ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ளவேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் வெளியில் செல்லக்கூடாது உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை ஆட்சிக்கு வந்தகையோடு தாலிபன்கள் விதித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து அண்மையில், 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்கவும் தாலிபன்கள் தடை விதித்தனர். போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தாலிபன்கள் விளக்கம் அளித்திருந்தனர். இப்படியாக பெண்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்களை அவர்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதை தாலிபன்கள் நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் காபூல் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய நகரங்களில் வாகனம் ஓட்டுவதைக் காணலாம். இருப்பினும், தாலிபன்கள் தற்போது பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பணிக்குச் செல்லும் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.