சிரியாவில் அரபு எரிவாயுக்குழாய் வெடிப்பின் காரணமாக அந்நாடு முழுவதும் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான இக்பாரியா டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், எரிவாயுக்குழாய் வெடிப்பைத் தொடர்ந்து, வானத்தை நோக்கிப் பெரும் ஜுவாலை எழும் காட்சிகள் தொடர்ந்து காட்டப்பட்டுவருகின்றன. இந்த வெடி விபத்து குறித்து சிரியாவின் எரிசக்தித்துறை அமைச்சர் கூறுகையில், ``அரபு எரிவாயுக்குழாய் வெடிப்பால் சிரியா மின்சாரமில்லாமல் இருண்டிருக்கிறது. இது அரசுக்கெதிரான கிளர்ச்சியாளர்களின் தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

எகிப்திலிந்து ஜோர்டன் வழியாக சிரியா வரை அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயுக்குழாய் அமைப்பு, `அரபு எரிவாயுக்குழாய்’ என்று அழைக்கப்படுகிறது. இக்பாரியா டி.வி-யில் வெடி விபத்து குறித்துப் பேசிய பெட்ரோலிய மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் அலி கானெம் (Ali Ghanem), இதை `ஒரு பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த எரிவாயுக்குழாய் இணைப்பு, சிரியாவின் தென்பகுதிகளிலுள்ள மின் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கிவந்தது. நிலைமையைச் சீராக்க, ஏற்கெனவே தொழில்நுட்பக்குழுவினர் களத்தில் செயலாற்றிவருவதாகக் கூறினார். இது குறித்து பேசியிருக்கும் சிரிய மின்சாரத்துறை அமைச்சர் முகமது கர்பௌட்லி, ``தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதி வழியாகச் செல்லும் எரிவாயுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் வெடிவிபத்தால் சிரியா முழுவதும் மின்சார வசதி தடைப்பட்டுள்ளது. அல்துமாயிர் மற்றும் அட்ரா பகுதிகளுக்கு இடையிலான ஓரிடத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பால் மின் உற்பத்தி நிலையங்களுக்குச் செல்லும் எரிவாயுவைக் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவற்றில் சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு மீண்டும் இணைப்புக் கொடுக்கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சில மாகாணங்களில் உடனடியாக மின்வசதியைத் திரும்பக் கொடுக்கும் வேலைகளிலும் அரசு ஈடுபட்டுவருகிறது. மக்களுக்கு மின்வசதியைக் கொடுப்பதுதான் உடனடித் தேவை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் எரிவாயுக்குழாய் மீது நிகழ்த்திய தாக்குதலால் சிரியாவில் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.