Published:Updated:

தைவான்: உலகத்தின் மிக அபாயகரமான பகுதி... நாடுகளின் கதை - 6

நாடுகளின் கதை - 6 | தைவான் | Taiwan
News
நாடுகளின் கதை - 6 | தைவான் | Taiwan

ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் என எல்லா சர்வதேச அமைப்புகளும் தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கின்றன. சீனா இன்றளவும் தன் நாட்டின் ஒரு மாகாணம்தான் Taiwan என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:

தைவான்: உலகத்தின் மிக அபாயகரமான பகுதி... நாடுகளின் கதை - 6

ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் என எல்லா சர்வதேச அமைப்புகளும் தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கின்றன. சீனா இன்றளவும் தன் நாட்டின் ஒரு மாகாணம்தான் Taiwan என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

நாடுகளின் கதை - 6 | தைவான் | Taiwan
News
நாடுகளின் கதை - 6 | தைவான் | Taiwan

உலகின் எல்லா நாடுகளையும் இன்றைய தேதியில் நடுநடுங்க வைக்கும் ஒற்றைச் சொல் கொரோனா... மனிதன் மீது இயற்கை தொடுத்திருக்கும் போர் கொரோனா... இந்த நூற்றாண்டின் பெருந்துயரம் கொரோனா...

சரி, இந்தக் கொரோனாவை நாம் கட்டுப்படுத்தியிருக்கவே முடியாதா? தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு. 'களையை முளையிலே கிள்ளியெறிய வேண்டும்' என்று. ஆம், சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா என்ற களை முளைக்கத் தொடங்கும்போதே கிள்ளியெறிந்திருக்க வேண்டும். அப்படியொரு செயலைத் தான், செய்ய முற்பட்டது ஒரு நாடு. அப்படியா! எந்த நாடு? ஏன் அதைச் செய்யவில்லை? என்ற கேள்விகள் எழலாம்.

அந்த நாடு, தைவான்!
தைவான் | Taiwan
தைவான் | Taiwan

2019 டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் ஆரம்பிக்கும் போதே உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒரு புதிய வைரஸ் பரவுகிறது என எச்சரித்தது தைவான். ஆனால், WHO அதைக் கண்டுகொள்ளவில்லை. 'ஏன்' என்று நீங்கள் கேட்பதற்கு முன்னால் ஒன்றைச் சொல்கிறேன்...

ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் என எல்லா சர்வதேச அமைப்புகளும் தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கின்றன. சீனா இன்றளவும் தன் நாட்டின் ஒரு மாகாணம்தான் தைவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால், சிறப்பு அந்தஸ்து கொடுத்து பல உலக அமைப்புகளில் தைவானை ஒதுக்கியே வைத்திருக்கின்றன.

சரி, 'நல்லதை யார் சொன்னால் என்ன? WHO நடவடிக்கை எடுத்திருக்கலாமே' என்று தோன்றுகிறதா?! அனைத்திற்கும் காரணம் சீனாவின் சர்வதேச பலம். WHO சீனாவின் வர்த்தக நலனைக் கருத்தில் கொண்டு இதை கண்டுகொள்ளாமல் விட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

வரலாறுகள் நமக்கு பல்வேறு பாடங்களைப் புகட்டினாலும், காலம் கடந்த செயல் பயனற்றதுதான். அந்த வகையில், கொரோனா இப்போது உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவையும்தான்!

அப்படியென்ன கோபம் தைவான் மீது சீனாவிற்கு?! வரலாற்றின் பக்கங்களைத் திருப்புவோம்

தைவான் | Taiwan
தைவான் | Taiwan

சீனாவின் கடற்கரையிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடுதான் தைவான். 36 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்நாட்டின் தலைநகரம் தைபே. இந்தத் தீவிற்கு ஃபர்மோசா (Formosa) என்ற பெயரும் உண்டு. அப்படியென்றால் 'அழகிய தீவு' என்று அர்த்தம். குயிங் (Qing) அரச வம்சத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது தைவான். 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் காலனி நாடாக ஆனது தைவான். அந்த நேரத்தில் சீனாவிலிருந்து தைவானுக்குப் பெருமளவில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்ற போரில் சீனா தோல்வியடைந்ததும் 1895ல் இந்தத் தீவு ஜப்பானின் கைவசம் சென்றது. சீனாவில் நடைபெற்ற ராணுவ மற்றும் குடியரசு ஆட்சிக்கு எதிராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாவோ தலைமையில் புரட்சியை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக 1949-ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி (Communist party of China- CPC)யின் கட்டுப்பாட்டில் சீனா வந்தது. போரில் தோற்றுப் பின்வாங்கி தைவானுக்குச் சென்ற சீனாவின் ஆட்சியாளர் சியாங் கே சேக், தைவானில் சீன மக்கள் குடியரசை (People's Republic of China) நிறுவினார். க்யூமிண்டாங் கட்சியின் தலைவராக இருந்த அவர், தைவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளை ஆட்சி செய்தார். 'உண்மையான சீனா இதுதான்' என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்காவின் ஆதரவும் தைவான் பக்கம் இருந்தது. அதனால் ஐ.நா சபை உள்ளிட்ட அமைப்புகளில் தைவானே நிஜமான சீனாவாக கருதப்பட்டு இடம்பிடித்து வந்தது. ஆனால், உலகின் 'அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டைப் புறக்கணிப்பது சரியல்ல' என உலக நாடுகள் நினைத்தன. இதைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு ஐ.நா சபை தைவானின் இடத்தை சீனாவிற்கு வழங்கியது. அதன்பின் தைவான் தனிநாடு என்ற அங்கீகாரத்தை இழந்தது. 1975ல் சியாங் கே சேக்கும் மரணமடைய, கொஞ்சம்கொஞ்சமாக க்யூமிண்டாங் ஆட்சி முடிவுக்கு வந்தது. ராணுவ ஆட்சியின் இறுக்கம் தளர்ந்து, அங்கு ஜனநாயகம் மலர்ந்தது.

ஆனால், சீனாவுடனான சண்டை மட்டும் இன்றுவரை தொடர்கிறது. தைவான் தான், தனி நாடு என்கிறது. சீனாவோ அது தன் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சீனாவில் சென்று தைவான் ஒரு தனி நாடு என்று நீங்கள் வாய்திறந்து சொல்லிவிடக் கூடாது. உடனே கைதுதான். அவ்வளவு உச்சப் பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது.

தைவான் | Taiwan
தைவான் | Taiwan

சீனாவிற்கு ஆதரவான சில சர்வதேச அமைப்புகள் தைவானுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லையென்றாலும், அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் தைவான் பக்கம் இருக்கிறது. தன் எதிரியின் எதிரி தனக்கு நண்பன் என்ற கதைதான்! தைவானும், சீனாவை எதிர்க்க தயாராகவே இருக்கிறது.

தைவான் பிரச்னை, சீனாவில், உய்குர் இன முஸ்லிம்கள் விவகாரம் என சீனப் பிரச்னையில் அமெரிக்கா தலையிட 'நெருப்புடன் விளையாட வேண்டாம்' என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தைவானை இந்தியா ஆதரிக்க வேண்டுமா?!

இந்தியா தைவானை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு முன், தைவான் இந்தியாவை எவ்வளவு ஆதரிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். தைவான் நாட்டின் பிரதமராக இருக்கும் சாய் இங் வென் 'நல்ல மனம் படைத்த இந்தியர்களையும், இந்திய உணவுகளையும் எப்போதும் மறக்க முடியாது' என்று சமீபத்தில் கூறியிருந்தார். கூறியது போன்றே இந்த கொரோனா மாறுபட்ட அலையில் இந்தியா கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது இந்தியாவிற்கு உதவத் தயார் என ஆதரவுக்கரமும் நீட்டியிருக்கிறார். சீனாவும் இந்தியாவின் எல்லைப் பகுதி விஷயத்தில் தலையிட்டுக் கொண்டிருப்பதால், தைவானை இந்தியா ஆதரிக்கத்தான் வேண்டும். (உங்கள் கருத்தையும் கமென்ட்டில் சொல்லுங்கள்)

தைவான் | Taiwan
தைவான் | Taiwan

குட்டி நாடுதானே?!

2.36 கோடி மக்கள் தைவானில் வசிக்கிறார்கள். குட்டி நாடுதானே என யோசிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உலகத்தின் முக்கியமான ஒரு கம்பெனி தைவானில்தான் இருக்கிறது. அப்படி என்ன முக்கியம்?! அந்த கம்பெனிதான் தைவானை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. அந்தக் கம்பெனியின் பெயர் TSMC (Taiwan Semiconductor Manufacturing Company, Limited).

ஒரு நாடு அதன் வளத்தின் அளவைக் கொண்டே உயர்ந்ததா, இல்லையா எனத் தீர்மானிக்கப்படுகிறது. முன்பு, தங்கம், எண்ணெய் போன்றவை பெரிய வளமாக கருதப்பட்டன. ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் மைக்ரோ சிப்கள்தான். அதைத் தயாரிக்கும் உலகின் பெரிய, முன்னணி கம்பெனி டி.எஸ்.எம்.சி (TSMC) தான். உலகின் பல நிறுவனங்களும், கம்பெனிகளும் இங்கு முதலீடு செய்திருக்கின்றனர். வருவாய் மட்டும் 1.07 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் பல லட்சம் கோடிகள். ஆப்பிள் கம்பெனியின் எல்லா சிப்களும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

தைவானில் 35% அதிகமான மக்கள் புத்த மதத்தையே பின்பற்றுகிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து வீதிகளும், முக்கிய இடங்களும் புத்த மத அடையாளத்துடன் அழகான காட்சியை வெளிப்படுத்தும்.

16 அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பழங்குடியின மக்களின் தாயகம் தைவான் ஆகும். இப்போதும் அங்கு பழங்குடியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன. நாட்டின் அதிபர் சாய் இங்வென் பழங்குடியின வம்சாவளிப் பின்னணியை கொண்டவர்தான்.

சாய் இங்வென் தீவிர முயற்சியால் கொரோனாவை மிகவும் திறம்பட கையாண்ட நாடாக தைவான் மாறியது. கொரோனா தாக்கம் ஆரம்பித்த அடுத்த ஒரு மாதத்தில் கடுமையான நடவடிக்கை, அனைவருக்கும் முகக்கவசம் என அதிரடி காட்டத் தொடங்கினார் சாய் இங்வென். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி சீனாவிற்கு அருகிலிருக்கும், சீனாவுடைய பகுதி எனச் சொல்லப்படும் நாடு கொரோனாவை வென்றதே ஆச்சர்யத்தில் ஆச்சர்யம்.

சீனா
சீனா

இப்படிப்பட்ட நாட்டையா, தலைப்பில் மிக அபாயகரமான நாடு எனக் குறிப்பிட்டீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. The Economist செய்தி நிறுவனம் 'The Most Dangerous Place in the Earth' என இந்நாட்டைச் சொல்லியிருக்கிறது. காரணம் முன்பு கூறியது போன்றே அமெரிக்கா, சீனா பிரச்னைக்கு முக்கிய காரணமாக தைவான் இருப்பது போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறது. ஜப்பானுக்கு அடுத்து தைவான்தான் இரண்டாவது பாதுகாப்பான நாடு என்று சிலர் கருத்துப்பதிவிட்டு வருகிறார்கள்.

தைவானை தனி நாடு இல்லை என்று சொல்பவர்களுக்கும், சீனாவின் அங்கம்தான் என்று சொல்பவர்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன்.

”போர் பற்றியது அல்ல சோறு பற்றியது.”

தைவான் உணவு | Taiwan Food
தைவான் உணவு | Taiwan Food

உணவுப்பிரியர்களுக்கு தைவான் ஒரு சிறந்த இடம். தைவானின் தெருவோர உணவு வகைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. முட்டை, மாவில் செய்யும் பல வித்தியாசமான உணவுகள் தனித்துவமானவை. சீனர்கள் போல ஊர்வன, பறப்பன என இல்லாவிட்டாலும், ஆக்டோபஸ், பாம்பு, நண்டு, பன்றி போன்ற உணவுகளை மக்கள் விரும்பி உண்கிறார்கள். சரி, தைவான் சென்றால் அங்குள்ள உணவை ருசி பார்த்துச் சொல்லுங்கள்!

(பயணிப்போம்)