பிரீமியம் இல்லாத பென்ஷன்... நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000... இயற்கை வேளாண்மைக்கு ரூ.10,000 கோடி

மத்திய, மாநில பட்ஜெட் பரிந்துரைகள்
வரும் ஆண்டுக்கான மத்திய-மாநில பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. வேளாண்மை சம்பந்தமாக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் மத்திய நிதியமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில், வேளாண்மைத் துறைக்கான தேவைகள், மாற்றங்கள், முக்கியத்துவம் தரப்படவேண்டிய விஷயங்கள் பற்றியெல்லாம் அரசாங்கங்களுக்கு விவசாயிகள்மூலம் எடுத்துச் செல்வதற்காக, ‘மத்திய-மாநில பட்ஜெட் 2020-21, வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்’ என்ற தலைப்பில் பசுமை விகடன் சார்பில் முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, மெட்ரோ மேனர் ஹோட்டலில் நவம்பர் 27-ம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், பொருளாதாரம் ஆகிய துறைகள் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
நிபுணர்களின் கருத்துகளிலிருந்து...
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி: ``28 பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், மூன்று பொருள்களுக்குமேல் விலை நிர்ணயம் செய்யவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி, உற்பத்திச் செலவோடு 50 சதவிகித விலையைக் கூட்டி நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்சம் பாலுக்காவது அறிக்கை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன் `ஒரு ஏக்கருக்கான நெல் உற்பத்திச் செலவு 1,900 ரூபாய்’ என்றது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஆனால், அரசு இப்போதும் 1,800 ரூபாய் வரைதான் கொடுக்கிறது. இது போதாது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும்.’’
பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து: ``இந்தியாவில் 12 மாநிலங்களில் இயற்கை வேளாண் கொள்கை இருக்கிறது. அதனால், இயற்கை வேளாண் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்து, அதற்கென ஒவ்வோர் ஆண்டும் 10,000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். இயற்கை விவசாயம் சம்பந்தமாக முன்னெடுக்கும் திட்டங்களுக்கு, இதைப் பயன்படுத்த வேண்டும்.’’


தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம்: ``விவசாயத்தில் உத்தரவாதமான வருமானம் இல்லை. விலை உயர்ந்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால், விளைபொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு. இதைத் தளர்த்த வேண்டும். குறிப்பாக, குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒரு திட்டமாக இருக்கிறது. அதைச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும்.’’
தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம்: ``இந்தியாவில் உள்ள 328 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில், நிகர சாகுபடி பரப்பளவு 141 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே. இவற்றில் 68 மில்லியன் ஹெக்டேர் இறவைச் சாகுபடி நிலங்கள். அதிலும் 45 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் நிலத்தடிநீரை நம்பி இருக்கின்றன. இந்தியாவில் 6.4 லட்சம் கிராமங்களில் 1.5 லட்சம் கிராமங்களை நகரங்கள் விழுங்கிவிட்டன. மீதி இருக்கும் ஐந்து லட்சம் கிராமங்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நுண்ணிய அளவில் திட்டமிடல் மற்றும் செயலாக்கம்மூலம் பசுமை கிராமங்களை உருவாக்க வேண்டும். இதன்மூலம் 2030-க்குள் இந்தியாவில் தன்னிறைவான கிராமங்கள் உருவாகிவிடும்.’’


மூத்த பொறியாளர் வீரப்பன்: ``தெலங்கானாவில் `ஜலயக்ஞம்’ என்ற பெயரில் 1,86,000 கோடி ரூபாயை ஒதுக்கி ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிப்பதற்கான மிகப்பெரிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி மத்திய அரசும் நாடு தழுவிய அளவில் ஆக்கபூர்வமான திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தமிழக அரசு கடந்த 25 ஆண்டுகளில் 7,000 கோடி ரூபாயைத்தான் நீர்நிலை மேம்பாட்டுக்கு என ஒதுக்கியிருக்கிறது. நிலத்தடிநீர் வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், ஆறுகளில் மணல் எடுப்பதை முற்றிலும் தடைசெய்ய சட்டம் இயற்ற வேண்டும். நிலத்தடிநீரைச் செறிவூட்ட திட்டம் கொண்டுவர வேண்டும்.’’
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்: ``60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளால் வேலைசெய்ய இயலாது. அதனால் ஓய்வூதியம் அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே பிரதமர் ஓய்வூதியத் திட்டம் இருக்கிறது. ஆனால், அது பிரீமியம் கட்டுவது போன்று இருக்கிறது. அதை மாற்றி, 58 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.’’

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பூவுலகு சுந்தர்ராஜன்: ``இந்தியாவுக்கு, சரியான காலநிலை மாதிரி (Climate Model) கிடையாது. எல்லாம் ஐரோப்பா, ஆஸ்திரேலியா மாடலில்தான் இருக்கின்றன. மத்திய அரசு உருவாக்கும் ஆக்ஷன் பிளான்களில் கடல்மட்டம் உயர்ந்தால், எந்தெந்தப் பகுதி பாதிக்கும் என்ற தகவல்கூட கிடையாது. நிலக்கரியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்காக நேஷனல் கிரீன் எனர்ஜிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 60,000 கோடி ரூபாய், வேறு விஷயங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்படி, சுற்றுச்சூழலுக்காக ஒதுக்கப்படும் நிதியெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.’’
ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி: ``இன்னின்ன நிலங்களில் இந்தப் பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும் என பயிர்வாரி முறைக்குச் சட்டம் இயற்றினால்தான் இருக்கும் நிலங்களைக் காப்பாற்ற முடியும்; தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து மீள முடியும். குடிநீரின் அவசியத்தைக் கணக்கில்கொண்டு விவசாயத்துக்கு ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதைக் குறைக்க வேண்டும். பூமியில் நிலத்தடிநீர் குறையாமல் இருக்க, சட்டம் இயற்ற வேண்டும்.’’
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா: ``மரபு விதைகளைக் காக்க, மரபு விதைக் கூடங்கள் அமைக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மரணங்களைத் தவிர்க்க பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாயத் தொழிலாளர் களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். நாட்டின மாடுகளைப் பெருக்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.’’
பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், வேளாண் ஏற்றுமதியாளர் கமாலுதீன், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஆலோசகர் ராம சுப்ரமணியன், வழக்கறிஞர் சிவக்குமார் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். இது தொடர்பான கருத்துகளை மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமை விகடன் சார்பில் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.