெற முடியவில்லை. சமீபத்தில் மன்னார்குடி உறவினர் ஒருவர் சுதாகரனைச் சந்தித்தபோது, ‘பணம் கட்டாவிட்டாலும் பரவாயில்லை. எனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம். இத்தனை வருஷம் இந்தக் கொசுக்கடில இருந்துட்டேன், எனக்குப் பழகிருச்சு. இன்னும் நாலைஞ்சு மாசம்தானே... அபராதத் தொகை புரட்ட வேண்டாம். அபராதத்துக்கு பதிலா விதிக்கப்பட்ட ஒரு வருடச் சிறை தண்டனையையும் முழுசா அனுபவிச்சுட்டே வந்துடுறேன். யாரையும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க’ என்று சொல்லிருக்கிறார். அவரைக் கைதூக்கிவிட ஆள்தான் இல்லை’’ என்றார்கள்.

சுதாகரனின் விரக்தி, சசிகலாவின் காதுகளுக்கும் எட்டியிருக்கிறதாம். சென்னைக்கு வந்து செட்டிலான பிறகு பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக சுதாகரன் குடும்பத்தினருக்கு சசிகலா உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.

சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் முன்னணி வி.ஐ.பி-க்கள் அனைவரும் அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட பிரமாண்ட திருமணத்தின் மாப்பிள்ளை, இன்று நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருக்கிறார். அபராதத்தைக் கட்டினால் நீதிமன்றமே அவரை விடுதலை செய்யத் தயாராக இருந்தாலும், உறவுகள் அவர் முன்னே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன.