Election bannerElection banner
Published:Updated:

போக்சோ: `பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' - உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் எதிர்வினையும்!

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ( Representational Image )

பாலியல் வன்கொடுமை செய்தவரிடமே, `பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

`பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' - பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி இது. உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பிரபலங்கள் பலரும் இந்தக் கேள்விக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

என்ன வழக்கு?

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகித் சுபாஷ் சவான். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மின் வாரியத்தில் பணிபுரிந்துவருகிறார். 2014-ம் ஆண்டு தனது தூரத்து உறவினரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் மோகித். அந்தச் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து, சிறுமியின் கை கால்களைக் கட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். `இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது, மீறிச் சொன்னால் முகத்தில் ஆசிட் அடித்துவிடுவேன்' என்று மோகித் மிரட்டிவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது அந்தச் சிறுமி 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து 10 - 12 முறை அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் மோகித்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை
இளம்பெண் பாலியல் வன்கொடுமை
representational image
ஹாசினி போல 2017-ல் எத்தனை குழந்தைகள்  பாதிக்கப்பட்டார்கள் தெரியுமா?  #NCRBReport

மனமுடைந்த அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். மகள் தற்கொலைக்கு முயல்வதை நேரில் கண்ட தாய், தடுத்து நிறுத்தியிருக்கிறார். பின்னர் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார். அப்போது மோகித்தின் தாய், `உங்கள் பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய பிறகு எங்கள் வீட்டுக்கு மருமகளாக அவளை ஏற்றுக்கொள்கிறோம்' என்று உறுதியளித்திருக்கிறார். அதன் பிறகு புகார் அளிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார் அந்தச் சிறுமியின் தாய். ஜூன் 2018-ல் அந்தச் சிறுமி 18 வயதை அடைந்த பின்னர், `உங்கள் பெண்ணுக்கு என் மகனைத் திருமணம் செய்து வைக்க முடியாது' என மோகித்தின் தாய் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து மோகித் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் நடந்தபோது அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்பதால், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு, ஜனவரி மாதத்தில் மோகித்துக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது விசாரணை நீதிமன்றம். இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளையில் மேல்முறையீடு செய்தது சிறுமி தரப்பு. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், `போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பாலியல் வழக்கில் கீழமை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது தவறு' என்று சொல்லி முன்ஜாமீன் உத்தரவைத் தள்ளுபடி செய்தது.

நீதிபதி பாப்டே
நீதிபதி பாப்டே

மோகி தரப்பில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (மார்ச் 1) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, ``பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா?'' என்று குற்றம் சுமத்தப்பட்டவரிடம் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு. ``நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் மட்டுமே எங்களால் உங்களுக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்ய முடியும். இல்லையென்றால், நீங்கள் சிறைக்குத்தான் செல்ல வேண்டும்'' என்றும் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது.

மேலும், ``நாங்கள், உங்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம். பின்னர் நாங்கள்தான் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்லிவிடுவீர்கள்'' என்றும் தெரிவித்திருக்கிறது நீதிபதிகள் அமர்வு.

இதற்கு பதிலளித்த மோகித் சவானின் வழக்கறிஞர், ``ஏற்கெனவே மோகித் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெண் மறுத்துவிட்டார். தற்போது அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டது'' என்று கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு... கருத்துச் சுதந்திரத்துக்குக் கடிவாளம் போடுகிறதா மத்திய அரசு?

நெட்டிசன்கள், பிரபலங்களின் எதிர்க் கருத்துகள்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, பாலியல் வன்கொடுமை செய்தவரிடமே, `பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' என்று கேள்வியெழுப்பியது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

பாலிவுட் நடிகை டாப்ஸி, ``இந்தக் கேள்வியை அந்தப் பெண்ணிடம் யாராவது கேட்டார்களா... இது ஒரு கேள்வியா... இது ஒரு தீர்வா அல்லது தண்டனையா? வெறுப்பை ஏற்படுத்துகிறது'' என்று பதிவிட்டிருந்தார்.

டாப்ஸி
டாப்ஸி
இந்தக் கேள்வி தலைமை நீதிபதியிடமிருந்து வருகிறது என்றால், ஒரு தேசமாக நாம் மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறோம்.
அலோக் தேஷ்பாண்டே, பத்திரிகையாளர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாடகியும் இசையமைப்பாளருமான சோனா மொஹாபத்ரா (Sona Mohapatra), ``இந்தக் கேள்வி மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தவரையே மணந்து கொள்வதென்பது கடந்த காலங்களில் வெளியான பாலிவுட் சினிமாக்களில் வரும் ஒரு வெறுக்கத்தக்கத் தீர்வாக இருந்தது. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் எவ்வாறு இப்படிக் கேள்வியெழுப்பலாம்?'' என்று பதிவிட்டிருந்தார்.

சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அபர்ணா ஜெயின், ``பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கே திருமணம் செய்துவைப்பதை நிறுத்துங்கள். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்குங்கள்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ரிஹானா பற்றவைத்த தீ; கிரிக்கெட்டர்களுக்கு டாப்ஸியின் பதிலடி; பிசிசிஐ அழுத்தம் - என்ன நடக்கிறது?

நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதில், ``உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், `உங்களுக்கு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்யுங்கள்' என்கிறது. அந்தக் கால பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்குவதுபோல உச்ச நீதிமன்ற அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி ஏற்புடையதல்ல. பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரிடம், கனிவான போக்கைக் காட்டுவது நீதிமன்றத்துக்கு அழகல்ல'' என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு