அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

‘தலையாட்டி’ தேர்தல் ஆணையம்... தடாலடி உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
உச்ச நீதிமன்றம்

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்குக் குறுகியகாலமே பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது

ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் முன்வைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அதிரடியான கேள்விகளையும், காட்டமான விமர்சனங்களையும் உச்ச நீதிமன்றம் முன்வைத்திருக்கிறது.

‘தலையாட்டி’ தேர்தல் ஆணையம்... தடாலடி உச்ச நீதிமன்றம்

நியமனத்தில் புதிய முறை தேவை!

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்த பரிந்துரையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், மத்திய அரசுக்கு அளிக்கிறது. அதன் அடிப்படையில், நீதிபதிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அதேபோல, தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு ஒரு முறையை ஏற்படுத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்துவருகிறது. கடந்த நவம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது, சீரியஸான பல கருத்துகளை உச்ச நீதிமன்றம் முன்வைத்தது.

“தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், சட்டப்படி ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அந்தப் பதவியை வகிக்கலாம். ஆனால், 2004-ம் ஆண்டிலிருந்து எந்தவொரு தலைமைத் தேர்தல் ஆணையரும் ஆறு ஆண்டுகள் என்ற அளவில் பதவி வகிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் ஆறு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் இருந்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எட்டாண்டு ஆட்சிக்காலத்தில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்குக் குறுகியகாலமே பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, தேர்தல் ஆணையர் நியமனத்தில் தற்போது பின்பற்றப்படும் முறைக்கு பதிலாக, வேறொரு முறை தேவைப்படுகிறது” என்று நீதிபதிகள் கூறினர்.

‘தலையாட்டி’ தேர்தல் ஆணையம்... தடாலடி உச்ச நீதிமன்றம்

அதிக தவறுகள் நடக்கின்றன!

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் எம்.ஜி.தேவசகாயத்திடம் பேசினோம்.

“கடந்தகாலத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தில் பல தவறுகள் நடந்திருக்கின்றன. சமீபகாலமாக, அதிகமான தவறுகள் தேர்தல் ஆணையத்தில் நடக்கின்றன. தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பல தலைமைத் தேர்தல் ஆணையர்களுடன் சேர்ந்து செயல்பட்ட அனுபவம் எனக்கு உண்டு. 2004-ம் ஆண்டு, தலைமைத் தேர்தல் ஆணையராக டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இருந்தபோது, வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகங்களைத் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இரண்டே வாரங்களில் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எனக்கு பதில் கடிதம் வந்தது. அதில் அவர் தெரிவித்திருந்த விளக்கங்கள் எனக்கு திருப்தியாக இருந்தன.

தலைமைத் தேர்தல் ஆணையராக டி.ஒய்.குரேஷி இருந்தபோது, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அது தொடர்பான பிரச்னைகள் குறித்து அவருக்குத் தெரிவித்தேன். உடனே என்னை டெல்லிக்கு வரச்சொல்லி விவாதித்தார். அந்தப் பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்பட்டன. 2018-ம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையராக ராவத் இருந்தபோது, ஒரு பிரச்னையை அவரிடம் கொண்டு சென்றேன். அவரும் ஆர்வத்துடன் அழைத்துப் பேசினார். ஆனால், 2019-க்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மின்னணு வாக்கு இயந்திரம், வி.வி.ஐ பேட் தொடர்பான பிரச்னை குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் சேர்ந்து கடிதம் எழுதினோம். எந்த பதிலும் இல்லை. இதுபோல, பல பிரச்னைகள் குறித்து நாங்கள் எழுதிய கடிதங்களுக்குத் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒரு பதில்கூட வரவில்லை. இந்தப் போக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது” என்றார் எம்.ஜி.தேவசகாயம்.

எம்.ஜி.தேவசகாயம், டி.என்.சேஷன்
எம்.ஜி.தேவசகாயம், டி.என்.சேஷன்

ஆணையர் நியமனத்தில் சர்ச்சை!

தற்போது, தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டுவரும் நேரத்தில், தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டார். அது, சர்ச்சையாக மாறியிருக்கிறது. நவம்பர் 17 வரை மத்திய அரசுத் துறையில் செயலாளராக இருந்த அருண் கோயல், நவம்பர் 18-ல் விருப்ப ஓய்வுபெற்றார். நவம்பர் 19-ம் தேதி தேர்தல் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார். இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் இந்த நேரத்தில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் பற்றி உச்ச நீதிமன்றம் நினைவுகூர்ந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் எவ்வளவு அதிகாரம் மிகுந்த அமைப்பு என்பதை நிரூபித்துக்காட்டியவர் அவர். தேர்தலின்போது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது போன்ற அராஜகங்களுக்கு முடிவுகட்டியவர் டி.என்.சேஷன். 1990 முதல் 1996 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்த காலத்தில் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல்கள் நடைபெறுவதை அவர் உறுதிசெய்தார். இன்றைக்கு, தேர்தல் ஆணையத்தின் நிலை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கு ஆடுகிற ஒரு பொம்மைபோல தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. எனவேதான், தேர்தல் ஆணையர்கள் நியமன முறையில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கின்றன.

இந்த வழக்கில், முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.